நியோமேக்ஸ் மோசடி வழக்கில் அடுத்து என்ன ? தேனியில் செப்-29 ஆலோசனைக்கூட்டம் !
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் அடுத்து என்ன ? தேனியில் செப்-29 ஆலோசனைக்கூட்டம் ! நியோமேக்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த சட்டப்போராட்டக்குழுவின் சார்பில், எதிர்வரும் செப்டம்பர்-29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேனியில் ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ள 8000-க்கும் அதிகமான முதலீட்டாளர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் அவ்வளவு பேரும் கூட முடியாது என்ற காரணத்தால், ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு மாவட்டம் அல்லது இரண்டு மூன்று மாவட்டங்களை ஒருங்கிணைத்து குறைந்தது ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையிலான ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை எவ்வாறு அணுகுவது? அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுநல வழக்குகளை தாக்கல் செய்வது ஆகிய நோக்கங்களுக்காகவே இத்தகைய ஆலோசனைக்கூட்டங்களை நடத்துவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
இது தொடர்பாக, நியோமேக்ஸ் குழும நிறுவனங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த சட்டப்போராட்டக்குழுவின் சார்பில் சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
அவர் அளித்துள்ள விளக்கத்தில், “29/09/2024 அன்று தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுத்தவர்கள், விரைவில் நல்ல முறையில் சட்ட ரீதியாக தீர்வு பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம். (CSR- copy) 161(3) statement நகல் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது கிடைப்பதற்கு இன்னும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கு செலவுகளுக்கு என யாரும், யாரிடமும் பணம் வசூலிக்க மாட்டார்கள். உங்களிடமிருந்து பெறப்படும் ஆவணங்களின் நகல், வழக்கு தொடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். அசல் ஆவணங்களை யாரிடமும் காண்பிக்க வேண்டியதில்லை. நியோமேக்ஸ் குழும நிறுவனங்களின் முழு நேர ஏஜெண்டுகளில் யார், மூலமாக முதலீடு செய்யப்பட்டது, அவர்களின் தலைவர்கள் (லீடர்கள்) விவரம், ஏஜெண்டுகள், லீடர்கள் மற்றும் நிறுவனத்தின் சொத்து பற்றி தெரிந்த விவரங்களை கொண்டு வரவும்.
நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துக்கள் மிக குறைவு. நம்மிடமிருந்து வசூல் செய்த பணத்தை நிறுவனத்தார்கள் தங்களின் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள். அதாவது அவர்களின் பெயரில், மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள் மற்றும் ரொக்கப் பணமாக பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை கைப்பற்றினால் தான் நமக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
மோசடியில் ஈடுபட்டுள்ள ஏஜெண்டுகளிடம் உள்ள நிறுவனத்தின் பினாமி சொத்துக்களை கைப்பற்ற சட்ட ரீதியாக தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். சரியான தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்றால் வழக்கு முடிவுக்கு வர கால தாமதம் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.
வேண்டும் என்றே வழக்கை இழுத்தடித்து இறுதி தீர்ப்பு கிடைப்பதற்கு பல வருடங்கள் காத்திருக்க வைக்க வேண்டும். பல வருடங்கள் கழித்து எதை, எப்படி கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள தயார் என்ற மன நிலைக்கு பாதிக்கப்பட்டவர்களை ஆளாக்க வேண்டும் என்ற தீய எண்ணங்களுடன் நிறுவனம் மற்றும் அதனை சார்ந்தவர்கள் செயல்படுகிறார்கள்.
காலம் கடந்து கொண்டே போனால் சொத்தின் மதிப்பு கூடிக் கொண்டே போகும். அதனால் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் சிறிதளவு சொத்துக்களை வைத்து அனைவருக்கும் தீர்வை ஏற்படுத்தி விடலாம் என்ற கெட்ட எண்ணத்தில் தான் நிறுவனம் பல திட்டங்களை அவர்களுக்கு சாதகமாக செயல்படும் இரண்டு சங்கங்கள் மூலமாக உள் நோக்கத்துடன் செயல்படுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வை தரக் கூடாது மோசடியாக சம்பாதித்த பெரும்பாலானவற்றை நிறுவனத்தார்களே வைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இதை வெளிப்படையாக அவர்களின் 5AM club zoom meeting மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது.
காலம் கடந்து போனால் ஒன்று பட்டிருக்கும் சில குழுக்களை பல வழிகளில் பிரிந்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். அப்பொழுது தீவிரமாக போராட யாரும் முன் வரமாட்டார்கள் என்ற தீய எண்ணங்கள் நிறுவனத் தார்களிடம் ஏற்பட்டுள்ளதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
தேவையான வழக்குகளை தொடுக்கா விட்டால் நிச்சயமாக விரைவில் தீர்வு கிடைக்காது. கூட்டு முயற்சியில் தொடுக்கப்படும் வழக்குகள் மூலமாக அனைவருக்கும் ஒரே மாதிரியான தீர்வு கிடைக்க கால தாமதம் ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், வழக்கு செலவுகளை சமாளித்துக் கொள்வதற்கு இயன்றவர்கள், வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து கொள்ள தெரிந்தவர்கள், வழக்குகளின் தன்மைகளை புரிந்து கொள்ள இயன்றவர்கள் மற்றும் வழக்கு விசயமாக வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் நீதி மன்றங்களுக்கு அலைய ஆரோக்கியம் உள்ளவர்கள், முக்கியமாக தனியாக வழக்கு தொடுத்தால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள், தனியாகவோ இல்லை சில நண்பர்கள் உடன் கூட்டு சேர்ந்து மாவட்ட நீதி மன்றங்களில் சிவில் வழக்குகளை தொடுப்பதற்கு தயாராகி விட்டார்கள்.
சிலர் குற்றவியல் வழக்குகளை ஏஜெண்டுகள் மீது கொடுத்துக் கொண்டிருகிறார்கள். அப்படி செய்ய இயலாதவர்களுக்கு தான் இந்த கூட்டத்தின் மூலமாக அவர்களிடமிருந்து வழக்கு தொடுக்க தேவையான ஆவணங்களை பெற்று பொது நலனுடன் கூடிய வழக்குகளை தாக்கல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்கு பக்க சங்கம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சங்கம் போன்று சந்தா வசூல் செய்யவோ, ஏமாற்றி settlement affidavit ஆவணங்களில் கையொப்பம் பெறவோ, அசல் ஆவணங்களை கைப் பற்றவோ மற்றும் 5A செட்டில்மென்ட் முறையில் நிலம் மூலமாக விரைவில் தீர்வு என்ற ஏமாத்து வேலைகளை செய்து நிறுவனத்திற்கு சாதகமாக காலம் கடத்தும் வேலைகளை செய்வதற்கோ இந்த கூட்டம் கூட்டப் படவில்லை.
பாதிக்கப்பட்டவர்களிடம் சட்டத்திற்கு புறம்பான தீர்வை குறுக்கு வழிகளில் ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என கூறும் இரண்டு சங்கங்கள் செய்த ஏமாற்று வேலைகளால் பலருக்கும் பல விதமான சந்தேகங்கள் ஏற்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சட்டபூர்வமாக நிலமாக செட்டில்மென்ட் செய்து கொடுக்க இயலாது என நன்றாக தெரிந்திருந்தும் மக்களை நம்ப வைத்து மோசம் செய்த இரண்டு சங்கங்களைப் பற்றி மக்கள் இப்பொழுது புரிந்து கொண்டார்கள்.
இப்பொழுது ஒரு புராஜெக்ட்டை மூத்த குடிமக்களுக்கு தீர்வு காண்பதற்கு என தனியாக ஒதுக்கி அதனை விற்று பணமாக்கி தீர்வு ஏற்படுத்த இயலுமா? இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட உடன், மோசடி செய்த நிறுவனம் மற்றும் அதனை சார்ந்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக வைத்திருக்கும் சொத்துக்களை கைப்பற்ற பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறைக்கு அதிகாரம் உண்டு. அவற்றை கைப்பற்றி ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்து அளிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் உட்பட சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மீது எந்த உரிமையும் எடுத்துக் கொள்ள இயலாது. அப்படி இருக்கும் பொழுது எங்கிருந்து எப்படி ஒரு தனி புராஜெக்ட் இவர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்படும்.
ஏதாவது ஒன்றை புதுசு, புதுசாக சொல்லி மக்களை நம்ப வைத்து காலம் கடத்துவதற்காக செய்யப்படுபவை இவை என்பதை பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புகார் கொடுக்காத பெரும்பாலோருக்கு ரொக்கப் பணமாக தனிப்பட்ட முறையில் காவல்துறை மற்றும் நீதி மன்றத்திற்கு தெரியாமல் செட்டில்மென்ட் செய்து கொடுக்க இயலாது.
நிலமாக செட்டில்மென்ட் என்ற திட்டத்தை ஏன் இதுவரை செயல்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது சட்டத்திற்கு புறம்பான செயல் அதை செய்ய இயலாது. முதலாவதாக சட்டத்தில் அதற்கான வழிமுறைகள் வகுக்கப்படவில்லை. அது எதற்காக என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் பாரபட்சம் ஏற்படும். அதை நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளாது. நீதி மன்றம் சென்று இவர்களுக்கு சாதகமாக உத்தரவு வாங்க இயலாது. அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை அனைவரும் அறிவர்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எந்த வகையிலும் செட்டில்மென்ட் கொடுக்கக் கூடாது என்று தான் நிலத்தின் விலையை பல மடங்கு உயர்த்தி கூறுகிறார்கள். மேற்கொண்டு செட்டில்மென்ட் தொகையில் பாதியை பழைய பாண்டுகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட், மீதி பாதியை ரொக்கப் பணமாக கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதை பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நன்கு அறிந்து தான் ஏதோ ஒரு வகையில் தீர்வை செயல்படுத்துவது போல் நடிக்கிறார்கள்.
கருப்பு பணத்தை முதலீடு செய்தவர்கள் சிலர் மறைமுகமாக செட்டில் மென்ட்டை நிறுவனம் கூறிய அனைத்து சட்ட விரோதமான விதி முறைகளுக்கும் ஒத்துக் கொண்டு, ஏதோ ஒரு வகையில் தீர்வை பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி காற்று வாக்கில் வருகின்றன. அது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியாது.
மக்களை நம்ப வைப்பதற்காக ஏதோ ஒன்றை சொல்லி சமாளிக்கிறார்கள் என்பது புரிகிறது. உண்மையில் அப்படி நடந்திருந்தால் அதன் விவரங்கள் சரியான ஆவணங்களுடன் தெரிய வரும்பொழுது அது பினாமி சட்ட நடவடிக்கைகளுக்கு கண்டிப்பாக ஆளாக்கப்படும்.
நிறுவனத்தின் கைக்கூலி, தில்லாலங்கடி முதியவர் இப்பொழுது ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார். இதை வைத்து குறைந்தது ஆறு மாதத்தை கடத்தி விடுவார். அதன் பின் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி, நிலமாக செட்டில்மென்ட் என்ற திட்டம் தோற்றுப் போனது போல் இந்த திட்டமும் நமக்கு ஒத்துவரவில்லை என சமாளித்து விட்டு, வேறு ஒரு திட்டத்தின் மூலம் நமக்கு தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மக்களை நம்ப வைத்து காலம் கடத்தி விடுவார். இது போன்று பல விதங்களில் காலம் கடந்து கொண்டே போகும்.
இறுதியில் மக்கள் தீவிரமாக போராட ஆரம்பிக்கும் பொழுது நிறுவனம் என்னை நம்ப வைத்து மோசம் செய்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என அழுது புலம்பி சிறிது நாட்களுக்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, அதன் பின் இப்பொழுது நிறுவனத்தார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அது போன்று ஒன்றை செய்து வாழ கற்றுக் கொள்வார். நிறுவனத்தின் தத்து பிள்ளை முத்தான குமரன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பலரும் அறிவர். தீயவர்கள் உடன் சேர்ந்து விட்டதால் அவர்களைப் போன்று தானே இந்த இரண்டு சங்க நிர்வாகிகளும் செய்வார்கள் பல.
முக்கிய இயக்குனர்கள் செய்த மோசடிகள் என்ன என்பதை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அறிவர். அவர்களை புகழ்ந்து துதி பாடும் முதியவருக்கு அவர்களின் கொள்கைகள் இவரின் குணங்களுக்கு ஒத்துப் போகிறது என்பது தானே அர்த்தம். அப்படியானால் அவர்களைப் போன்று தானே இவரும் செய்வார். மக்களை நம்ப வைத்து மோசடி செய்வதில் தவறில்லை என்ற கொள்கை உடையவராகத்தானே இருக்க வேண்டும்.
சட்ட பூர்வமான தீர்வு என்றால் அது சட்டம் மற்றும் நீதி மன்றம் மூலமாகத்தான் இயலும். காவல்துறையில் புகார் கொடுக்காதவர்கள் ஏதோ ஒரு மாற்று வழியில் தீர்வை ஏற்படுத்தி கொடுப்பார்கள் என முதியவரையும் நிறுவனத்தையும் எவ்வகையில் நம்பி இருக்கிறார்கள் என்று புரியவில்லை. புகார் கொடுக்க காலம் கடந்து விட்டது இனி மேல் புகார் கொடுத்தால் எப்படி பலன் கிடைக்கும் என்ற சந்தேகத்தில் பலர் இருக்கிறார்கள். சிலர் வரும் மார்ச் மாதம் வரை பார்ப்போம் என இருக்கிறார்கள்.
எவ்வளவு காலம் இப்படியே எதையாவதை எதிர்பார்த்து இருந்தாலும் நிறுவனம் அவர்களுக்கு ஒன்றுமே செய்து கொடுக்க இயலாது.100 சதவீதம் மாற்று வழிகளில் புகார் கொடுக்காதவர்களுக்கு நல்ல தீர்வு முறையாக ஏற்படுத்திக் கொடுக்க இயலாது என்பதை உறுதியாக கூற இயலும். அப்படி எதாவது மாற்று வழிகளில் நடைபெற்றிருக்கிறது என்று தெரிய வந்தால் அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்ட சிக்கல்கள் ஏற்படும். குற்றவியல் நடவடிக்கைகள் பாயும் என்பதை உறுதியாக கூற இயலும்.
புகார் கொடுத்தவர்களுக்கு தீர்வு ஏற்படுத்தி முடிக்காமல் புகார் கொடுக்காதவர்களுக்கு எந்த விதத்திலும் நல்ல தீர்வை முறையாக ஏற்படுத்திக் கொடுக்க இயலாது என்பதை எங்கள் தரப்பு சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சவாலை நிறுவனம் ஏற்றுக் கொள்ள தயாரா என்பதை வெளிப்படையாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
இதே போன்று மேற்கு பக்க சங்கம் மூலமாக நிலமாக செட்டில்மென்ட், நல்ல முறையில் அதிகாரப் பூர்வமாக ஏற்படுத்திக் கொடுக்க இயலும் என்ற சவாலையும் நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்க இயலுமா?. நாங்கள் சவாலை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
பணமாக செட்டில்மென்ட் கொடுத்து முடிக்காத வரை, நிலமாக செட்டில்மென்ட் என்பது எல்லாம் கனவில் தான் நிறை வேறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறை செய்தித் தாள்கள் மூலமாக இது பற்றிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் நடப்பது என்ன என்பதை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றால் ஏமாற்றுபவர்கள் தொடர்ந்து மோசடி வேலைகளை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
மேற்கு பக்கம் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்த்து மட்டும் வந்து விடலாம் என செல்பவர்களை மூலை சலவை செய்து ஏதோ ஒன்றில் ஆகாத ஆவணங்களில் கையொப்பம் வாங்கி விடுகிறார்கள். செட்டில் மென்ட்டிற்கு சென்றவர்களும் இதை வைத்து அவர்களால் ஒன்றும் செய்துவிட இயலாது என கருதி கையொப்பம் இட்டு விடுவதால். இவ்வளவு தொகைக்கு செட்டில்மென்ட் ஆகி உள்ளது என்ற அறிவித்து விடுகிறார்கள்.
அதை நம்பி, நடந்த உண்மையை புரிந்து கொள்ளாத வேறு சிலர் அங்கு என்ன நடக்கிறது என்று நாமும் பார்த்து வந்து விடலாம் என செல்கின்றனர். இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நாடகத்தை ஒரு கும்பல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. இது ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது போன்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தீயவர்கள் என்று தெரிந்தே அவர்களுக்கு ஆலோசனை கூறும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர், சட்ட ரீதியாக, எது நல்லது, எது தவறு என அந்த தீயவர்களுக்கு அறிவுரை கூறி இருக்க வேண்டும். அவரைப்பற்றி அறியாத அப்பாவி மக்கள் பலர் அவருடைய தவறான வழிகாட்டுதல்களை புரிந்து கொள்ளாமல், அவரை நம்பி ஏமாந்து விட்டனர்.
தவறு செய்தவர்களுக்கு அறிவுரை கூறாமல், தானாகவே முன்னின்று சட்டத்தில் இல்லாத ஒன்றை தவறாக மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நம்ப வைத்து இறுதியில் அவர்களை அலைக்கழித்து கெட்ட பெயரை சம்பாதித்தது தான் நடந்த உண்மை. தான் செய்வது தவறு என்று தெரிந்தே, நில விற்பனையாளர் போன்று சுயநலத்திற்காக செயல்பட்டது வெளிப்படையாக தெரிந்த பின் இப்பொழுது அந்த விசயத்தில் இருந்து விலகி இருப்பதை பலரும் அறிவர்.
மோசடி மன்னர்களிடமிருந்து கறக்க வேண்டியதை பல வழிகளில் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் கரந்து விட்டார்கள் என்பது பலர் அறிந்த விசயம். இரண்டு தரப்பினருக்கும் மாதா மாதம், நல்ல கவனிப்பு நடைபெறுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.” என்பதாக குறிப்பிடுகிறார் சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி.