திருச்சி மாவட்ட காவல் உதவி எண் அறிவிப்பு ! பொதுமக்கள் நேரடியாக எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கலாம் !
திருச்சி மாவட்ட காவல் உதவி எண் அறிவிப்பு ! பொதுமக்கள் நேரடியாக எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கலாம் !
திருச்சி மாவட்டத்தின் எஸ்.பி.யாக பணியாற்றிவந்த வருண்குமார் ஐ.பி.எஸ்., டி.ஐ.ஜி.யாக பணிஉயர்வு பெற்று திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றதையடுத்து, திருச்சி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக செ.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ்., கடந்த ஜனவரி -06 ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது, திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நல்லமுறையில் பேணிகாக்கப்படும் என்றும்; ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், திருச்சி மாவட்டத்தில் சொத்து தொடர்பான வழக்குகளை விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும்; மேற்கொண்டு எவ்வித குற்றங்களும் நடைபெறாமல் இருக்கவும்; சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தார்.
மிக முக்கியமாக, காவல் துறையினரின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி, நல்லமுறையில் எவ்வித மனசோர்வு இல்லாமல் பணியாற்ற வழிவகை செய்யப்படும் என்றும், காவல் நிலையங்களில் திறன்பாடு மேம்படுத்தப்படும் என்றும் எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ்., அறிவித்திருந்தது, போலீசாரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள், பாலியல் தொடர்பான குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்சனைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் பற்றி விபரங்கள் மற்றும் தங்களது பகுதிகளில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது தொடர்பாகவும் தகவல் தெரிவிக்க திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் பொதுக்களின் உதவி மையத்தை எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் ஐ.பி.எஸ்., அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
பொதுமக்கள், 8939146100 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும், WhatsApp மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என்றும்; அவ்வாறு சட்டவிரோத செயல்கள் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலக உதவி எண் : 8939146100
அங்குசம் செய்திப்பிரிவு.