அங்குசம் பார்வையில் ‘வீரவணக்கம்’
தயாரிப்பு & இயக்கம்: ‘விசாரட் கிரியேஷன்ஸ்’ அணில் வி.நாகேந்திரன். நடிகர்-நடிகைகள்: சமுத்திரக்கனி, பரத், பி.கே.மேதினி, சுரபி லட்சுமி, ரித்தேஷ், பிரேம்குமார், ஆதர்ஷ், ஐஸ்விகா, ஒளிப்பதிவு : கவியரசு, இசை : எம்.கே.அர்ஜுனன் பெரும்பாவூர், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன். பி.ஆர்.ஓ : சதீஷ் [ எய்ம் ]
நாகர்கோவில் பகுதியில் மிகப்பெரிய பணக்காரராக, முரட்டு மீசையுடன் இருந்தாலும் கூலித் தொழிலாளர்கள், தலித்துகளுக்கு உதவும் குணமுள்ள கம்யூனிஸ்டாக இருக்கிறார் பரத். தனது பண்ணைவீட்டில் தலித்துகளை உட்கார வைத்து, உறவு சொல்லி அழைக்கும் அளவுக்கு சமதர்மவாதியாக இருக்கிறார் . ஆனால் அவரின் பக்கத்து ஊரில் ஆதிக்க சாதி வெறியர்களால் தலித்துகள் ரொம்பவே கொடுமைக்குள்ளாகி, இவரிடம் வந்து குமுறுகிறார்கள்.
அந்த மக்களுக்கு சுயமரியாதையையும் போராட்ட குணத்தையும் ஊட்ட கேரளாவில் ஆலப்புழா அருகே உள்ள கிராமத்திற்கு அம்மக்களை அழைத்துச் செல்கிறார்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய புரட்சியாளர் பி.கிருஷ்ணப் பிள்ளையின் வரலாறு தான் இந்த ‘வீரவணக்கம்’. அந்த மாபெரும் புரட்சியாளரான கிருஷ்ணப் பிள்ளையுடன் இணைந்து போராட்டக் களத்தில் நின்ற மேதினி அம்மா என்பவருக்கு இப்போது வயது 97. அந்த மேன்மைமிகு தாயின் பார்வையில் தான் கதை 1940—க்குச் செல்கிறது. அங்குள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்களை அடிமையாக்கி, அந்த சமூக பெண்களை சூறையாடும் ஆலப்புழா ஜமீன் அழித்தொழிப்பு, அப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை கிருஷ்ணப் பிள்ளை கட்டமைத்து அடித்தட்டு மக்களுக்கான போராட்ட முன்னெடுப்பு இதை அழுத்தமாகவும் ஆழமாகவும் திரைப்படமாக்கியுள்ள இயக்குனர் அணில் வி.நாகேந்திரனுக்கு செவ்வணக்கம்.
ஃபேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் தளம், யூடியூப்களில் ரீல்ஸ் போதைக்கு அடிமையாகி, மூளை மழுங்கிவிட்ட அனைவருக்கும் குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள், ஆண்கள் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மாபெரும் போராளியின் வரலாற்றுப் பதிவு தான் இந்த ‘வீரவணக்கம்’. இதைப் பார்த்து கொஞ்சமாவது மண்டைக்குள்ள ஏத்துனா உங்க வருங்கால சந்ததியும் நல்லாயிருக்கும்டா ரீல்ஸ் மெண்டல்களா…
கிருஷ்ணப் பிள்ளையாக அண்ணன் சமுத்திரக்கனி நம் மனதிற்குள் ஆழமாக பதிந்துவிட்டார். தங்கம்மாவுடன் காதல், பெண் கேட்கும் துணிவு, இதெல்லாமே அழகியல் காட்சிகள்.
போலீஸ் வேட்டைக்குத் தப்பி பல வேடங்களில் தலைமறைவு வாழ்க்கை, “உங்க ஜமீன் மாதிரி இருபது ஜமீன்களை விலைக்கு வாங்கும் பெரும் பணக்காரர் இ.எம்.எஸ். இப்ப நமக்காக போராடுகிறார். ஏ.கே.கோபாலன் இருக்கார்” என கூலித் தொழிலாளர்களுக்கு போராட்ட உணர்வையும் சுயமரியாதையும் ஊட்டும் காட்சியில் சமுத்திரக்கனி ஜொலிக்கிறார்.
இ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன் போன்றவர்கள் மக்களிடம் எழுச்சியுரை ஆற்றும் போது, ஒரு சிலரின் கைகளில் இருக்கும் செங்கொடி, கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து பெரும் மக்கள் கூட்டமே செங்கொடியைப் பிடித்து வருவதைப் பார்த்தாலே நமக்குள் சிலிர்ப்பு மேலிடுகிறது.
க்ளைமாக்ஸில் கிருஷ்ணப் பிள்ளை வாழ்ந்த வீட்டின் முன்பாக இருக்கும் அவரது சிலைக்குக் கீழே நின்றபடி, “இந்த சாதி, மதமெல்லாம் மனுசங்க கண்டுபிடிச்சது தான். அதை ஒழித்துக்கட்டும் சக்தி நம்மிடம் இருக்கு” என மேன்மைமிகு அம்மா மேதினி அவர்கள் பேசும் வசனம், என்றென்றும் நிதர்சனம்.
காட்சிப்படுத்தலில் சில குறைகள் இருந்தாலும் மாபெரும் போராளி கிருஷ்ணப் பிள்ளையின் வாழ்க்கையை படமாக எடுத்து பாடம் படிக்கச் சொன்னதற்காகவே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தோழர் அணில் வி.நாகேந்திரனுக்கு ‘ரெட் சல்யூட்’
— மதுரை மாறன்