அங்குசம் பார்வையில் ‘உசுரே’
தயாரிப்பு : ஸ்ரீகிருஷ்ணா புரொடக்சன்ஸ்’ மவுலி எம்.ராதாகிருஷ்ணன், டைரக்ஷன் : நவீன் டி.கோபால், ஆர்டிஸ்ட் ; டீஜே அருணாச்சலம், ‘பிக்பாஸ்’ ஜனனி, மந்த்ரா,ஆதித்யா கதிர், கிரேன் மனோகர், செந்திகுமாரி, தங்கதுரை, பாவல் நவகீதன். ஒளிப்பதிவு : மார்க் சாய், இசை : கிரண் ஜோஸ், எடிட்டிங் : மணிமாறன், பி.ஆர்.ஓ. : சாவித்ரி.
தமிழர்கள் அதிகம் வாழும் ஆந்திர மாநிலம் சித்தூர் தான் கதைக்களம். அங்கே கம்பெனி ஒன்றில் மெக்கானிக்காக இருக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கிரேன் மனோனர்-செந்திகுமாரியின் மகன் டீஜே அருணாச்சலம். இவரது நண்பர்கள் பாவல் நவகீதன், ஆதித்யா கதிர், தங்கதுரை. அதே ஊரில் கொஞ்சம் வசதியுடன் காரை வீட்டில் வசிக்கிறார்கள் மந்த்ராவும் அவரது மகள் ஜனனியும். மந்த்ராவின் கணவன் ஓடிப்போனதால், ஆம்பளை இல்லாத வீடு என ஈசியாக யாரும் அப்ரோச் பண்ணிவிடக்கூடாது என்பதால், தனது மகளை ரோட்டில் யார் பார்த்தாலும் பளார் விடுகிறார் மந்த்ரா.
அவர்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் தான் டீஜே அருணாச்சலம் இருக்கிறார். அவரது நண்பர்களில் ஒருவர் ஜனனியை லவ் பண்ணுவதாகச் சொல்ல, இதெல்லாம் சரிப்படாது எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான் என எச்சரிக்கிறார் ஜனனி. உடனே தனது நண்பன் அருணாச்சலத்தை இந்த லவ் கேமில் இறக்கி, முடிஞ்சா அவளை ப்ரப்போஸ் பண்ண வை என சவால் விடுகிறான் நண்பன்.
டீஜே—ஜனனிக்கிடையே லவ் பத்திக்கிச்சா? இல்ல புட்டுக்கிச்சா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் ‘உசுரே’.
தமிழும் தெலுங்கும் பேசும் சித்தூர் கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு புதுசு தான். அதே போல் ‘உசுரே’வின் கதைக்களமும் சீன்களும் பழசு என்றாலும் மந்த்ராவின் பண வெறியும் அதற்கு தனது மகளையே துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் நரித்தனமும் கொஞ்சம் புதுசு. ஹீரோ டீஜே அருணாச்சலம் மாண்டேஜ் சீன்களில் ஓகே தான். ஆனா மற்ற சீன்களிலெல்லாம் ரொம்பவே இறுக்கத்துடன் இருக்கிறார். முகத்தையும் ஒரே மாதிரி வைத்துக் கொண்டு அலைகிறார். அவரது நண்பர்களாக வரும் ஆதித்யா கதிர், தங்கதுரை ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்கள். ஹீரோவே சிரிக்காத போது நம்மால் எப்படி சிரிக்க முடியும்?
ஹீரோ தான் அப்படின்னா ஹீரோயின் ஜனனியும் அதே மாடுலேஷன் தான். கண்டிப்புக் கொடுமையான அம்மா தான் இதற்குக் காரணம் என நாமே ஆறுதல்பட்டுக் கொள்ளலாம். டீஜே வீட்டிற்கு பெண் வீட்டார் வந்ததும் காபித்தூள், சர்க்கரை கேட்டு இரண்டு முறை வந்து, அந்தப் பெண்ணை ஏக்கத்துடன் பார்க்கும் சீனில் ரசிக்க வைக்கிறார் ஜனனி. க்ளைமாக்ஸில் ஜனனி எடுக்கும் முடிவு சரியானது தான் என்பதற்கு மிகச் சரியான காரணத்தை கனெக்ட் பண்ணியுள்ளார் டைரக்டர் நவீன் டி.கோபால்.
சித்தூரின் நகர் அழகையும் மலை அழகையும் தனது கேமராவால் அள்ளி வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மார்க் சாய்.
இடைவேளை வரை டி.வி.சீரியல் ரேஞ்சில் சீன்கள் நகர்வதால் உசுரை வாங்கினாலும் கடைசி அரை மணி நேரம் தான் உசுருக்குள் கரைகிறது இந்த ‘உசுரே’.
— மதுரை மாறன்