அங்குசம் பார்வையில் ‘வா வாத்தியார்’
தயாரிப்பு : ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா, டைரக்ஷன் : நலன் குமாராசாமி, ஆர்ட்டிஸ்ட் : கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், பி.எல்.தேனப்பன், நிழல்கள் ரவி, ஜெய்கணேஷ் வித்யா, கருணாகரன், யார் கண்ணன், ஒளிப்பதிவு : ஜார்ஜ் வில்லியம்ஸ், இசை : சந்தோஷ் நாராயணன், எடிட்டிங்: வெற்றி கண்ணன், ஆர்ட் டைரக்டர் : டி.ஆர்.கே.கிரண், ஸ்டண்ட் : அனல் அரசு, பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
எம்.ஜி.ஆர்.இறந்த டிச.24, 1984-ல் பேரன் பிறந்ததால் அவனுக்கு ராமேஸ்வரன் [ கார்த்தி] என பெயர் வைக்கிறார் எம்.ஜி.ஆரின் தீவிர தாத்தா ராஜ்கிரண். ‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் ராமு நினைவாக பேரனை ‘ராமு…ராமு…” என செல்லமாக கூப்பிடுகிறார்ர். எம்ஜிஆரைப் போலவே அவன் நல்லவனாக[??] வளர வேண்டும், வாழ வேண்டும் என விரும்புகிறார் தாத்தா. ஆனால் பேரன் கார்த்தியோ போலீஸ் வேலையில் சேர்ந்து நம்பியார் போல வில்லங்கப்பார்ட்டியாகி, சஸ்பெண்ட் ஆகிறார். இதையெல்லாம் தெரிந்து மனம் நொந்து சாகிறார் ராஜ்கிரண்.
அதன் பிறகு மனம் திருந்தும் கார்த்தியின் உடலுக்குள் எம்ஜிஆரின் ஆவி புகுந்து கெட்டவர்களை அழிக்கிறது.
அடேங்கப்பா…எம்ஜிஆர்.ஆவி கார்த்தி உடம்புக்குள்ளயா? செமத்தியா இருக்குதே…ன்னு சுருக்கமா படிக்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா இரண்டு மணி நேரப்படம் தான் பலமாசமா அயர்ன் பண்ணாமல் கசங்கி, சுருங்கிப் போன சட்டை மாதிரி ஆகிப்போச்சு.
மக்கள் திலகம்னாலே தனி உத்வேகம், உற்சாகம் பிறக்கும். ஆனா இதிலோ எம்ஜிஆரை காமெடி நடிகராக்கிவிட்டார் டைரக்டர் நலன் குமாரசாமி. [ எம்.ஜி.ஆர்.மேல அவருக்கு என்ன கடுப்போ?] படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால் எம்.ஜி.ஆர்.பிறந்தார், வறுமையில் வாழ்ந்தார், சினிமா நடிகரானார், திமுகவில் சேர்ந்தார், எம்.எல்.ஏ.ஆனார், தனிக்கட்சி தொடங்கினார்னு டைட்டில் கார்டு போடுகிறார், வாய்ஸ் ஓவரும் கொடுக்கிறார் டைரக்டர். இதுல என்ன பெரிய கொடுமைன்னா 1963-ல் திமுக எம்.எல்.ஏ.ஆனார்னு வாய்ஸ் ஓவர் கேட்குது, ஆனா எழுத்தில் 1953-ன்னு இருக்கு. இது இரண்டுமே தப்புன்னு டைரக்டரிடம் யாரும் சொல்லலயா? ஏன்னா எம்ஜிஆர் பரங்கிமலை திமுக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றது 1967-ல்.
நம்ம கார்த்திக்கு அப்பப்ப இது மாதிரியான படங்கள் வந்து லைட்டா ஷேக் கொடுக்குது. அப்புறம் உஷாராகி கமர்ஷியல் ஹிட் கொடுக்குறாரு. இதில் எம்.ஜிஆர் ஆவி சுத்தமா செட்டாகல கார்த்திக்கு.
அதிமுக மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆரின் பல்வேறு சினிமா கெட்டப்புகளைப் போட்டு கூட்டத்தை சமாளிப்பார்கள் சிலர். அந்த மாதிரியான சமாளிப்புகூட இதில் இல்லை. வில்லன் சத்யராஜ், அவரின் ‘பெல்கோ’ ஆலை, அதை எதிர்த்துப் போராடும் மஞ்சள் முகம் குரூப்னு சுத்தலில்விட்டிருக்காரு டைரக்டர். ஏழெட்டு எம்ஜிஆர் பாடல்களைப் போட்டு தப்பித்துவிட்டார் மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன்.
“தமிழ் சினிமாவில் கடன் இல்லாத தயாரிப்பாளர் நான் தான்” என இந்த ‘வா வாத்தியார்’ ரிலீசுக்கு முதல் நாள் மகிழ்ச்சியுடன் சொன்னார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அவரின் மகிழ்ச்சி மனசை சங்கடப்படுத்த விரும்பாததால் இதற்கு மேல் இந்த வாத்தியாரை விமர்சித்து வம்பிழுப்பது நாகரீகமல்ல.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.