ராமதாஸ் வழியில் திருமா
பெரியார் சொன்னது போல இங்கு யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல பொதுவாழ்வு என வந்த பிறகு அவர்கள் கண்டிப்பாக விமர்சனங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அந்த வகையில் திருமாவளவன் மீது இப்போது வைக்கப்படும் விமர்சனம் என்பது அவர் மீது கடந்த காலத்தில் கட்டப்பட்ட பிம்பம் நொறுங்குவதால் அவருடைய தொண்டர்கள் தாங்கிக்கொள்ள முடியாமல் திருமாவை விமர்சிப்பவர்களை துரோகிகள் என்றும் சாதியவாதிகள் என்றும் முத்திரை குத்த தொடங்கியுள்ளார்கள்.
நாம் தமிழர் சீமான் எப்படி பிற இன மக்களை தெலுங்கர்கள் கன்னடர்கள் எனச் சொல்லி ஒரு முத்திரை குத்தி ஒதுக்கும் நிலையை உருவாக்கினாரோ அப்படித்தான் திருமாவளவனுடைய தொண்டர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருமா தரும் பேட்டிகளில் சொல்லும் கருத்துக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. தவெகாவிற்கு விசிக ஆதரவு தந்ததை யாரும் விமர்சிக்கவில்லை. தவெகவுடன் இணைவதற்காக திருமாவளவன் நடந்துக்கொண்ட முறையும் அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக திருமாவளவன் செய்த சதிகளால் தான் அவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ஒரு அரசியல் கட்சி தொடங்குபவர்கள் யாரும் அதிகாரத்திற்கு வரத்தான் விரும்புவார்கள் அந்த வகையில் திருமாவளவன் அதிகாரத்திற்கு வர விரும்புவதை யாரும் குற்றம் சொல்லமுடியாது. ஆனால் அதற்கான உழைப்பும் தகுதியும் தன் கட்சிக்கு இருக்கிறதா என்பதை அவர் எப்பொழுதும் ஆய்வுக்கு உட்படுத்தவே இல்லை? என் சாதி வாக்குகள் இவ்வளவு இருக்கிறது அதனால் எனக்கு பதவி தா என்கிறார் அல்லது என்கிறார்கள். பிறசாதியினருக்கு தரும்போது பட்டியல்சாதியினருக்கு தரவேண்டும் அதுவே நீதி. ஆனால் என் அமைப்புக்கு அதிகாரம் தா என்பதே கேள்விக்கு உட்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
பட்டியல் சமூகமக்கள் என் பின்னால் நிற்கிறார்கள் அதற்காகவே எங்களுக்கு பதவி தர வேண்டும் என கேட்பது எந்த விதத்திலும் சரியானதாக இருக்க முடியாது. பட்டியல் சமூக மக்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள் என்பதே அபத்தமானது. திருமாவளவன் அரசியல் வீழ்ச்சி என்பது இப்பொழுதல்ல சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசியல் களத்தில் தொடங்கிவிட்டது.

தவெக கட்சி உருவான பின் விசிகவுனுடைய வாக்குகள் என்பது பெரும்பான்மையாக விஜய் கட்சிக்கு சென்றுள்ளது. மற்ற சாதிகளின் வாக்குகள் செல்லவில்லையா? என கேட்டால் சென்று இருக்கிறது அது பட்டியல் சமூக வாக்குகளுக்கும் மற்ற சமூக வாக்குகளுக்கான வித்தியாசத்தை எடுத்து பார்த்தாலே தெரிந்து விடும்.
இன்னொரு உதாரணத்தைக் கூட தெளிவாக சொல்லலாம் அதிமுகவிலிருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணையும் மிகப்பெரிய அயோக்கியத்தனமான அரசியலை முதலமைச்சர் விஜய்யும் அமைச்சர் ஆதவ்அர்ஜுனாவும் செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு முட்டுக்கொடுக்கும் திருமாவளவனோ, இடதுசாரி கட்சிகளும் இதனை கவனிக்காததுப்போல் கடக்கிறார்கள். முதலில் மூன்று தொகுதிகள் ராஜினாமா செய்ததில் இரண்டு தொகுதிகள் பட்டியல் சமூகத்துக்கான தனி தொகுதிகள்.
பட்டியல் சமூகத்துக்கான ஒதுக்கப்பட்ட தனி தொகுதிகளில் நாம் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்கிற கணக்கில் தான் அந்த தொகுதிகளின் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யவைத்துள்ளார்கள். இதைக் கூட புரிந்து கொள்ள முடியாதவரா திருமாவளவன் என கேட்டால் அவருக்கு தெரியும். பதவி மோகம் கண்ணை மறைத்துக் கொண்டிருக்கிறது இப்பொழுது விட்டால் வேறு வாய்ப்புகள் தன் கட்சிக்கு இல்லை என நினைக்கிறார்.

அவர் நினைப்பது ஒருபுறம் இருந்தாலும் மற்றொன்றையும் அவள் கவனத்தில் கொள்ள வேண்டும், இந்த பதவி என்பது எப்படி வருகிறது இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை இன்னமும் உணர்ந்து கொள்ளாதவராக திருமா இருக்கிறாரா என கேட்டால், மீண்டும் சொல்கிறேன் அவருக்கு எல்லாம் தெரியும். அவருக்கு அதிகார மோகம் உச்சத்தில் வந்துள்ளது. அதனை அவர் மனதில் புகுத்தியது காங்கிரஸ். பட்டியல் சமூகத்துக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்துவிடும், உயர் பதவிகள் கிடைத்துவிடும் என நினைக்கிறார். இது இந்தியா என்பது மற்றவர்களை விட திருமாவுக்கு நன்றாக தெரியும். தெரிந்தே ஒரு நடிகர் கட்சியோடு சேர்ந்ததால் அவரும் நடிக்கிறார்.
திருமாவளவன் தமிழக அரசியல் களத்தில் இன்னொரு ராமதாஸ்சாக மிளிரும் வேலைகளை செய்கிறார்.
– ராஜ் ராஜ்பிரியன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.