இரண்டரை ஆண்டு கால சிக்கல் – இரண்டே நாளில் குடிநீர் இணைப்பு வழங்கி திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி ! அங்குசம் செய்தி எதிரொலி :
செய்தி வெளியிட்டு பொது வெளியில் மாவட்ட நிர்வாகத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார்கள் என்று கருதாமல், அங்குசம் இணையத்தில் வெளியான செய்திக்கு உரிய முக்கியத்துவம் வழங்கி...
அங்குசம் செய்தி எதிரொலி :
திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுக்கா, உசிலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொன்முச்சந்தி கிராமத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்க மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து ”அரசு அதிகாரிகள் உத்தரவுகளை குப்பையில் வீசி, குடிநீர் இணைப்பு தர மறுக்கும் ஊராட்சி தலைவர் !” என்ற தலைப்பில் அங்குசம் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இணையத்தில் செய்தி வெளியானதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் அவர்களே நேரடியாக தலையிட்டு சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளுக்கு அப்பிரச்சினையை உடன் சரிசெய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கே சென்று குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.
மேலும், சௌ.கங்காதாரிணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), திருச்சிராப்பள்ளி அவர்களும் நேரடியாகவே சென்று குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறார். செய்தி வெளியான இரண்டாவது நாளே புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வீட்டுவரி ரசீது வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகளை உடன் செய்வதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
செய்தி வெளியிட்டு பொது வெளியில் மாவட்ட நிர்வாகத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார்கள் என்று கருதாமல், அங்குசம் இணையத்தில் வெளியான செய்திக்கு உரிய முக்கியத்துவம் வழங்கி அதிகாரிகளை முடுக்கிவிட்டு பிரச்சினையை உடன் தீர்த்து வைத்த மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் மற்றும் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சௌ.கங்காதாரிணி அவர்களுக்கும் அங்குசம் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்றாடம் அலுவல் கோப்புகளை பார்த்தாக வேண்டும்; அவசியமான கள ஆய்வுக்கும் சென்றாக வேண்டும்; ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகத்தை திறம்பட வழிநடத்தியாக வேண்டும்; அவ்வப்போது இதுபோன்று எதிர்படும் ‘தலைவலி’களையும் எதிர்கொண்டாக வேண்டும் என்ற நெருக்கடிகளோடுதான், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பணிச்சூழல் அமைந்திருக்கிறது என்பதை அங்குசம் அறியாதவை அல்ல!
குறிப்பாக இந்த வழக்கை எடுத்துக் கொண்டால்கூட, ஒரு குடிநீர் இணைப்பு பெறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் அலைய நேர்ந்தது நிச்சயம் கொடுமையான தண்டனை. செய்தி வெளியிட்டோம் அடுத்த நாளே குடிநீர் இணைப்பும் வழங்கிவிட்டார்கள் என்று மகிழ்வதற்கு இடமில்லை.
ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உத்தரவிடும் அனைத்து உத்தரவுகளும் உரிய முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா? என்பதை அவை ஒவ்வொன்றையும் களஆய்வு செய்து உறுதிபடுத்துவது என்பதும் சாத்தியமற்றவை.
இப்பிரச்சினையோடு தொடர்புடைய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டும் அதனை நிறைவேற்றும் நேரடி பொறுப்பில் உள்ள ஊராட்சி மன்றத்தலைவரின் தான்தோன்றித்தனமான செயல்பாடும் இதனை பலமுறை முறையிட்டும் அதனை புறக்கணித்த வட்டார வளர்ச்சி அலுவலரின் அலட்சியமும் ’கவனிக்க’த்தக்கவை.
மாவட்ட நிர்வாகம் இது தொடர்பான உரிய விசாரணையை மேற்கொண்டு உரிய முறையில் இப்பிரச்சினையை அணுகுவதன் வழியே, எதிர்காலத்தில் இன்னொரு கிராமத்தில் இதேபோன்றதொரு அலட்சியமும் அலைக்கழிப்பும் நேர்ந்திடாதிருப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறோம்.
ஆதிரன்.