பிணத்தை புதைக்க விடாமல் அடாவடி செய்யும் ஊர்ப்பெருசுகள் !
ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே
உடலை புதைக்க விடுவோம் என தெரிவிப்பதாக குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் கோட்டூர் ஆர்.சி. தெருவை சேர்ந்த ஜான் பீட்டர் நேற்று (16.05.2023) இரவு இறந்து விட்டார். இவருக்கு லிகோரியா என்ற மனைவி, அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமோஸ் என நான்கு மகன்கள் உள்ளனர்.
இறந்துபோன ஜான் பீட்டரின் மூன்றாவது மகனான ஆரோன் திருச்சியில் படிக்கும் போது இந்து மதத்தை சேர்ந்த பெண்னை காதல் திருமணம் செய்ததால் அப்போது, இக்குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். பின்னர் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கட்டாயப்படுத்தினர். இதனை தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் காலில் விழுந்து குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
ஆரோனின் திருமணம் கோட்டூர் ஆர்.சி. தெருவில் உள்ள கிருஸ்தவ தேவ ஆலயத்தில் நடத்த எதிரிப்பு தெரிவித்த நிலையில், சின்னமனூர் ஆர்.சி .கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்துதான் திருமணத்தையும் நடத்தியுள்ளனர்.
இந்த பின்னணியிலிருந்துதான், தற்பொழுது இறந்த ஜான் பீட்டர் உடலை ஊர் பெரியவர்கள் கிறிஸ்தவ சடங்கு முறைகளை கடைபிடிக்கவும் அவரது உடலைப் புதைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜான் பீட்டரின் சடலத்தை வீட்டின் முன்பாக கிடத்தி வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறது, அவரது குடும்பம். முன்பைப்போல மீண்டும் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் அவரது மொத்தக்குடும்பமும் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என அடாவடி செய்து வருகிறார்கள், “ஊர் பெருசுகள்”.
– ஜெ.ஜெ.