பொம்மைகளுக்கு பாலினம் கிடையாது. சிறுவர்கள் கார், துப்பாக்கி மட்டுமே விளையாட வேண்டும், சிறுமியர்தான் சமையல் சாமான்கள் மற்றும் பெண் பொம்மைகளுடன் விளையாட வேண்டும் என்ற பொதுவான கற்பிதத்தைக் கதைகளில் மாற்றி எழுத வேண்டும்.
ஆண் குழந்தைகள் சமையல் விளையாட்டு, பொம்மை தூக்குவது போன்றவைகளிலும், பெண் குழந்தைகள் அறிவியல் பெட்டி (Science Kit), மட்டந்துடுப்பு (Cricket bat) மற்றும் கட்டடக் கட்டுமானப் பொருட்கள் (Building blocks) போன்றவைகளிலும் ஈடுபாடு காட்டுவது போலக் கதைக்களத்தை அமைக்கலாம்.
கதையின் நாயகனோ அல்லது நாயகியோ தங்களுக்குப் பிடித்த பொம்மைகளைத் தாங்களே சுயமாய்த் தேர்ந்தெடுப்பதை முன்னிறுத்த வேண்டும்.
சிறுவன் கரடிப் பொம்மையைக் கேட்டாலோ அல்லது சிறுமி கால்பந்து பொம்மையைக் கேட்டாலோ, பெற்றோர்கள் அதை மறுக்காமல் உற்சாகத்துடன் வாங்கித் தருவது போன்ற காட்சிகளைச் சேர்க்கலாம். இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முன்னுதாரணமாக அமையும்.
பொம்மைகளே கதைமாந்தர்களாக வரும் பட்சத்தில், “நான் பெண்களுக்கான பொம்மை, நான் ஆண்களுக்கான பொம்மை” என்ற சண்டைகளைத் தவிர்த்து, “எல்லாக் குழந்தைகளுடனும் விளையாடுவதுதான் எங்கள் வேலை” என்று அவை ஒற்றுமையாகக் கூறுவது போல் எழுதலாம்.
ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இணைந்து ஒரே விளையாட்டுப் பொருட்களைக் கொண்டு (உதாரணமாக: லெகோ செட்டுகள், புதிர் விளையாட்டுகள்) எவ்விதப் பாகுபாடுமின்றி ஒற்றுமையாக விளையாடுவதைக் காட்சிப்படுத்தலாம்.
“ஆண் சூப்பர் ஹீரோக்கள் மட்டுமே சண்டையிடுவார்கள், பெண் பொம்மைகள் அழகாக உட்கார்ந்திருக்கும்” என்ற கற்பிதத்தை மாற்றும் விதமாக, ஒரு பெண் பொம்மை புத்திசாலித்தனம்,துணிச்சல், உடல்பலம்,வீரம் ஆகியவற்றால் அணியைக் காப்பாற்றுவது போன்ற சாகசகமான கதைக் களத்தை உருவாக்கலாம்.

வீட்டு வேலைகளில் ஆண் பொம்மைகளும், வெளியுலகச் சாதனைகளில் பெண் பொம்மைகளும் சமமாகப் பங்கேற்பதைக் கதையின் உரையாடல்களில் கொண்டு வரலாம்.
இத்தகைய களங்கள் மூலம் குழந்தைகளின் கற்பனைத் திறனை விரிவுபடுத்துவதோடு, சமத்துவமான சமூகச் சிந்தனையையும் சிறு வயதிலேயே எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும்.
விளையாட்டு சாமான்கள், உடைகள் தொடங்கி அன்றாடம் புழங்கு பொருட்கள் வரை வண்ணத் தேர்வுகளில் கூட பாலின சமத்துவத்துவமின்மையை நாம் காண்கிறோம்.
நீல நிறம் சிறுவர்களுக்கும், இளஞ்சிவப்பு நிறம் சிறுமிகளுக்கு மட்டுமே உரியது என்ற பொதுப் பார்வையைத் தவிர்த்து, அனைத்துக் குழந்தைகளும் தங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் விளையாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதாக எழுதலாம். மேலும் வழக்கமான வண்ண வரம்புகளைத் தாண்டி அனைத்துப் பொம்மைகளுக்கும் வண்ணமயமான சூழலை வைத்து கதைகளின் வழி காட்டலாம்.
கதைகள் பிரச்சாரமாக மாறிவிடாமல், சிறுவர்களின் உலகத்துடன் இயல்பாகப் பொருந்தும் வண்ணம் இந்த மாற்றங்களைக் கொண்டு வருவது குழந்தைகளின் அடிமனதில் ஆழமாகப் பதிவதற்கு உதவும்.
தொடரும் …
— கார்த்திகா கவின்குமார்






Comments are closed, but trackbacks and pingbacks are open.