திருச்சி எஸ்.ஆர்.சி. கல்லூரியில் அஞ்சல் தலை மற்றும் நாணயக் கண்காட்சி !
திருச்சி சீதாலட்சுமி இராமசுவாமி தன்னாட்சி கல்லூரியின் அஞ்சல் தலை கிளப்பின் சார்பில் ஒரு நாள் அஞ்சல் தலை மற்றும் நாணயக் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் எம்.வி. அல்லி மற்றும் சுயநிதிப்பிரிவு பொறுப்பாளர் முனைவர் எஸ். சாந்தி உள்ளிட்டோர் கண்காட்சியினை திறந்து வைத்தனர். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் தலைப்பிலும், தலைவர் லால்குடி விஜயகுமார் நீர்ப்பறவைகள் தலைப்பிலும், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மகாத்மா காந்தி தலைப்பிலும், பொருளாளர் தாமோதரன் சர்வதேச அஞ்சல் தலையில் மகாத்மா காந்தி தலைப்பிலும், இணைச் செயலர் முத்து மணிகண்ட கார்த்திகேயன் திருச்சிராப்பள்ளி சிறப்பு அஞ்சல் உறை தலைப்பிலும், சதீஷ் பாபு உலக நாடுகளின் கொடிகள் தலைப்பிலும், முகமது சுபேர் உலக நாடுகள் அஞ்சல்தலை தலைப்பிலும் திருச்சி நாணயவியல் கழக செயலாளர் பத்ரி நாராயணன் குறுவடிவ அஞ்சல் தலை தலைப்பிலும், தேவகி நினைவார்த்த நாணயங்கள் தலைப்பிலும், தஸ்லிமா நஸ்ரின் தமிழ்நாடு பெருமைகள் தலைப்பிலும், கீர்த்தனா மெகதூத் அஞ்சல் அட்டை தலைப்பிலும், சித்ரா இன்லெண்ட் லெட்டர் தலைப்பிலும் காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.
பொதுப் பயன்பாட்டு அஞ்சல் தலை, நினைவார்த்த அஞ்சல் தலை, குறுவடிவ அஞ்சல் தலை, முதல் நாள் அஞ்சல் உறை, சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு அஞ்சல் முத்திரைகள் என அஞ்சல் தலைப்பு சேகரிப்பினை அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் காட்சிப்படுத்தி விளக்கினார்கள். கண்காட்சியில் பங்கேற்ற அஞ்சல் தலை சேகரிப்பாளர்களுக்கு பங்கேற்றமைக்கான சான்றிதழ் வழங்கி கல்லூரி முதல்வர் சிறப்பித்தார்.
மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகள் அஞ்சல் தலை கண்காட்சியைக் கண்டு அஞ்சல் தலை வரலாற்றினை அறிந்து கொண்டனர். உதவிப் பேராசிரியர்கள் வீ. நித்யா மற்றும் முனைவர் பி. பாலசௌந்தரி உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.