கவிராயர் பக்கம்
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் காவேரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை அண்மையில் கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டுப் பெருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது.
இவ் விழாவில் எனக்குக் கவியரசு கண்ணதாசன் விருது வழங்கவிருப்பதாக இக் கூடுகையின் செயலாளர் இரா.செழியன் கூறியபோது, அதனை ஏற்பதில் தயக்கமிருந்தது. விருதுகளின் மீது எனக்கிருக்கும் ஒவ்வாமை ஒரு காரணம். மற்றொரு காரணம் உண்மையான விருது காலத்தின் கைகளில் இருக்கிறது. எனது அதிகம் பேசப்பட்ட எழுத்துக்காரத் தெரு, வளையல் வம்சம் ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்து பல வருடங்கள் ஆனபிறகும் இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புகழ், விருது இவற்றின் மேலிருக்கும் ஆசைகள் எப்போதோ என்னிடமிடருந்து விடைபெற்றுக் கொண்டு விட்டன.
ஆனாலும்‘நீங்கள் பிறந்த மண்ணில் உங்களுக்குத் தரப்படும் இவ்விருதை ஏற்கத்தான் வேண்டும்’ என்று செழியன் கூறியதை மறுக்கத் தோன்றவில்லை. ஒரு தாய் தன் மகனைத் தழுவி உச்சிமோந்தால் அது அங்கீகாரமல்ல. அன்பு. ஆகவே தஞ்சையின் தாய் உள்ளங்கள் இவ்விருதை அளிப்பதால் அன்பு கருதி ஏற்றேன்.
பிறப்பிலிருந்து இறப்பு வரை நமது தோழனாக, நல்லாசிரியனாக, வழிகாட்டியாக வாழ்க்கை நெடுகிலும் நம்மோடு வருவது கண்ணதாசன் மட்டுமே. வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்ற பாடலின் கடை வரியை ‘கடைசிவரை கண்ணதாசன்’ என்று பாடுதல் தகும்.
இந்த அமைப்பின் மூலவிசையாகத் திகழும் இரா.செழியன் புகழ்பெற்ற புலவர் லியோ இராமலிங்கம் அவர்களின் புதல்வர். தமிழ்க்குடும்பம். தஞ்சாவூர் வண்டல் கலை இலக்கியக் கூடுகையின் துணைத் தலைவர் பாம்பே ஸ்வீட்ஸ் அதிபர் சுப்பிரமணிய சர்மா என்னையும் என் துணைவியரையும் தேடிவந்து சிறப்புச் செய்தது நான் பெற்றபேறு.
அரசியல்வாதிகள் பொதுவாக இலக்கிய விழாக்களில் சோபிக்க மாட்டார்கள். முடியாது. ஆனால், எனக்கு விருதளித்துப் பேசிய தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அரங்கையே திகைக்க வைத்தார். தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம் என்ற என் நூலின் ஒவ்வொரு சந்திலும் புகுந்து புறப்பட்டார். சரளமான பேச்சு. சாந்தமான முகம். சாதிப்பார்.
திரைப்படத் துறையில் தன்னால் சாதிக்க முடியாது என்று சோர்ந்துபோய் சொந்த ஊர் திரும்ப பெட்டி படுக்கையோடு புறப்பட்ட கவிஞர் வாலி, சாலையோர தேநீர் கடை ஒலிபெருக்கியில் கண்ணதாசன் பாடல் உரத்து கேட்டது. மயக்கமா? கலக்கமா? என்று கேள்வி கேட்டது. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்ற வரியில் தெளிவு பிறக்கிறது. உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதிதேடு’ என்ற வரியில் ஞானம் பிறக்கிறது. வாலி திரும்பிவிட்டார் – அதுவே அவரது திரைவாழ்வின் திருப்புமுனை. இப்படி வாழவும் அந்த வாழ்வைச் சுகமாக்கவும் வல்லமை படைத்த கவியரசரின் வரிகள் ஆயிரம் உண்டு.
இதோ ஒன்றிரண்டு….
காலங்களில் அவள் வசந்தம். கலைகளிலே அவள் ஓவியம். மாதங்களில் அவள் மார்கழி…

”மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே … வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே” என்பதைக் கேட்டு கண்ணீர் மல்காத மாமன்மார்கள் உண்டா?
வாழ்ந்ததற்கு அடையாளமாய் சுவடுகளை விட்டுச் செல்கிறான் ஒரு மகாகவிஞன். கண்ணதாசன் தான் வாழ்ந்துவிட்டுபோன பிறகும் நம்மை வாழ்விக்கிறான். நம்மை வாழ்விப்பது இறைவனாகத்தானே இருக்கமுடியும். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற கவியரசர் பாடல் நினைவுக்கு வருகின்றது. கவிஞன் என்பவன் கடவுளாகலாம் என்று நமக்குப் பாடத் தோன்றுகின்றது.
— தஞ்சாவூர்க் கவிராயர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.