நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு . சித்திரப்பட்டி கிராமத்தில் “கருப்பு கொடி பொங்கல் “
துறையூர் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு . சித்திரப்பட்டி கிராமத்தில் “கருப்பு கொடி பொங்கல் ” அனுசரிப்பு.
திருச்சி மாவட்டம்,துறையூர் அருகே உள்ளது மதுராபுரி ஊராட்சியை சேர்ந்த குக்கிராமமான சித்திரப்பட்டி. இந்தகிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் உள்ளது.இவ் ஊரில் வசிக்கும் சுமார் 2500 பேரில் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளனர்.490 பேர் குடும்ப அட்டை வைத்துள்ளனர் .மேலும் இவ்வூரில் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.
குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் இந்த குக்கிராமத்தை ,துறையூர் நகராட்சியுடன் இணைப்பதற்கான அரசாணை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இதனை அறிந்த சித்திரப்பட்டி பொதுமக்கள் கடந்த 6-ம் தேதி ,திருச்சி மாவட்டஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு தங்கள் கிராமத்தை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினர் .

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து நகராட்சியுடன் தங்களது கிராமத்தை இணைப்பதற்கான முயற்சியை தமிழக அரசிடம் எடுத்துக் கூறி அதனைக் கைவிட வேண்டும் என கோரிக்கை மனு அளித்த நிலையில் , பொங்கல் பண்டிகையான நேற்று காலை முதல் சித்திரப்பட்டியில் உள்ள வடக்கு தெரு, தெற்குதெரு, நடுத்தெரு, மேட்டுத்தெரு, கீழ வீதி, ஆதிதிராவிடர் தெரு,கரடி பள்ளம் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் கருப்புக் கொடி கட்டி மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய பொங்கல் தினத்தை “கருப்பு பொங்கல் ” தினமாகவும் அறிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தொடர்ந்து 5 நாட்களும் சித்திரப்பட்டி கிராமத்தில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்வுகளிலும் கருப்புக் கொடி மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக கவன ஈர்ப்பு அறப்போராட்டமாக அறிவித்துள்ளனர்.
துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியின் சித்திரப்பட்டியை இணைக்கும் முயற்சியை கைவிட்டு, சித்திரப்பட்டி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தனி ஊராட்சியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும், அதற்கான அறிவிப்பு வெளியாகும் வரை, எதிர்வரும் 5 நாட்களும் தொடர்ந்து நூதன முறைகளில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்களின் அறப்போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
-ஜோஸ்