திருச்சியில் பழிக்கு பழி ரவுடி வெட்டிக்கொலை !
திருச்சியில் பழிக்கு பழி ரவுடி வெட்டிக்கொலை !
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம், ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் (என்ற) சுரேஷ் (35), அவரது அண்ணன் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்நிலையில், ஜாமீனில் உள்ள ஆட்டுக்குட்டி சுரேஷ் சில காலம் வெளியூரில் தங்கி இருந்தார். பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்தார். இந்த நிலையில் தனது மனைவி ராகினியுடன் நவல்பட்டு பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு, இன்று இரவு இருச்சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இரவு சுமார் 7.30 மணியளவில் அம்பேத்கர் நகர் சுடுகாடு அருகே உள்ள தேங்காய் குடோன் அருகே வந்தபோது, 3 இருச்சக்கர வாகனத்தில் வந்த 5 பேர், சுரேஷ் ஓட்டி வந்த இருச்சக்கர வாகனம் மீது மோதினர். இதில் தடுமாறி சுரேஷ் அவரது மனைவி ராகினி இருவரும் கீழே விழுந்தனர். அதையடுத்து, நான்கு பேர் சூழ்ந்து கொண்டு, சுரேஷை சரமாரியாக வெட்டினர். தடுக்கச் சென்ற அவரது மனைவி ராகினிக்கும் காலில் வெட்டு விழுந்தது.
இதில் சுரேஷின் தலைப்பகுதி முழுவதும் சிதைக்கப்பட்டது. வெட்டுப்பட்ட சுரேஷ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி ராகினி கதறியழுதார். இதுகுறித்து தகவலறிந்து திருச்சி மாநகர துணை ஆணையர் செல்வகுமார், ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அவரது மனைவி ராகினியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் போலீஸாரிடம் சரணடைந்ததாக கூறப்படுகிறது. தலைவெட்டி சந்துரு, ஆட்டுக்குட்டி சுரேஷ் ஆகியோர் ஒன்றாக ஸ்ரீரங்கம் சத்தாரவீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் இனாம் பூக்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தனர்.
இதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தலைவெட்டி சந்துரு கொலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து தற்போது பழிக்குப்பழியாக ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது கொலை குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் உமாநாத் தன்னுடைய முகநூல் பதிவில்
திருச்சி மத்திய மாவட்டம் ஸ்ரீரங்கம் வன்னியர் சங்க முன்னாள் பொறுப்பாளர் சுரேஷ் அவர்கள் மனைவியோடு இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது மாலை ஆறு முப்பது மணி அளவில் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் பாட்டாளி மக்கள் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது கூலிப்படையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி காவல் துறைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. என்று பதிவிட்டுள்ளார்.