அங்குசம் பார்வையில் ‘வல்லான்’
தயாரிபு : வி.ஆர்.டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி’ வி.ஆர்.மணிகண்டராமன் & வி.காயத்ரி, டைரக்ஷன் : வி.ஆர்.மணிசேயோன். நடிகர்—நடிகைகள் : சுந்தர் சி., தான்யா ஹோப், ஹீபா பட்டேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம், டி.எஸ்.கே., ஜெயக்குமார், சாந்தினி தமிழரசன். ஒளிப்பதிவு : மணி பெருமாள், இசை : சந்தோஷ் தயாநிதி, எடிட்டிங் : தினேஷ் பொன்ராஜ், ஆர்ட் டைரக்டர் : சக்தி வெங்கட்ராஜ்,. எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : அசோக் சேகர், பி.ஆர்.ஓ. : சதீஷ் ( எய்ம் )
13 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டு, பலவித பிரச்சனைகளால் சிக்கி, அந்தப் பிரச்சனைகளிலிருந்து மீண்டு இந்த 2025 ஜனவரி 12—ஆம் தேதி, அதாவது பொங்கலுக்கு ரிலீசானது சுந்தர் சி.டைரக்ஷனில் தயாரான ‘மதகஜராஜா’. படம் தாறுமாறு ஹிட்டடித்து கலெக்ஷனை அள்ளியதால், அந்த சூடு ஆறுவதற்குள் அதே சுந்தர் சி.ஹீரோவாக நடித்த இந்த ‘வல்லான்’ படத்தை ரிலீஸ் பண்ணியுள்ளார்கள்.
‘இருட்டு’, ‘பட்டர்ஃப்ளை’ வரிசையில் சுந்தர் சி.நடித்திருக்கும் க்ரைம் –த்ரில்லர்-இன்வெஸ்டிகஷன் வகையைச் சேர்ந்தது தான் இந்த வல்லானும். கிறிஸ்தவ மத போதகரான ஜெயக்குமாரின் மருமகன் தொழிலதிபதிபர் கமல் காமராஜ். இவரது மனைவி, அதாவது ஜெயக்குமாரின் மகள் அபிராமி வெங்கடாசலம். அந்த கமல் காமராஜ், திடீரென ஒருநாள் அவரது பண்ணைவீட்டில் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார். வழக்கம் போல சைக்கோ கொலைகாரன் தான் என போலீஸ் முடிவு செய்து விசாரணையை மேற்கொள்கிறது. வழக்கம் போல் சஸ்பெண்டான போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் சி.க்கு மட்டும் இது சைக்கோ செய்த கொலை அல்ல எனத் தெரிகிறது. டிபார்ட்மெண்டில் இல்லாவிட்டாலும் இவரிடம் கொலை வழக்கை ஒப்படைக்கிறார் ஏ.சி.
கொலையாளி யார்? என்பதையும் கொலையானவன் யார் என்பதையும் க்ளைமாக்ஸில் தெளிபடுத்துகிறான் இந்த ‘வல்லான்’. கடைசி அரை மணி நேரம் தவிர, மீதமிருக்கும் ஒன்றரை மணி நேரமும் நம்மை வதைக்கிறான் இந்த ‘வல்லான்’.
சுந்தர் சி.க்கு கொஞ்சமும் ’மேட்ச்’ ஆகாத சட்டையை மீண்டும் போட்டிருக்கிறார் டைரக்டர் மணி சேயோன். கொலை நடந்த ஸ்பாட்டில் அங்கிட்டும் இங்கிட்டும் நடக்கிறார், செல்போனில் ஃபோட்டோ எடுக்கிறார், மாடலிங் மங்கை ஹீபா பட்டேலிடம் விசாரிக்கிறார் சுந்தர் சி. அவ்வளவு தான். தான்யா ஹோப்புடனான சுந்தர் சி.யின் ஃப்ளாஷ்பேக் கலர்ஃபுல்லாவும் குளுகுளுப்பாகவும் இருக்கு.
பொதுவாக இந்த மாதிரியான க்ரைம்-த்ரில்லர் கதைகளில் இடைவேளை வரை கொலையாளியைக் காட்டாமலேயே இருப்பார்கள். இடைவேளைக்குப் பின் ‘லீட்’எடுப்பார்கள். ஆனால் இதிலோ கடைசி வரை குழப்பியடித்துவிட்டார் டைரக்டர். தான்யா ஹோப்பைவிட ஹீபா பட்டேலுக்குத் தான் சாதா சீன்களும் ஜிலுஜிலு சீன்களும் அதிகம். அபிராமி வெங்கடாசலம் கொஞ்சம் முத்தின கத்திரிக்காய் மாதிரி இருக்கார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மியூசிக் டைரக்டர் சந்தோஷ் தயாநிதியும் கேமராமேன் மணி பெருமாளும் தங்களால் முடிந்த வரை கடமையாற்றியிருக்கிறார்கள். இந்த ‘வல்லான்’ ரொம்பவே ‘வீக்’கானவன்.
— மதுரை மாறன்.