மக்கள் அதிகாரத்தின் முதல் மாநில மாநாடு

-நமது நிருபர்கள்

0

மக்கள் அதிகாரத்தின்

முதல் மாநில மாநாடு

 

2 dhanalakshmi joseph

ஒன்றிணைந்த இடது சாரிகள்

ஒன்றிணைவார்களா தேர்தல் களத்தில்

- Advertisement -

- Advertisement -

தில்லை உள்ளிட்டு காவி பாசிச அதிகார மையமாகும் கோவில்கள்.! தமிழகமே தடுத்து நிறுத்து..” என்ற கோரிக்கையுடன் நடைபெற்ற மாநாட்டிற்கு தலையேற்ற மாநில பொருளாளர் காளியப்பன் பேசுகையில்,  “இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்நாட்டில் பங்குண்டு. அவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் செயலைத்தான் மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது. ராணுவத்தையும் காவிமயமாக்கிக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் தலையெடுத்து வருகின்ற காவி கும்பலை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்” முதல் திரியை பற்ற வைத்தார்.

திராவிடர் விடுதலை கழகத்தின் திருச்சி மாவட்ட அமைப்பாளர் புதியவன் பேசுகையில்,  “உயர்நீதிமன்றம் அனுமதி பெற்று தில்லையில் தமிழில் பாடினோம். ஆனால் ஜெ. ஆட்சியில் உச்சநீதிமன்றம் அதற்கான அனுமதிக்கு தடை விதித்தது. கோவில்கள் நமக்கும் சொந்தமானது. நாம் மீண்டும் அங்கே பாசுரங்களை பாட வேண்டும். அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

மோடி அணியும் சூட் என்ன விலை, கண்ணாடி என்ன விலை, உண்ணும் காளான், மேக்கப் என ஒவ்வொன்றுக்கு எவ்வளவு செலவாகிறது என்ற புள்ளிவிபரங்களை பெங்களுரைச் சேர்ந்த மூத்த கிரிமினல் வழக்கறிஞர் பாலன் எடுத்து அடுக்கிய போது, “மோடியை பா.ஜ.க.வினர் ‘யோகி’ என  சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்பதை பறைசாற்றியது.

மக்கள் அதிகாரத்தின் கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகள் நூலை வெளியிட்ட வழக்கறிஞர் பாலன் பேசுகையில், “மோடி என்ற தனிமனிதனுக்காக ஒரு ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி செலவழிக்கப்படுகிறது. வேண்டுமா னால் நீங்கள் கூகுள் செய்து பாருங்கள். அதில் அந்த புள்ளிவிபரங்கள் உண்டு. மோடி வாழ்கின்ற வாழ்க்கைக்கும் இந்த நாட்டிற்கும் எந்த சம்பந்த மும் இல்லை. பொய் சொல்லி உருவாக்கிய பிம்பம் தான் மோடி. இஜாப்பிற்கும், இஸ்லாமியர்களுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் இந்த நாட்டில் சம்பந்தம் உண்டு. இந்தியா இனப்படுகொலையை நோக்கி நகர்

கிறது. இனப்படுகொலை நடைபெற்ற ஜெர்மனி, ருவாண்டா, இத்தாலி அழிந்து போனது. அவர்களோடு சேர்ந்து அந்த தலைவர்களும் அழிந்து போனார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அ.அப்துல் ஹமீது பேசுகையில், “சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தையும் இன்று ஊனமாக்கி இருக்கின்றனர். தமிழகத்தில் காவியை எதிர்த்து பல வண்ணங்களாக இருக்கும் நாம் ஒன்று திரண்டு இருக்கிறோம். பாசிச பயங்கரவாதத்தை எதிர்ப்பது தான் உச்சபட்ச இலக்கு என்ற மக் கள் அதிகாரத்தின் கொள்கை தான் எஸ்டிபிஐ கட்சியின் கொள்கை. வண்ணத்தில் மட்டுமல்ல எண்ணத் திலும் ஒன்றிணைகிறோம்” என்றார்.

மாநாடு நடத்துவதற்கு மேலஅரண் சாலையில் தான் முதலில் இடம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு சாலைப் பணிகள் முடிவுறாத நிலையில் கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டது. இது குறித்து தமிழ்த் தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த மீ.த.பாண்டியன் பேசுகையில்,

இன்று தில்லைநகரில் கூடிய நீங்கள் நாளை தில்லையில் கூடுங்கள் என்பதன் அறிகுறி தான் நமக்கு திருச்சி, தில்லைநகரில் கூட்டம் போடுவதற்கான அனுமதி கிடைத் திருக்கிறது. பார்ப்பனர்கள் கொட்டம் அடிக்கும் இடமாகத் தான் கோவில்கள் இருக்கிறது. நாம் யார் என்பதை தீட்சதர்களுக்கு காட்ட வேண்டிய  சூழல் வந்திருக்கிறது” என்றார்.

மாநாட்டில் சிபிஐ, சிபிஎம், மக்கள் அதிகாரம் அமைப்பின் கலைக்குழுக்கள் ஒன்றிணைந்து கலை நிகழ்ச்சி நடத்தினர். “நீங்கள் மட்டும் தான் இணைவீர்களா… மோடியை எதிர்க்க கலைஞர்களாகிய நாங்களும் ஒன்று கூடுவோம்” என்று பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் கோவனின், இது எங்கள் தமிழ்நாடு, தந்தை பெரியாரின் வீடு, மோடி நடிக்கும் டிராமா, எச்சரிக்கை எச்சரிக்கை, டிராக்டருக்கு மண்டியிட்டார் மோடி என்ற பாடல்களும், சிபிஐ லெனின் பாரதி பாடிய, மதபேதம் இல்லா எங்கள் நாட்டில் மனச கெடுக்கிறான் குங்குமத்திற்கும் குல்லாவிற்கும் சண்ட மூட்டுறான்.. என்ற பாடலும், லெனின் சுப்பையா பாடிய – மோடி என்பதெல்லாம் வெறும் முகம் மூடி தானே… வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலம் தானே.. என்ற பாடல்களும் மாநாட்டில் தலைவர்களின் பேச்சிற்கிடையே, புரட்சிகரமாய் மக்களுடன் பேசின.

4 bismi svs

இங்கு பாடப்படும் பாடல்களை பெண்கள் ஆர்வமாக நிறைய பேர் நின்று கேட்டார்கள். நாங்கள் பேசும் நேரத்தை குறைத்துக் கொள்கிறோம். நீங்கள் பாடுங்கள்” என கலைக்குழுவின் பாடலுக்கு கைகளால் தொடைதட்டி தாளமிட்டு ரசித்த தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் பேசுகையில்,

மக்கள் அதிகார அமைப்பினர் யாருடனும் இணையாமல் தனியாக செயல்படுபவர்கள். நாங்கள் நடத்திய போராட்டங்களால் எங்கள் மீது முப்பது, நாற்பது வழக்குகள் போடப்பட்டன. அதற்கே நாங்கள் சோர்ந்து போய்விட்டோம். அவர்களோ ஏராளமான வழக்குகளை எதிர் கொண்டாலும் சோர்வின்றி இந்த மக்களுக்காக, மக்களிடமே கையேந்தி பெற்ற காசை வைத்துக் கொண்டு போராடுகிறார்கள். மக்கள் அதிகாரம் ஒரு ஜனநாயக மாண்போடு செயல்படுகிற இயக்கம்.

கடலூர் மாவட்டத்தில், என்.எல்.சி. நிர்வாகம், சுற்றுப் புறத்தில் உள்ள மக்களின் நிலங் களை குறைந்த விலைக்கு பெற்ற போது நாங்கள் போராடி அதிகபட்சமாக ஏக்கருக்கு 13 லட்சம் வரை பெற்றுத் தந்தோம். பஞ்சாபியர்கள் அங்கே ஏக்கருக்கு ஒரு கோடி வரை பெற்றுத் தந்திருக்கிறார்கள். என்.எல்.சி.யின் அருகே வசிக்கும் மக்களின் துயரங்கள் சொல்லி மாளாது. ஆளுங்கட்சியுடன் கூட்டணி கொண்டிருப்பதால் நாங்கள் சமரசம் செய்து கொண்டே போராட வேண்டியிருக்கிறது. ஆனால் சமரசம் செய்து கொள்ளாதவர்கள் நீங்கள், எங்கள் என்.எல்.சி. மக்களின் பிரச்சனைகளையும் கையிலெடுத்து போராட வேண்டும். நாங்களும் உங்களுக்கு துணை நிற்போம்” என்றார்.

தமிழக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பொழிலன் பேசுகையில்,  “இந்து பாசிசம், பார்ப்பனிய பாசிசமாகவும். கார்ப்பரேட் பாசிசமாகவும் செயல்படுகிறது. இரண்டு பாசிசமும் ஒருங்கிணைந்து வலுப்பெற்று இருக்கிறது. ஓன்றை எதிர்த்து மற்றொன்றை விட்டுவிடாமல் இரண்டையும் எதிர்க்க வேண்டும். கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், சிதம்பரத்தில், தில்லை கோவிலில் தமிழில் பாடுபவரை அடித்து விரட்டும் போது இந்துசமய அறநிலையத்துறையால் அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. காரணம் அத்தகைய அதிகாரத்துடன் பார்ப்பனர்கள் தங்களை கட்டமைத்து வைத்திருக்கின்றனர். இந்த அதிகார கட்டமைப்பை வீழ்த்த வேண்டுமென்றால் அது தமிழகத்தின் மக்கள் அதிகாரத்தால் மட்டுமே வீழ்த்த முடியும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் த.இந்திரஜித் பேசுகையில்,“எதையெல்லாம் இந்த நாட்டிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்று நாம் போராடினோமோ அதை பாதுகாக்கும் ஒரு அமைப்பாகத் தான் இந்துத்துவா அமைப்பு செயல்படுகிறது. பா.ஜ.க. ஒரு இந்துப் பேரரசை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்படுவதாகவே இந்துக்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நோக்கம் ஒரு பார்ப்பனிய பேரரசை நிறுவ வேண்டும் என்பதே. இதை சரியாக கண்டறிந்து எடுத்துக் காட்டுகிறது மக்கள் அதிகாரம். கோவில்களில் நாம் தான் சிலையை வடித்தோம். மண் சுமந்தோம். 40 ஆயிரம் கோவில்களும் நாம் கட்டியது தான். ஆனால் நாம் வெளியேற்றப்படுகிறோம். கோவில்கள் ஆர்.எஸ்.எஸ்&ன் பாதுகாப்பு கவசமாக இருக்கிறது. எனவே கோவில்கள் கைப்பற்றப்பட வேண்டும்” என்றார்.

சிபிஎம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசும் போது,  “இன்றைக்கு ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாய் இருப்பது யாருக்கு லாபம். கார்ப்பரேட் அரசியலுக்கு தான் லாபம் என்பதை உணர்ந்து இந்தியாவில் உள்ள கம்யூனிஸ இயக்கங்கள் எல்லாம் ஒற்றை புள்ளியில் இணைந்திருக்கிறோம் என்பதை பறைசாற்றும் விதமாகத் தான் இந்த மாநாடு அமைந்திருக்கிறது. பாசிசத்தை எதிர்க்கக் கூடிய யுத்தம் சோசலிஸம் தான். சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தையும் தனித்தனியாக பிரிப்பதே கார்ப்பரேட் அரசியல். பாசிச கும்பலை ஒழிக்க இவை அனைத்தும் ஒன்று சேர வேண்டும்” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் பேசுகையில்,  “உலகமே திரும்பிப் பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் அதிகாரத் தோழர்களின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால் அதற்கு அவர்கள் உரிமை கோரவில்லை. என் மீது இருக்கிற நம்பிக்கையைவிட எனக்கு இடதுசாரி இயக்கங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த சே.வாஞ்சிநாதன் பேசுகையில்,  “இது பெரியார் மண். திராவிட மாடல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இரு ஆண்டுகளாக சிதம்பரத்தில் 300 குடும்பங்களின் ஆதிக்கத்தை நம்மால் தகர்க்க முடியவில்லை. கோவிலில் மணியாட்டிக் கொண்டிருக்கும் தீட்சதர்கள் கோவில் எங்களுக்கு சொந்தம் என்கிறார்கள். அது தான் பார்ப்பனீயத்தின் வலிமை. சிதம்பரம் பிரச்சனை என்பது தமிழ்நாட்டின் அவமானம் என்பதை தமிழச்சமூகம் உணர வேண்டும். தமிழர்களை சார்ந்து வாழ்வியல் நடத்துபவன் தமிழில் பாடக் கூடாது என்கிறார்கள். 

300 குடும்பத்தின் அதிகாரம் நம்மிடம் உள்ள பலவீனத்தில் தங்கியிருக்கிறது. சிதம்பரம் நகர மக்கள் கூட அங்கு நடக்கும் போராட்டத்திற்கு வரமறுக்கிறார்கள். ஒரு தேதி குறித்து அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து 20 ஆயிரம் பேரை திரட்டி சிதம்பரத்தில் உட்கார்ந்தால் இந்த பிரச்சனை ஒரு முடிவிற்கு வரும்.  இந்துத்துவாவிற்கு ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அந்த சித்தாந்தத்தை கம்யூனிஸ்ட்கள், பெரியாரிஸ்டுகள், அம்பேத்காரிஸ்டுகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். தமிழகம் வீழ்ந்தால் இந்தியா வீழும். இது தான் ஆர்.எஸ்.எஸ்&ன் இலக்கு. இதை எப்படி எதிர்கொள்வது. தமிழகத்தில் ஓவ்வொரு வார்டிலும் ஒரு பாசிச எதிர்ப்பணியை உருவாக்கி அவர்களை களத்தில் நிறுத்த வேண்டும்” என்றார்.

மாநாட்டு தீர்மான விளக்க உரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ பேசுகையில்,  “மக்களுடைய பக்தியை அவர்கள் மதவெறியாக, தங்களுடைய வாக்கு வங்கியாக, அதிகார மையமாக மாற்றப் பார்க்கிறார்கள். அதனால் தான் இந்துஅறநிலையத்துறையை கலைக்கச் சொல்கிறார்கள். பார்ப்பான் மேல் கை வைத்தால் இது இந்துக்களுக்கு எதிரான அரசாங்கம் என்கிறார்கள். யார் இந்துக்கள்.

நாம் நடத்தும் போராட்டத்திற்கு மக்கள் வரமாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். மக்கள் வருவார்கள். நம் மீது நம்பிக்கையூட்டி நாம் அவர்களை திரும்பத் திரும்ப அழைக்க வேண்டும். பிரச்சனை வரும் போது கண்டிப்பாக கூட நிற்பார்கள்” என்றார்.

பல ஆண்டுகளாக, தேர்தல் காலத்தில், ம.க.இ.க.வினர் எழுதிய ‘தேர்தலை புறக்கணிப் போம்’ என்ற சுவர்  விளம்பரத்தை பார்த்திருப்போம். ஆனாலும் இன்று வரை மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரியவில்லை. ஒரு வாக்கின் மதிப்பு என்ன தெரியுமா.? என்று கேட்டால் தெரியும்.. 300 ரூபாய்.. 500 ரூபாய் என கூறத் தொடங்கவிட்டார்கள். இனி இவர்களிடம் தேர்தலை புறக்கணிப்போம் என்று சொன்னால் கல்லால் அடித்து விரட்டுவார்கள் என்பதை உணர்ந்து, தேர்தல் அரசியலிலும் நுழையத் தொடங்கிவிட்டார்கள் ம.க.இ.க. 2.0 ஆன மக்கள் அதிகாரத்தினர். வேட்பாளர்களாக அல்ல. பாசிச பா.ஜ.க. எதிர்ப்போருக்கும், மக்கள் நலனை முன்வைத்து தேர்தலை சந்திப்போர்களுக்கும்  வாக்கு சேகரிக்கும் பிரச்சாரகர்களாக..

இந்த மாநாட்டில் பா.ஜ.க.வை மிகத் தீவிரமாக எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்தன. பங்கேற்ற தலைவர்களும் நிறையவே பேசினார்கள். குறிப்பாக, நமது ஒற்றுமை தொடர வேண்டும் என குறிப்பிட்டார்கள்.

நிறைவில் மாநில பொருளாளர் காளியப்பன் கூறுகையில், “இந்து மதவெறி பார்ப்பன கும்பலை எதிர்க்கும் போராட்டத்தில், நமக்குள் இருக்கும் எந்த சிறு முரண்பாட்டையும் நாங்கள் முன்னிலைப்படுத்த மாட்டோம் என்பதை நாங்கள் இங்கே தெளிவுபடுத்துகிறோம்” என்றார். நல்லது..! இனி மக்களுக்கான போராட்டங்கள் ஏராளமாக உள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கான (தேர்தலை நடத்துவார்களா..?) நாட்கள் குறைவு தான். அதற்குள் மக்களைச் சென்றடைய வேண்டும். வரும் நாட்களில் மாநாட்டில் கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மிகப் பெரிய போராட்டத்தை அடுத்தடுத்து நடத்தினால் மட்டுமே மக்களின் பார்வை இங்கே திரும்பும். ஒன்றிணைவார்களா..?

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.