விஜய்யின் படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பும். அல்லது விஜய்யே அந்தப் படங்களின் ஆடியோ ரிலீசின் போது, ஏதாவது ஏடாகூடமாகப் பேசி சர்ச்சையைக் கிளப்புவார். இவையெல்லாம் படத்திற்கு பத்துப் பைசா செல வில்லாமல் பப்ளிசிட்டி கிடைக்கும். லேட்டஸ்ட் டெக்னாலஜிகளில் ஒன்று.
வருகிற ஏப்.13-ஆம் தேதி ரிலீசாகவுள்ள ‘பீஸ்ட், படத்தின் தயாரிப்பாளர் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் என்பதாலும் நடப்பது திமுக ஆட்சி என்பதாலும் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனுக்கு நோ சொல்லிவிட்டதாம் சன் பிக்சர்ஸ். இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால் ,’பீஸ்ட்’ படத்தின் ஒட்டு மொத்த தமிழக தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணும் ரைட்ஸை வாங்கியிருப்பது உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் என்பதும் மிக முக்கிய காரணம். விஜய்யின் சம்பளம் (100 கோடி) போக, டைரக்டர் நெல்சன் உட்பட ஷூட்டிங் செலவு என அனைத்து வகையிலும் கிட்டத்தட்ட 180&-190 கோடி வரை ‘பீஸ்ட்’ பட்ஜெட்டாகியுள்ளது. இதில் தமிழக ரிலீஸ் ரைட்சை 80&-90 கோடி வரை கொடுத்து சன் பிக்சர்ஸிடமிருந்து வாங்கியுள்ளார் உதயநிதி. இப்போது கோலிவுட்டில் கூடிக்கூடிப் பேசும் சங்கதி என்னன்னா, உதயநிதியின் ‘ஸ்மாட் & ஜென்டில்’ பிஸ்னஸைப் பத்தி தான். சில வருடங்களுக்கு முன்பு வரை ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் மெகா பட்ஜெட் படங்களை எம்.ஜி.(மினிமம் க்யாரண்டி) அல்லது டிஸ்ட்ரிபியூஷன் முறையில் வியாபாரம் செய்தார்கள். இந்த இரண்டு முறையில் எந்த முறையில் வாங்கினாலும், படம் ஓடாவிட்டால், வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தயாரிப்பாளர்கள் கழுத்தைப் பிடித்து நெருக்கு வார்கள். அடுத்தடுத்த படங்களில் சரிக்கட்டிக் கொள்வதாக சமாளிப்பார்கள் தயாரிப்பாளர்கள்.
ஆனால் இப்போது உதயநிதியின் பிஸ்னஸ் பாலிஸி என்னன்னா, படத்தின் ரைட்சை வாங்கும் தொகைக்கு ஏற்ப, தமிழகம் முழுவதும் 800-&900 ஸ்க்ரீன்கள் வரை ரிலீஸ் ப்ளான் பண்ணி அதற்கேற்ப அட்வான்ஸ் வாங்குவார். வாங்கிய அட்வான்சுக்கு மேல் எவ்வளவும் லாபம் வந்தாலும் அது தியேட்டர்காரர்களுக்குத் தான். இந்த லாப விஷயத்தில் உதயநிதி தலையிடுவது கிடையாதாம். ரஜினியின் ‘அண்ணாத்தே’வும் இதே சிஸ்டத்தில் ரிலீஸ் பண்ணியதால் யாருக்கும் நட்டம் இல்லையாம். அதே போல் தான் இப்போது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தையும் கமலின் ‘விக்ரம்’ படத்தையும் வாங்கியுள்ளார் உதயநிதி. லைக்காவும் சிவகார்த்திகேயேன் இணைந்து தயாரித்து நடிக்கும் ‘டான்’ படமும் உதயநிதியின் கைவசமாகியுள்ளது.
‘பீஸ்ட்’ ஸ்மாட் பிஸ்னஸ் ஆன மகிழ்ச்சியில் தனது 66-ஆவது படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் விஜய். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக களம் இறங்குகிறார் ராஷ்மிகா மந்தனா. கமலின் ‘விக்ரம்’ கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி ரிலீசாகிறது