தீப்பொறி பறக்க பைக் வீலிங் பட்டாசு …TTFவாசன் தம்பிகள் 12 பேர் கைது !
தீப்பொறி பறக்க பைக் வீலிங் பட்டாசு … TTFவாசன் தம்பிகள் 12 பேர் கைது !
தீபாவளியையொட்டி டாஸ்மாக்கில் ரூ467.69 கோடிக்கு சாராயம் விற்றது; தமிழகம் முழுவதும் நீதிமன்ற விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு என வழக்கமான செய்திகளோடு, புதிய செய்தியாக திருச்சி போலீசாரின் அதிரடி அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
பாரம்பரியமான பண்டிகை கொண்டாட்டங்களைக்கூட, புதுமையாக கொண்டாடுகிறோம் பேர்வழி என்ற பெயரில் பைக்கில் சாகசம் காட்டியதோடு, பந்தாவாக அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட இளசுகளின் இன்ஸ்டா பக்கத்தை பாலோ செய்து தட்டி தூக்கி அதிரடி காட்டியிருக்கிறார்கள் திருச்சி போலீசார்.
திருச்சி சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிவிடை சிறுமருதூர் தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் பட்டாசை வெடிக்கவிட்டபடியே வீலிங் செய்ததோடு, அதனை டெவில் ரைடர் என்ற ஐ.டி.யை கொண்ட இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வழக்கில் தொடர்புடைய வாகன உரிமையாளர் கல்லாங்காட்டை சேர்ந்த அஜய் மற்றும் வாகனத்தை இயக்கிய தஞ்சாவூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட எல்லைக்குள் இதேபோன்று, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கி சாகசம் செய்ததாக, டைமன்ட் பஜாரை சேர்ந்த உசேன் பாஷா, தாராநல்லூரை சேர்ந்த ராஜேஷ் , கம்பரசம்பேட்டையைச் சேர்ந்த பர்ஷத் அலி, ஊட்டத்தூரைச் சேர்ந்த அஜித், சிறுகனூரைச் சேர்ந்த அஜய் மற்றும் சக்திவேல், தச்சன்குறிச்சியைச் சேர்ந்த விஜய், இலால்குடி பணமங்கலத்தைச் சேர்ந்த அருள்முருகன், கம்பரசம்பேட்டை கிரித்திஸ், கீழச்சிந்தாமணியைச் சேர்ந்த வசந்தகுமார், இலால்குடி எசனைகோரையைச் சேர்ந்த பெருமாள் என்ற தேசிங்க பெருமாள் உள்ளிட்டு 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வழக்கில் சிக்கும் இளசுகளின் டிரைவிங் லைசன்ஸை முடக்குவதற்காக ஆர்.டி.ஓ.வுக்கு போலீசார் தரப்பில் பரிந்துரைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
”இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக இன்ஸ்டாகிராம், X தளம் (டிவிட்டர்), பேஸ்புக் மற்றும் யூட்யூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை கண்காணிக்க சமூக வலைத்தள கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ததை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களை பகிர்பவர்களை சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு அதன் மூலமும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்டவாறு இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது சம்பந்தபட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்ப்பட்டுள்ளனர்.
அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் செய்பவர்கள் பற்றிய தகவலை 94874 64651 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தைரியமாக தகவல் தெரிவிக்கலாம்” என அறிவித்திருக்கிறார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார்.
போலீசாரின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஒருநாள் நடவடிக்கை என்பதோடு இல்லாமல், தொடர் கண்காணிப்பை பலப்படுத்தி இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடும் இளசுகளின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதுபோன்ற இளசுகளின் ஆதர்ச நாயகனாக டி.டி.எஃப். வாசன் வகையறாக்கள்தான் இருந்து வருகிறார்கள். வீலிங் செய்யும்பொழுது விழுந்துவாரி முறிந்த கையோடு சிறைக்கு சென்று வந்தபோதும், ஓட்டுநர் உரிமத்தை முடக்கியபோதும், இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ்ஐ வைத்து ”வண்டி ஓட்டுவேன்” என திமிராக பேட்டியளித்திருக்கிறார் வாசன்.
பணத்திமிரில் காஸ்ட்லி பைக்கில் சாகசம் காட்டும் ஹைடெக் இளசுகள் தொடங்கி, பெற்றோர்கள் அன்றாடம் காய்ச்சியாக இருந்தாலும் அடுத்தவேளை கஞ்சிக்கே வழியில்லாமல் கிடந்தாலும், பெற்றோரை படுத்தி எடுத்தாவது பைக்கை வாங்கி விடுகின்றனர். அவசியத் தேவைக்காகவும் அன்றாட பயன்பாட்டிற்குமான வாகனம் என்ற வரையறையை தகர்த்து, வறட்டு கௌரவத்திற்காகவும் வெட்டி பந்தாவுக்காகவுமே பைக் வாங்குவது என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
சென்னை மாநகருக்குள் 30 கி.மீ.க்குமேல் வாகனத்தை இயக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறார்கள். சென்னை தவிர்த்த மாவட்டங்கள் பலவற்றில் சாலைகளின் தரத்தைப்பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த இலட்சணத்தில் அதிவேகமாக இயக்கக்கூடிய காஸ்ட்லி பைக்குகளை வாங்கி, எங்கே இயக்கப்போகிறார்கள்?
இளசுகளின் ஆடம்பர பைக் மீதான மோகத்திற்கும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான எல்லைமீறிய சாகசங்களுக்கும் கடிவாளங்களை போட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
– ஆதிரன்.