நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். பணக்காரர்களைப்போல் செலவு செய்யும் பழக்கத்தில் உள்ளவர்கட்கும் அவர்களைத் தட்டிக்கேட்கும் உறவினர்கட்குமான உரையாடல். வரைமுறையற்ற செலவிடும் பழக்கத்தை ஏற்பதும் மறுப்பதுமான பேச்சு.
இன்றைய பொருளியல் உலகில் செலவிடும் பழக்கத்தை ஒருவரால் கட்டுப்படுத்தவே இயலாது. கட்டாயத் தேவையுள்ள பொருள்களைத்தான் நாம் வாங்கிக்கொண்டிருக்கிறோமா ? இது புதிதாக இருக்கிறதே, இது இவ்வாறு பயன்படுமே, இதனை வாங்கிப் பார்ப்போமே என்று கண்ட கண்ட பொருள்களை வாங்கிக் குவிக்கிறோம்.
தம் பழக்கங்களைச் சீராய்ந்து ஆராய்ந்து ஒரு கட்டுக்குள் கொண்டுவர விரும்பினால் அவர் தமது செலவிடும் பழக்கத்தை முதலில் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஏனென்றால், செலவிடுவது என்பதற்கு எதிரான ஆக்கச் செயல் சேமிப்பது. ஒவ்வொரு வீண்செலவும் எதிர்காலத்தில் பெருமதிப்பாக உயரப் போகின்ற சேமிப்புச் செல்வத்தை அழிப்பதாகும்.
1999ஆம் ஆண்டு ஒளித்திருநாளன்று என்னிடம் முப்பதாயிரம் பணம் இருந்தது. அன்றைக்கு ஒரு பவுன் தங்கத்தின் விலை மூவாயிரம். அம்முப்பதாயிரத்தைத் தங்கமாக வாங்கியிருந்தால் பத்துப் பவுன் வாங்கியிருக்கலாம். இன்றைக்கு அதன் மதிப்பு பன்னிரண்டு இலட்சங்கள்.
காற்சட்டைப் பையில் அப்பணத்தோடு நண்பர் ஒருவரைக் காணச் சென்றேன். பக்கத்திலேயே ஒரு தொலைக்காட்சி விற்பனையகம். அந்நேரத்தில் வீட்டில் இருபத்து ஓரங்குலத் தொலைக்காட்சி இருக்கிறது. அது அருமையாகச் செயல்பட்டுக்கொண்டுமிருக்கிறது. ஒளித்திருநாள் சிறப்பு விற்பனையாக இருபத்து ஒன்பது அங்குலத் தொலைக்காட்சிப் பெட்டி இருபத்து ஒன்பதாயிரத்திற்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டவுடன் வாங்கியே ஆகவேண்டும் என்று ஏற்பட்ட உணர்வுந்தலைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. உடனே வாங்கிவிட்டேன்.
அதன் பெரிய திரையில் தோன்றிய காட்சிகளால் காட்சியின்பமே மாறியது என்று என்னால் கூறமுடியவில்லை. அப்போது அந்தச் செலவு எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. காலம் நகரும்போதுதான் தொலைக்காட்சிகளின் வடிவங்கள் மாறின. இன்றைக்கு அது எங்கே என்றே தெரியவில்லை. ஆனால், அந்நேரத்தில் நான் பத்துப் பவுன் தங்கம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியிருந்தேன் எனில் அது பன்னிரண்டு இலட்சத்திற்கு மதிப்பேறியிருக்கும். எனக்கு அந்தச் செலவுதான் என்றைக்கும் மறக்க முடியாத படிப்பனை.

இத்தகைய அணுகுமுறைகளைச் சிலர் நகையாடலாம். அன்றைக்குத் துய்த்த மகிழ்ச்சிக்கு ஈடாகுமா என்று நினைக்கலாம். துய்ம்மகிழ்வு என்பது ஒருநாள் நிலையாகாது. அது எதிர்காலத்திலும் உறுதிப்பட்டதாக வேண்டும். செலவிடும் தொகைக்கு அதனினும் பன்மடங்கு பயன்மதிப்பு உருவாகவேண்டும். ஐந்நூறு உரூபாய்ச் செருப்பும் ஐயாயிரம் உரூபாய்ச் செருப்பும் ஒரே பயன்மதிப்பைத்தான் உருவாக்குகின்றன. பார்த்த நொடியில் கண்மயக்கி இழுத்துச் செல்லும் செலவினங்கள் நம் எதிர்காலச் செல்வநிலையைக் கரைக்கின்றன.
இவ்வாறு சொல்வதனால் எல்லாவற்றையும் இறுக்கிப் பிடித்துத்தான் வாழவேண்டும் என்கிறேனா ? இல்லை இல்லை. வாழ்க்கையின் கட்டாயத் தேவைகட்குத் தயங்காமல் செலவிடவேண்டும். உங்கள் செலவின் பயன்மதிப்பு எத்தகையது என்று தொடர்ந்து சரிபார்த்துக்கொள்ளுங்கள். பயன்பாடே இல்லாத, அல்லது குறைவான பயன்பாடுடைய ஒன்றுக்காகப் பெருந்தொகையை இழக்கவேண்டா. நடைப்பயிற்சிக்கே போகமாட்டீர்கள், அதற்கென்று ஐந்தாறு காலணிகளை வாங்கி வைத்திருப்பீர்கள்.
தாழ்ந்த பொருளைவிடவும் உயர்ந்த பொருளைத்தான் வாங்கவேண்டும். குறைநாள் உழைக்கும் பொருளைவிடவும் நெடுநாள் உழைக்கும் பொருளைத்தான் வாங்கவேண்டும். ஒரு நேரத்தில் ஒன்றைத்தான் பயன்படுத்த முடியும் என்னும்போது அவ்வகைப் பொருள்களைப் பலவாக வாங்கிக் குவிக்காதீர்கள். மறுமதிப்பே இல்லாத பொருள்களை வாங்குவதற்கு அஞ்சுங்கள்.
இவ்வுலகம் உங்களைச் செலவிட வைக்கவே தொடர்ந்து ஊக்குவிக்கும். அதனை வாங்கு, இதனை வாங்கு என்று தொடர்ந்து பளபளக்கும். அது விற்பனைக்காக ஏங்குகிறது. அக்கடைகள் ஒவ்வொன்றிற்கும் உங்கள் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எப்படியாவது தம்மிடம் செலவிட வைப்பதே நோக்கம். அதற்காகத்தான் அகன்ற கதவுகளோடு திறந்திருக்கின்றன. உங்கள் செலவினங்களால் உண்மையிலேயே யார் உடனடிப்பயன் பெறுகிறார்கள் என்று எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
– கவிஞர் மகுடேசுவரன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.