நீரின்றி அமையாது உலகு ! அமைச்சரின் அசத்தலான முன்னெடுப்பு !
திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஊனைக்குளம் என்கிற ஏரி உள்ளது. நீண்ட காலமாக அந்த ஏரி தூர்வாரப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து மண்ணும் மரமும் என்கிற இயக்கம் பெரிய சூரியூர் ஊனைக்குளம் ஏரியை தூர்வாரும் பணியை துவக்கினார்.
இந்த ஏரி தூர்வாரப்பட்டால் மழைக்காலத்தில் பெய்யும் மழை நீர் ஏரியில் சேமிக்கப்படும் அந்த மழை நீர் சூரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நீர் தேவைகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என இந்த பணியை மேற்கொள்பவர்களும் சூரியூர் மக்களும் தெரிவித்தனர்.
இந்தாண்டு மழைக்காலத்தில் பெய்யும் மழை நீரை அந்த ஏரியில் சேமிக்க ஏதுவாக தூர்வாரும் பணி மழைக்காலத்திற்கு முன்பாக நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தூர்வாரும் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அந்த ஊனைக்குளம் ஏரியை சுற்றிலும் பனை விதைகள் தூவப்பட்டது. மரக்கன்றுகளும் நடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிட்டு அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
தமிழ்நாட்டில் மட்டும்தான் மண்ணை தோண்ட தோண்ட தமிழர்களுக்கான அடையாளம் வெளிவந்து கொண்டிருக்கும். 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன்படுத்தியவன் தமிழன் என்கிற பெருமை நமக்கு உண்டு. தாய்ப்பாலுக்கு நிகராக இருக்க கூடிய நீரை பாதுகாக்க கூடிய பணி இந்த பணி இதற்கு என்னுடைய பாராட்டையும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மண்ணும் மரமும் கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம், கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி : அசோக் ராஜா