மலிவு விலையில் தங்கம் வாங்க விரும்பி ரூ.40 லட்சத்தை இழந்த திருச்சி மங்கள் & மங்கள் !
திருச்சியில் பிரபலமான வணிக நிறுவனங்களுள் ஒன்று மங்கள் & மங்கள். பாத்திர வியாபாரத்தில் தொடங்கி நகைக்கடை வரையில் நடத்தி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. இல்லாமல் குறைந்த விலையில் நகை வாங்கித்தருவதாக இவர்களிடம் ரூ.40 இலட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக இருவரை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், ‘திருச்சி தில்லை நகர் முதல் கிராஸை சேர்ந்த மூக்கன் மகன் பிரவீன்(38) என்பவர் கடந்த 16.12.2024ம் தேதி காவல் துணை ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில், தனது தந்தை மூக்கன் அவர்கள் பங்குதாரராக நடத்தி வரும் திருச்சி மங்கள் & மங்கள் நகை கடையில் முதன்மை இயக்குநராக பணிபுரிந்து வருவதாகவும், கடந்த 2021ம் ஆண்டில் மேற்படி நகை கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்த போது ஜி.எஸ்.டி அலுவலகம் சென்று வரும்போது மயிலாடுதுறையை சேர்ந்த குருசம்பத்குமார் என்பவர் தான் ஆடிட்டர் என்று அறிமுகமானதாகவும், அவரது நண்பர் பாண்டிச்சேரியை சேர்ந்த லட்சுமிநாராயணன் என்பவர் வருமான வரித்துறையில் வேலை பார்ப்பதாக கூறி அவரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேற்படி குருசம்பத்குமார் என்பவர் ஜி.எஸ்.டி சம்மந்தமான வேலைகளை பார்த்து வருவதாக உறுதி கூறியதாகவும், அதே சமயம் வங்கிகளிடம் இருந்து தங்க கட்டிகளை மார்க்கெட் விலையிலிருந்து குறைவான விலைக்கு வாங்கி தருவதாக உறுதியளித்ததின் பேரில் மேற்படி நபர்களிடம் கடந்த 2021ம் ஆண்டு ரூ.40,00,000/- (ரூபாய் நாற்பது இலட்சத்தை), சென்னை, யானைகவுனி பகுதியில் உள்ள தங்களது நிறுவன அலுவலகத்தில் வைத்து ரொக்கமாக கொடுத்ததாகவும், மேற்படி இருவரும் தங்கத்தை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும், ஏமாற்றும் நோக்குடன் காலம் கடத்தி வந்ததால் மேற்படி நபர்களிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பிரவீன் கூறியிருந்தார்.
இது குறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். யானைகவுனி காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த சம்பத்குமார் (எ) குருசம்பத்குமார் (வயது 42) (தற்போதைய முகவரி எண்.61, கோல்டன் பிளாட், கலெக்டர் நகர் மெயின் ரோடு, அண்ணாநகர் மேற்கு, சென்னை) மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் லட்சுமிநாராயணன் (வயது 46) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1 இன்னவோ கார் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும், அவர்கள் பயன்படுத்தும் சொந்த காரில் அரசுப்பணியில் இல்லாமல் “G” மற்றும் ” அ” என்ற எழுத்துக்களை பயன்படுத்தியும், தமிழ்நாடு அரசு சின்னம் பொறித்த போலியான வி.ஜ.பி. பாஸ் தயார் செய்து காரின் முன்புறத்தில் ஒட்டி பிறரை, அரசு துறையில் பணிபுரிபவர்கள் என்று நம்பவைத்து மோசடியான செயல்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’ என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.