உளுந்து விதைக்கையிலே … அட இதுல இவ்வளவு இருக்கா?
முதல்வன் படத்தில் வரும் உளுந்து வெதைக்கையிலே என்ற பாடலை பயணத்தின் போது கேட்டேன் கிராமத்துப் பெண் பாடுவதாக அமைந்த பாடல் அது
வைரமுத்துவின் வரிகளில் ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் பாடலுக்கு இசை ஏ .ஆர். ரஹ்மான் பல காலம் அந்த பாடலை தொடர்ந்து கேட்டு வந்தாலும் பல்லவி பகுதியில் வரும் ஒரு சில வரிகள் எனக்கு புரிந்து கொள்ள இயலாமல் இருந்தேன் அவை பின்வருமாறு
” உளுந்து விதைக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே
நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன்
அந்த நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குளி பூத்துப்போனேன்..
வக்கப்படப்பில் கெவுளி கத்த..
வலது பக்கம் கருடன் சுத்த..
தெருவோரம் நெறக்கொடம் பாக்கவும்.
மணிச்சத்தம் கேக்கவும் ஆனதே..
ஒரு பூக்காரி எதுக்க வர.
பசும்பால் மாடு கடக்கிறதே..
இனி என்னாகுமோ?
ஏதாகுமோ? இந்த சிருக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?
என்று வரும் பல்லவி..
இதைப்பற்றி சிந்திக்கவே தோன்றாமல் பாடலின் இசைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட வரிகள் போல என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.
நேற்று தான் எனக்குப்புரிந்தது.
இது இசைக்காக எழுதப்பட்ட வரிகள் அன்று.
தமிழர்கள் காலம் காலமாக கொண்டிருக்கும் “சகுணங்கள்” மீது கொண்ட நம்பிக்கையை பிரதிபலிக்கும் வரிகள் என்று.
பாடல் வரிகளுக்குள் செய்த சிறு மறுஆய்வு வருமாறு..
உளுந்து என்பது மானாவாரி நிலத்தில் நெல்லுக்கு ஊடுபயிராக விதைக்கபடும் பயிர்
மேலும் உளுந்து வளர காற்றில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் . அத்தகைய ஈரப்பதம் குளிர் காலத்தில் மட்டுமே இருக்கும் . தமிழகத்தில் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்கள் குளிர்காலங்களாகும்.
அப்போது அடிக்கும் காற்றை ஊதக்காத்து / கூதக்காத்து என்று அழைப்பார்கள் கிராம் மக்கள். காற்றில் ஈரப்பதம் இருக்கும் காற்று ஊதக்காத்து.
வாடக்காத்து என்றும் சொலவடை உண்டு.
பெரும்பாலும் அந்த மாதங்களில் ஆற்றில் இருந்து வரும் வாய்க்காலில் ஓடையில் தண்ணீர் ஓடும் .ஆகவே அதில் இறங்கி நடந்து போக முடியாது. தாண்டி தான் போகமுடியும்..
இதைத்தான் அழகாக இரண்டு வரிகளில் வைரமுத்து எழுதியிருக்கிறார் பாருங்கள்.
” *உளுந்து வெதைக்கையிலே
சுத்தி ஊதக்காத்து அடிக்கையிலே
நான் அப்பனுக்கு கஞ்சி கொண்டு ஆத்து மேடு தாண்டி போனேன்* ”
அடுத்த வரிகளில்
“அந்த நல்ல நல்ல சகுணத்தில் நெஞ்சுக்குளி பூத்துப்போனேன்” என்கிறாள்
தமிழக மக்களிடம் பண்டைய காலம் தொட்டு சகுணம் பார்க்கும் பழக்கம் இருந்தது என்பதை சங்க நூல்கள் வழி அறிய முடிகிறது.
இது ஒரு நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. வருகிறது.
அது பிரதிபலிக்கும் வகையில் அடுத்த வரிகள் வருகின்றன
“வக்கப்படப்பில் கெவுளி கத்த.
வலது பக்கம் கருடன் சுத்த..”
எனும் வரிகளில்
ஸ்வர்ணலதா ” *வெக்கப்படப்பில்* ” கெவுளி கத்த
என்று பாடியிருப்பார்.
நானும் பல லிரிக்ஸ் வெப்சைட்டுகளில் இந்த பாடல் குறித்து தேடினாலும் அனைத்திலும் “வெக்கப்படப்பு” என்றே இருந்தது.
நானும் வெக்கப்படப்பு என்பது கிராமத்து வீடுகளில் ஒரு பகுதியாக இருக்குமோ? என்று யோசித்து தேடிக்கொண்டிருந்தேன்.
இது குறித்த கிராமத்தில் வசிக்கும் தம்பியிடம் கேட்டேன்.
“வெக்கப்படப்பு” னா என்னது? கிராமத்து வீடுகளில் அது ஒரு இடமா? என்று கேட்டேன்.
அவர் “அப்படி ஒரு இடம் இல்லையே.. ஒரு வேளை வக்கப்படப்பா இருக்கும் ” என்றார்
வக்கப்படப்பு என்பது *வைக்கோல் படப்பு* என்ற சொல்லில் இருந்து மருவி வந்துள்ளது.
நெற்கதிர் அறுத்து மீதம் இருக்கும் வைக்கோலை சேர்த்து குவித்து வைக்கும் இடத்தை ” *வக்கப்படப்பு* ” என்பார்கள்.
கிராமத்தில் ஒரு சொலவகை உண்டு
“அடி காட்டுக்கு
நடு மாட்டுக்கு
நுனி வீட்டுக்கு”
நெற்கதிரின் அடிப்பகுதி – அதை வயக்காட்டில் உரமாக விடப்படும்
நடுப்பகுதி – மாட்டுக்கு வைக்கோலாக மாறும்
நுனியில் இருக்கும் நெற்கதிர் – வீட்டுக்கு வரும்
இதுவே அதன் அர்த்தம்.
வக்கப்படப்பில் கெவுளி கத்த..
இதில் *கெவுளி* என்பது பல்லிக்கு கிராமத்தில் வழங்கப்படும் பெயர்.
*Indian house lizard* என்று அழைக்கப்படும் *பல்லி* மேற்கில் இருந்து கத்துவது நல்ல சகுணம் என்று பார்க்கபடுகிறது.
“வலது பக்கம் கருடன் சுத்த” என்ற வரிகளில்
கருடன் என்று அழைக்கப்படும் கழுகு இடப்பக்கத்திலிருந்து *வடப்பக்கம்* செல்வதை நற்குணம் என்று கூறப்படும்.
நான் கேட்டு அறிந்த செய்தி யாதெனில் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடக்கும் போது கருடன் மேலே வானத்தில் சுற்றுவது நற்சகுணம் என்று நம்பப்படுகிறது.
அடுத்த வரிகள்
“தெருவோரம் நெறகொடம் பாக்கவும்.
மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே..
ஒரு பூக்காரி எதுக்கவர.
பசும்பால்மாடு கடக்கிறதே..
இனி என்னாகுமோ? ஏதாகுமோ? இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ?”
இவையனைத்தும் கிராமங்களில் இன்றும் நல்ல சகுணங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன என்பதை சில கிராமவாசிகளிடம் கேட்டுத்தெரிந்து கொண்டேன்
மேலும் எவற்றையெல்லாம் நற் சகுணங்கள் , கெட்ட சகுணங்கள் என்று நினைக்கிறார்கள் என்று ஆய்வு செய்ததில் பின்வரும் விசயங்கள் கிடைத்தன
பண்டைய காலங்களிலும் தமிழ் மக்கள் பல விஷயங்களுக்கு சகுணங்கள் பார்த்திருப்பது பாடல்கள் மூலம் புலனாகிறது.
அவற்றுள் ஒன்று இதோ
“மையல் கொண்ட மதன்ழி இருக்கையள்
பகுவாய் பல்லி படுதொறும் பரவி
நல்ல கூறுகென நடுங்கி” (அகம்-289)
இவ்வரிகளானது தலைவனைப் பிரிந்த தலைவி, தன் அன்புக் காதலன் வரும் நாளை எதிர் நோக்கியிருக்கும் வேளையில், பல்லியானது நிலைக் கதவுகளிலும், சுவர்களின் மீதும், இருப்பதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள், பல்லியை நோக்கி நல்ல பலன் கூறுதல் வேண்டும் என தன் மனதில் எண்ணிக் கொள்கின்ற விதமாக அமைந்திருப்பதிலிருந்தே, அக்கால மக்களின் நம்பிக்கைகளின் ஒன்றில் முக்கியமானதாக இவை இருந்துள்ளது எனவும் அறிய முடிகிறது.
என்னைப்பொறுத்த வரை சகுணம் என்பது Just a matter of coincidence .
ஒன்றோடு ஒன்று ஒத்து நடக்கும் இரு செயல்களை நாம் முடிச்சுப்போட்டுக் கொள்வதே சகுணம் என்கிறோம்.

யானை , குதிரை , பசு , கன்று , காளை , திருமணமாகாத பெண் , குழந்தையுடன் பெண் , ஆடை அணியாத குழந்தை , சங்கு , தாமரை , பூக்கள் விற்பவர் , பால் ,நிறை குடம் , காகம் இடப்பக்கமிருந்து வடப்பக்கம் செல்வது , பல்லி கத்துவது , வீட்டில் இருக்கும் காகம் கரைவது போன்றவற்றை நற்சகுணம் என்று நம்பினர்.
பூனை குறுக்கே போவது, நாய் குறுக்கே போவது, நாய் ஊளையிடுவது, மண்வெட்டியுடன் எதிரே வருவது, தும்முவது, தலையில் முக்காடு போட்டவர் எதிரே காண்பது , விதவயைக் காண்பது இப்படி பலவற்றை துற்சகுணங்கள் என்று மூடநம்பிக்கை கொண்டிருந்தனர் என்னைப்பொறுத்த வரை இந்த சகுணங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை மூடநம்பிக்கையாகும் .
தன்னம்பிக்கையும், சமூகம் மீது தனிமனிதன் கொண்டிருக்கும் நம்பிக்கை இரண்டு மட்டுமே மனிதவாழ்க்கைக்கு நன்மை சேர்ப்பது.
இருப்பினும் இந்தப்பாடல் வரிகள் மூலம் இத்தனை விசயங்களை கற்க முடிந்தது சிறப்பான விசயம்.
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.