UPI கட்டணம்: மக்களிடம் திருடும் திட்டம்!
அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படுகிறது. இதை வணிகர்களே செலுத்த வேண்டும்; ரூ.2,000 வரையிலான வணிக UPI பரிவர்த்தனைகளுக்கும், தனிநபர்களுக்கு இடையேயான UPI பணப் பரிமாற்றங்களுக்கும் கட்டணம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால், நடைமுறையில் என்ன நடக்கும்?
சாதாரணமாக துணிக்கடை, மளிகைக் கடை, ஹோட்டல் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ரூ.2,000-ஐத் தாண்டும் தொகை வருவது இயல்பானது.
உதாரணமாக, ரூ.4,000 மதிப்பிலான பொருளை வாங்கும்போது, “ரூ.2,000 + ரூ.2,000 என இரண்டு முறை UPI செய்யுங்கள்” என்று சொல்லலாம். இதேபோன்று மற்ற பரிவர்த்தனைகளையும் எப்படி மாற்றி கட்டணத்தை தவிர்க்கலாம் என யோசிக்கலாம்.
“UPI Charges / UPI MDR கட்டணம்” என ரசீதில் தனியாக சேர்க்கலாம். கடைகளில் இனி எழுதியே வைப்பார்கள். இனி ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு சர்வீஸ் சார்ஜ் உண்டு என்று. ஏற்கனவே கடைகளில் கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு இப்படிதான் சர்வீஸ் சார்ஜ் வசூலித்தார்கள்.
ரூ.2,000-க்கு மேல் வாங்கினால் UPI ஏற்கமாட்டோம்; பணமாகத்தான் செலுத்த வேண்டும் என்றும் கூறலாம். இப்படியெல்லாம் செய்யவில்லை என்றால், வெளிப்படையாகக் கட்டணம் வசூலிக்காமல், மறைமுகமாக பொருளின் விலையை உயர்த்தலாம்.
இப்படி நடந்தால், “UPI கட்டணம் இல்லை” என்ற அரசின் அறிவிப்பு இருந்தாலும், அதன் சுமை மறைமுகமாக மக்களிடமே சென்றடையும் நிலை உருவாகலாம்.
இன்று கடைகளில் “UPI ஏற்றுக்கொள்ளப்படும்” என்ற நிலை உள்ளது. நாளை “ரூ.2,000 வரை மட்டுமே UPI; அதற்கு மேல் பணம்” என்ற நிலை உருவானால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கமே தலைகீழாகிவிடுமா?
எனவே, வணிகர்கள் கட்டணத்தை மக்களிடம் மாற்றுகிறார்களா, பரிவர்த்தனைகளை செயற்கையாகப் பிரிக்கிறார்களா, ரூ.2,000-க்கு மேல் UPI-ஐ மறுக்கிறார்களா என்பதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
“மக்களுக்கு கட்டணம் இல்லை” என்பது அறிவிப்பில் மட்டும் இல்லாமல், கடைகளிலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்படுமா? இல்லையெனில், இந்த விதிமுறையின் எதிர்மறையான தாக்கம் இறுதியில் மத்திய அரசுக்கே திரும்பும்!
– ஜி.எஸ்.பாலமுருகன்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.