திருச்சியில் சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் மூடப்பட்ட தொழிற்சாலை 25 ஆண்டுகால போராட்டம்!

0

 

திருச்சியில் சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் மூடப்பட்ட தொழிற்சாலை 25 ஆண்டுகால போராட்டம்!

உழைப்பவன் உழைத்துக் கொண்டிருக்க, சுரண்டுபவன் சுரண்டிக் கொண்டு தான் இருப்பான் என்ற சொல்லுக்கு ஏற்ப ஆண்டாண்டு காலமாக தொழிலாளர்களை சுரண்டும் ஆதிக்க முதலாளித்துவம் ஓய்ந்தபாடில்லை. ஆனால் உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள் துவண்டு விழுந்து கொண்டே இருக்கின்றனர். இந்தச் செய்தியும் அப்படியானது.

 

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் செல்லும் பிரதான சாலை சாத்தனூர் பகுதியில் அமைந்துள்ளது சபரிமில். 1965ஆம் ஆண்டு ப.சிதம்பரத்தின் தந்தை பழனியப்ப செட்டியாரால் தொடங்கப்பட்டது சபரிமில். இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். பிறகு சபரிமில் போதர் குரூப்பிடம் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு சபரிமில் போதர் குரூப்பின் முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மேலும் அதோடு சேர்த்து கே.கே.நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலை மற்றும் அருகே உள்ள காலியிடம் கொடைக்கானலில் உள்ள இடம், நாச்சிகுறிச்சியில் உள்ள பஞ்சுமில் என 5 வகையான இடங்கள் போதர் குரூப்பிடம் விற்பனை செய்யப்பட்டது.

போதர் குரூப் கட்டுப்பாட்டின் கீழ் சபரிமலை வந்த பிறகு அனைத்தும் சர்வாதிகார போக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. லாபத்தில் ஓடிக்கொண்டிருந்த சபரி மில்லை காட்டி வங்கிகளில் பல கோடி ரூபாய் கடனை பெற்றனர். கடன் பெற்ற தொகையை கொண்டு போதர் குரூப்பிற்கு சொந்தமான மற்ற நிறுவனங்களை வளர்த்தனர். ஆனால் சபரி மில்லின் வளர்ச்சிக்காகவும், தொழிலாளர்களின் வளர்ச்சிக்காகவும் எதுவும் செய்யவில்லை, வங்கியில் கடனை சபரி மில்லின் பேரில் பெற்று மற்ற நிறுவனங்களுக்கு செலவு செய்து, சபரிமில்லை நஷ்ட கணக்கு காட்டத் தொடங்கினர்கள்.

சபரி மில் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி, மற்ற இதர தொகைகளையும் பாக்கி வைக்கத் தொடங்கினர். இதை எதிர்த்து தொழிலாளர்கள் கேட்கும் பொழுது 1996ஆம் ஆண்டு சபரிமில் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, தொழிற் சாலையை லாக்அவுட் செய்தனர், இதன்மூலம் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகப் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

500 தொழிலாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தது. சம்பள பாக்கி, பிஎஃப், கிராஜுவிட்டி போன்றவற்றை முன்வைத்து தொழிலாளர்கள் தரப்பில் நீதிமன்றம் சென்ற போது, வழக்கில் போதார் குழுமத்தினர் வென்றுவிட்டார்கள். காரணம் வழக்கறிஞரின் கவனக்குறைவே.

அதேநேரம் 2010ஆம் ஆண்டு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ,நஷ்டம் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்திற்கும் ரூ.54 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்று அறிவித்தது. அந்தத் தொகையும் இன்று வரை எங்களுக்கு கிடைக்கவில்லை. அதற்காகவும் தொடர்ந்து போராடி வருகிறோம்.

மேலும் 1966-67 அவசர நிலை பிரகடன கால கட்டத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்தார். அதனடிப்படையில் 1980ஆம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படையில் சபரிமில்லுக்கு சொந்தமான இடத்தை அரசின் தேவைக்காகவும் பொது நலனுக்காகவும் குறிப்பிட்ட நிலத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் அன்று சபரிமில் நிர்வாகம் அது எங்களிடம் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த இடத்தில் தொழிலாளர்கள் வீடு கட்ட உள்ளனர் என்பதை காரணம் காட்டி அரசாங்கம் கேட்ட நிலத்தை தர மறுப்பு தெரிவித்தது விட்டது சபரி மில் நிர்வாகம். இப்படி அரசாங்கத்திடம் கூறியதோடு முடித்துவிட்டு, இன்று வரை தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அவர்களுக்கு கொடுக்க சபரிமில் நிர்வாகம் முன்வரவில்லை. இதற்காக தொழிலாளர் ஆணையத்திடம் முறையிட்டு இருக்கிறோம்.

தொழிலாளர் ஆணையம் 2021 டிசம்பர் மாத இறுதியில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. பிறகு அந்தப் பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை மூடப்பட்டு, இன்று வரை பல்வேறு கட்ட போராட்டங்களையும், பல்வேறு வகையான செயல் பாடுகளையும் முன்னெடுத்து வருகிறோம். இப்படி இன்று வரை தொழிலாளர்களுடைய நீதிக்காக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

நாங்கள் போராடும் ஒவ்வொரு முறையும் காவல் துறையைக் கொண்டும், ரவுடிகளை கொண்டும் சபரிமில் நிர்வாகம் அச்சுறுத்துகிறது. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் என்றாவது ஒருநாள் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கும் என்று போராடி வருகிறோம்.

மேலும் போராடி வரக்கூடிய இத்தனை ஆண்டு காலத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மனஉளைச்சலால் மரணமடைந்து இருக்கின்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இப்படி பல்வேறு மரணங்களுக்கு காரணமாக விளங்குகிறது சபரி மில் நிர்வாகம் என்றார் சபரி மில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த துரைராஜ்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.