கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் படித்த இளைஞர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிர்கால நிச்சயமும் விதைத்து வரும் அமைப்பு வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம். இது சாதாரண தகவல் பரிமாற்றமாக அல்லாமல், கட்டணமில்லா மனிதநேய சமூக சேவையாக மாற்றி சாதனை படைத்துள்ளது.
இதுவரை, இந்த இயக்கத்தின் மூலம் 34,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, எந்தவித கட்டணமும் இன்றி, 2 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை தனியார் நிறுவனங்களில் பெற்றுத்தந்துள்ளது என்பது, இந்த இயக்கத்தின் சேவை வீச்சையும், நம்பகத்தன்மையையும், நேர்மையையும் வெளிப்படுத்தும் குறிப்பிடத்தனக்க சாதனையாகும்.
இந்த சேவையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் உயரிய நோக்குடன், வேலை தேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் கட்டணமின்றி ஒரே தளத்தில் நேரடியாக இணைக்கும் வகையில், vvvsi.com என்ற புதிய வேலைவாய்ப்பு இணையதளம் மதுரையில் இருந்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த இணையதளத்தை சமூக அக்கறையும் மனிதநேயப் பொறுப்பும் கொண்ட நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார்.
“ஒரு இளைஞனுக்கு வேலை கிடைப்பது என்பது அவன் குடும்பத்தின் எதிர்காலமே மாறுவது போன்றது. அந்த மாற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக, கட்டணமின்றி, வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் தொடர்ந்து ஒரு உறுதியான பாலமாக இருந்து வருகிறது” என்றார் இயக்கத்தின் தலைவர் விஜய் சேதுபதி.
இந்த நிகழ்வின்போது, இயக்கத்தின் ஊழியர்கள், தன்னார்வலர்கள், அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை இயக்கத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வீரராஹவன் செய்திருந்தார்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.