கள்ளச்சாராயத்தை தொடர்ந்து கள்ளச்சந்தையில் குட்கா !
கர்நாடகா மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் !
கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி பைபாஸ் சந்திப்பில் சேலம் மாநகர காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் இன்று காலை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரிலிருந்த சேலம் கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி லிங்குராஜ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் காரில் கடத்தி வரப்பட்ட குட்கா மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தவை என சுமார் 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், வந்து சேர்ந்திருக்கிறது, ”கள்ளச்சந்தையில் குட்கா”!
– சோழன் தேவ்.