சாகும் வரை கொலைப்பழி சுமந்தவர் – ராமஜெயம்
தில்லைநகர் 10th கிராஸ் ராமஜெயம் திகில் தொடர்-2
சாகும் வரை கொலைப்பழி சுமந்தவர் – ராமஜெயம்
ராமஜெயம் உயிரோடு இருந்தபோது, எந்த தில்லைநகர் வீதிகளில் டான் எனப் பேசப்பட்டாரோ, ஆதே தில்லைநகர் 10 கிராஸ் பகுதியில் வைத்துத்தான் கடத்தப்பட்டார். மக்கள் நெருக்கம் மிகுந்த தில்லை நகர் பகுதியில் இருந்து அவர், கடத்தப்பட்டதும், நகரின் முக்கிய வீதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் இயங்காமல் இருந்தது ஏன் என்பது ராமஜெயம் கொலையில் முக்கிய காரணம் என்கிறார்கள் அவரின் ஆதவாளர்கள்.
ராமஜெயம் தன்னிடம் முதலில் வந்து முறையிடும் எவரையும் அப்படியே நம்புவார், அதற்காக எதையும் செய்ய தயங்கமாட்டார் அது அவரின் சுபாவம். அது பலவேளைகளில் அவருக்கு எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கியது.
திருச்சியில் இருக்கும் கேம்பியன்,செயின்ட் ஜேம்ஸ், பிலோமினாள், பிஷப் கீபர் எனப் பிரபல பள்ளிகளில் தன்னை தேடிவரும் ஏழைகளுக்கும், கட்சிக்காரர்களுக்கும் சீட் வாங்கிக் கொடுத்து படிப்பதற்கு உதவி செய்து வந்தவர் ராமஜெயம், முதலில் எதையும் பொருட்படுத்தாமல், எத்தனை சீட் வேண்டும் என கேட்டு அதை அப்படியே வாங்கிக்கொடுத்தவர், அடுத்து, தங்கள் கட்சிக்காரர்கள், சிலர் தனக்கு சீட் வேண்டும் எனக் கேட்டு வாங்கி அதை விற்றது தெரிந்து கொதித்தார்.
அதன்பிறகு பள்ளிக்கூடங்களில் சீட் வாங்கிக்கொடுப்பதில் பல நிபந்தனைகள் விதிக்க ஆரம்பித்தார். அதேபோல், சில வம்புதும்புகளைக் கட்சிக்காரர்கள், தனது பெயரைச் சொல்லி செய்ததையும் கண்டிக்க ஆரம்பித்தார்.
இதில் பலருக்கு அவர் மேல் வருத்தத்தை உண்டாக்கியது. சிலர் விலகிப்போனார்கள். அப்படி விலகிப்போனவர்கள், ராமஜெயம் அப்படி இப்படி எனக் கிளம்பி விட்டனர். திருச்சி தில்லைநகர் முழுக்க ராமஜெயம், கே.என் நேரு ஆகியோருக்குச் சொந்தம், அத்தனை வீடுகளையும் ராமஜெயம் அபகரித்துவிட்டார் எனக் கிளப்பி விட்டார்கள். அது ஊர் முழுக்க பரவியது.
வழக்கமாக வதந்திகள் வேகமாகப் பரவும் என்பதற்கு இணங்க, ராமஜெயம் பெரிய தாதா அளவுக்கு உயர்ந்தார். அது தனக்கான பலவீனம் என நினைக்காத ராமஜெயம், அதை அப்படியே தக்கவைக்க முயன்றார். தனக்கு எதிராகச் சிந்திப்பவர்களை, பக்கத்திலேயே வைத்துக்கொண்டால் பிரச்சினை இல்லை என நினைத்தார். பல ரவுடிகள் அவரிடம் சரண்டர் ஆனதும் அப்படிதான்.
2011 திருச்சி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், ராமஜெயம் குடும்பத்துக்கு 63வீடுகள் இருப்பதாகவும், பல கோடி சொத்து இருப்பதாகவும் ஜெயலலிதா பேசினார்கள், தேர்தலுக்கு பிறகான ஆட்சி மாற்றம் வந்தது. அடுத்து, ராமஜெயம், நேரு உள்ளிட்ட அவரது குடும்பத்தார் மீது மொத்தம் 17 வழக்குகள் போடப்பட்டது. இதற்காக 28நாட்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்தார். அப்போது அவர், சிறைச்சாலை முழுவதும் நூற்றுக்கணக்கான மரங்களை வைத்தார்.
புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து இறுதிக் காலங்களில் நல்ல வாசகராக இருந்தார் எனக் கூறப்படுகிறது. அப்படி சிறையில் ராமஜெயம் இருந்தபோது, திருச்சியில் நேருவுக்கு எதிராக அரசியல் செய்த தங்கமானவர் ஒருவர், ராமஜெயத்துக்கு உதவியாக இருந்தார் என்றும் கூறுகிறார்கள்.
ராமஜெயம் இறந்தபோது, கொலைகாரன் செத்தான் எனப் பேசினார்கள். அப்படி அவர் மீது கொலைப்பழி விழுந்ததற்கு, ஊடகங்களும், போலீஸாரும்தான் காரணம்.
திருச்சி, கிராப்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ், வையம்பட்டி அருகே காரில் ஓட்டுநர் சக்திவேலுடன் எரிந்து பிணமாகக் கிடந்த வழக்கையும், அதே தினத்தில் துரைராஜின் அண்ணன் தங்கவேல், மணிகண்டம் என்ற இடத்தில் தனது தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்த வழக்கையும், சி.பி.சி.ஐ.டிபோலீஸார் விசாரித்து வந்தனர். இந்தக் கொலை நடந்து ஏழுவருடங்கள் வருடங்களாக முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.
துரைராஜ் கொலை செய்யப்பட்டபோது, அவரது போனுக்கு ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த கண்ணன் போன் செய்திருந்தார். அப்போது கண்ணனை விசாரணைக்கு அழைத்தபோது, காவி வேஷ்டி… நெற்றியில் விபூதி… பக்திமானாய் வந்து நின்ற கண்ணனை, இந்தச் சாமியார் கொலை செய்திருக்க மாட்டார் என்பது கணக்காய், நான் கடவுள் பாணியில் கண்ணனை அனுப்பியது டி.எஸ்.பி மலைச்சாமி தலைமையிலான போலீஸ்.
ஆனால் துரைராஜின் கொலைக்கு ராமஜெயம்தான் காரணம் எனச் சந்தேகம் கிளப்பிக்கொண்டே இருந்தது. இதைவைத்து, ராமஜெயம் உயிரோடு இருந்தவரை அந்தக் கொலைகளை ராமஜெயமே செய்தார் என ஊரே பேசியது. இந்தக் கொலை வழக்கில், திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், அவரது சகோதரர்கள் கரிகாலன், பாண்டியன், திருச்சி ரியல் எஸ்டேட் அதிபர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மற்றும் ரவுடிகள், தி.மு.க மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் பழனியாண்டி எனப் பலரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் பலகட்ட விசாரணை நடத்தினர்.
ஆனாலும் கடமை தவறிய அதிகாரிகளால், ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் மற்றும் அவரது டிரைவர் காரில் மர்மமான முறையில் எரிந்து இறந்துபோன வழக்கு இதற்கு முன்னர் திருச்சியில் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு. ‘ராமஜெயம்தான் இந்தக் கொலைகளுக்கு காரணம்.
அவர் தண்டிக்கப்படவேண்டும்’ என்று அப்போது தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளே பேசினர். பலரை துரைராஜின் கொலை வழக்கில் விசாரித்த சி.பி.சி.ஐடி போலீஸார், ஒருமுறை கூட ராமஜெயத்தை நேரில் அழைத்தோ, மறைமுகமாகவோ விசாரிக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், ராமஜெயம் கொலை செய்யப்பட்டபோது, அதற்கு துரைராஜின் கொலைவழக்கு மோட்டிவ்கூட, காரணமாக இருக்கலாம் எனக் கூறினார்கள். ஆனால் கடந்த 2013 டிசம்பர் மாதம் திருவானைக்கோவிலைச் சேர்ந்த சாமியார் கண்ணன், ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜையும் அவரது டிரைவரையும், தான் கொன்றதாக ரங்கம் கிராம அலுவலகத்தில் வாக்குமூலம் கொடுக்கும் வரை, ராமஜெயம்தான் துரைராஜை கொன்றது என திருச்சியில் பலரும் நினைத்திருந்தனர். அப்படிப்பட்ட சாமியார் கண்ணன், ராமஜெயத்தை கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்திலும் கண்ணனைக் கவனித்தார்கள்.
துரைராஜ் கொலை வழக்கில் எதற்காக ராமஜெயம் பெயரை கிளப்பிவிட்டார்கள் என்பது போலீஸாருக்கே வெளிச்சம் என்று கூறும் அவரது ஆதரவாளர்கள், ஒருவேளை, துரைராஜ் கொலையை போலீஸார் முறையாக விசாரித்திருந்தால், சத்யா, செல்வக்குமார் எனப் பலர் இறந்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள்..
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட பாணியில் தமிழகத்தில் எங்கெல்லாம் கொலை நடக்கிறதோ, அங்கெல்லாம் போலீஸார் நேரில் சென்று விசாரிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன், திண்டுக்கல்லில் பிரபல டாக்டர் பாஸ்கர் மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளான மதுரையைச் சேர்ந்த ஒரு கூலிப்படைக்கும். ராமஜெயம் கொலையில் தொடர்பு உள்ளதா என விசாரித்தார்கள்.
ராமஜெயம் கொலை செய்யப்பட்டதில் இருந்து இன்றுவரை கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் போலீஸார் இப்போதும் ராமஜெயம் குடும்பத்தார் ஏதாவது சொல்லிவிட மாட்டார்களா என மீனுக்காய் காத்திருக்கும் கொக்காய் காத்துகிடக்கிறார்கள்.
ராமஜெயம் கொலைக்கு பிறகு
கே.என்.நேரு போட்ட சபதம். ராமஜெயத்தின் நிறைவேறாத ஆசை உள்ளிட்ட பல தகவல்கள் வரும் இதழ்களில்..