திருச்சி மொராய்ஸ் சிட்டி ஆக்கிரமிப்பு – நீதிமன்ற தீர்ப்பு -நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளது மொராய்ஸ் சிட்டி என்ற மனைப்பிரிவு இங்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக மைக்கேல் என்பவர் திருச்சி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிழக்கு வட்டம் கொட்டப்பட்டு கிராமத்தில் Sebco Property@Morais City என்ற பெயரில் மனைப்பிரிவில் நீர்நிலை புறம்போக்கு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் இந்நிலையில் தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்தத் தீர்ப்பில், “கொட்டப்பட்டு கிராம புல எண் 226 திருச்சிராப்பள்ளி to புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மொராய்ஸ் சிட்டி என்கிற மனை பிரிவில் வார்டு-AW, பிளாக்-12, T.S.NO.-2-க்கு கட்டுப்பட்டுள்ளது. இந்த இடத்தின் பரப்பளவு 1.2550.0 ச.மீ ஆகும். மேலும் இந்த இடம் தரிசு நிலம் என்று SLR பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலம் மொராய்ஸ் சிட்டி நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அரசு புறம்போக்கு தரிசு நிலத்தில் 350 ச.மீ பரப்பளவினை ஆக்கிரமிப்பு செய்து சுமார் 3 அடி உயரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதன் மேலே புல் தரை உருவாக்கி இந்த புல் தரையின் நடுவே கிரானைட் மேடை அமைத்து அதில் ஹெலிகாப்டர்கள் தரை இறங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் இது தவிர இந்த தரிசு புறம்போக்கு நிலத்தில் 350 ச.மீ பரப்பளவிற்கு கம்பி வேலி கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மொராய்ஸ் சிட்டி நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது.