உயர்கல்வி : ஓரே பாடத்திட்டம் கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு – ஏன்?
உயர்கல்வி : ஓரே பாடத்திட்டம் கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு – ஏன்?
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் (TNGCTA), பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT), மதுரை காமராசர் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (MUTA) ஆகியவை இணைந்து, கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் மூலம் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் அறிவித்துள்ள உயர்கல்வியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதை உருவாக்கிப் பல்கலைக்கழகங்களுக்கும், தன்னாட்சி பெற்ற கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாடத்திட்டங்களைத் திரும்பப்பெறவேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது. மேலும், இதில் தமிழ்நாடு முதல்வர் தலையிட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இப் பிரச்சனை குறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சென்னை மண்டலப் பொறுப்பாளர் பேராசிரியர் ஆனந்த் நம்மிடைய உரையாடினார். “தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனைத்துப் பாடங்களுக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதை உருவாக்கி, பல்கலைக்கழகங்களுக்கும், தன்னாட்சிக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டக் குழு என்ற ஒன்று உள்ளது. அதுபோலவே தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடத்திட்டக் குழு உள்ளது. உயர்கல்வி மன்றத்தின் செயல்பாடுகளால் பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டக் குழுக்கள் செயலாற்று போகின்றன. ஒன்றிய அரசு அறிவித்துள்ள தேசியக் கல்விக் கொள்கை என்பதும் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதைத்தான் வலியுறுத்துகின்றது. அதைத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பது சரி என்றால், தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதை எதிர்ப்பதும் சரிதானே? என்று கூறினார்.
மேலும், “உயர்கல்வி மன்றம் உருவாக்கிய இந்தப் பாடத்திட்டம் என்பது ஒரு பரிந்துரைதான். ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் பல்கலைக்கழகம் சார்ந்த பிரச்சனை. இது கட்டாயம் அல்ல என்று அறிவித்துவிட்டு, உயர்கல்வி அமைச்சர் அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கூட்டிய துணைவேந்தர் மாநாட்டில், உயர்கல்வி மன்றம் உருவாக்கிய பாடத்திட்டத்தைக் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று கூறியுள்ளார். இது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது, உயர்கல்வி அமைச்சர் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசும்போது, ஒரே பாடத்திட்டம் இருந்தால் மாணவர்கள் எந்தப் பல்கலைக்கழகத்திற்கு வேண்டுமானாலும் மாறிப் படித்துக்கொள்ளலாம். பிரச்சனை இருக்காது. அதுபோலவே, ஆசிரியர்கள் பணிமாற்றம் பெற்று வேறு கல்லூரிகளுக்குச் சென்றாலும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் பிரச்சனை இருக்காது என்று கூறியுள்ளார். இந்தப் பதிலை ஏற்கவியலாது” என்றார்.
தொடர்ந்து, “உயர்கல்வி மன்றம் உருவாக்கியுள்ள இந்தப் பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டதாக இல்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதி கொண்டவையாக இருக்கும். கிராமங்கள் சார்ந்த கல்லூரிகளின் கட்டமைப்பு வசதி குறைவு உடையதாக இருக்கும். இந்த இருநிலை கல்லூரிகளுக்கும் இடையே பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பாடத்திட்டம் மேம்பாடு உடையாக இல்லை. இது சென்னை போன்ற பெருநகரங்களின் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு இந்தப் பாடத்திட்டம் உதவியாக இருக்காது. எனவே, பழைய முறைப்படி அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்யவேண்டும் என்று அரசைக் கேட்டுப் போராடி வருகின்றோம்.
-ஆதவன்