TT Injection பரிதாபங்கள் !
நான் எமர்ஜென்சி மெடிசின் துறையில் பணிபுரிவதால், நிறைய விபத்துக்கள், காயங்களை தினசரி ட்ரீட் செய்து வருகிறேன்.
சாதாரண சிராய்ப்பு காயங்களுக்கு இங்கு வருபவர்கள் அதிகம். அவர்களுக்கு History Taking எடுப்போம்.
என்ன ஆனது? எப்படி ஆனது? இதனால் உங்களுக்கு என்ன தொந்தரவு இருக்கிறது? இந்த History Taking முடிந்த பின்பு நாங்கள் Examination செய்வோம். அதன் அடிப்படையில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்குமா? X-ray தேவைப்படுமா? அல்லது தையல் போட வேண்டிய சூழல் இருக்குமா? என்றெல்லாம் அடுத்த கட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இப்படியாக காயம் பட்ட பலரை நாங்கள் consult செய்கையில் பலரும் “சார், ஒண்ணுமில்ல…. சின்ன காயம் தான்… வலி கூட பெருசா இல்ல…. செப்டிக் ஊசி (அதாவது TT Injection) போட்டுக்க வந்தேன்” என்று கூறுவர்.
என்னுடைய அடுத்த கேள்வி ‘ கடைசியா எப்போ சார் TT போட்டீங்க? ‘
அவரது பதில் ….. 6 மாசத்துக்கு மேல ஆயிடுச்சு சார்.
அதாவது எந்த வருடம், எந்த மாதம் என்ற பதில் வராது. காரணம், TT injection- இன் திறன் 6 மாதம் மட்டுமே உடலில் இருக்கும் என்ற பரவலான எண்ணம் மக்கள் மனதில் இருப்பதால், அவர் 6 மாதத்திற்கு மேல் இருக்கும் என்ற பதிலை கூறுகிறார்.
இங்கு தான் சிக்கலே.
Minor Injury – யாக இருந்தாலும் சரி, Major Injury – யாக இருந்தாலும் சரி. நீங்கள் கடைசியாக TT ஊசி செலுத்திக்கொண்டு 5 வருட காலத்திற்குள் தான் இருக்கும் என்றால், உங்களுக்கு தேவை அந்த காயத்திற்கு மருந்து பூசுவது, அதை சுத்தம் செய்வது மட்டும் தானே தவிர, TT தேவையில்லை.
நீங்கள் TT Injection போட்டு 5 வருடம் மேல் ஆனால் மட்டுமே, TT Injection மற்றும் TT immunoglobulin போட வேண்டியதை பற்றி யோசிக்கவே செய்ய வேண்டும்.
சரி டாக்டர், TT Injection போடுவதால் என்ன தவறு ஆகி விடப்போகிறது?? அது ஆபத்தா என்றால்? அப்படியெல்லாம் இல்லை.
நிறைய மக்கள் TT போட வேண்டுமென்றே காயம் பட்ட கை, கால்களை கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனை வருகிறார்கள். அது மிகப்பெரிய ரிஸ்க்.
இரண்டாவது, மக்களாகிய உங்களுக்கும் நேர விரயம். TT போட வேண்டாம் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டிய எனக்கும் நேர விரயம்.
தெரியாமல் கீழே விழுந்து விட்டேன், கையில் லேசான சிராய்ப்பு காயம் தான் உள்ளது என்றால் வீட்டிலேயே நன்றாக அந்த காயத்தை கழுவி, அதற்கு Ointment பூசினால் மட்டுமே போதும்.
நீங்கள் அவ்வளவு risk எடுத்துக்கொண்டு வண்டி ஓட்டிக்கொண்டு வரும் வழியில் மிகப்பெரிய ஆக்சிடென்ட் நடக்க வாய்ப்புண்டு. இதை நான் கண்கூடாக பல முறை பார்க்கவே இதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
எனவே, உங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் இதுவரை TT போட்டதே இல்லை என்றால் மருத்துவமனை செல்லுங்கள்.
காயம் ஏற்பட்ட இடத்தில் வலி அதிகமாக உள்ளது, அதில் மண், சேறு அல்லது ஏதோ பொத்துக்கொண்டு உள்ளது, காயம்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது, அந்த இடத்தில் உள்ள Joint – ஐ மடக்க அல்லது நீட்ட கஷ்டமாக உள்ளது, ரத்தம் நிற்கவில்லை போன்ற நிலைமை இருந்தால் அதை நன்கு சுத்தம் செய்யவோ, தையல் போடவோ, எலும்பு முறிவு உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்யவோ உடனடியாக மருத்துவமனை எமர்ஜென்சி டிபார்ட்மெண்ட் செல்லலாம்.
TT ஊசி போட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காயத்துடன் வண்டி ஓட்டிக்கொண்டு ரிஸ்க் எடுத்து வர வேண்டாம். 6 மாதம் தான் TT ஊசியின் வீரியம் இருக்கும் என்ற எண்ணம் இனி வேண்டாம். அதன் வீரியம் 5 வருடம் என்பதே Guidelines. இந்த சிறிய பதிவின் மூலம் பலர் இதை அறிந்துகொண்டால் நன்றாய் இருக்கும் என்பதே என்னுடைய எண்ணம்.
— டாக்டர் அரவிந்த ராஜ்







Comments are closed, but trackbacks and pingbacks are open.