பகவத்கீதை ஒரு சிறந்த துப்பறியும் நாவல்..” என்று தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை கூறினார்.
மர்மத்தை வைத்து புனையப்பட்ட கதையம்சம் மகாபாரதத்திலும் உண்டு என்பதை நாம் அறிவோம். மர்மத்தை வைத்து புனையப்படும் கதைகள் இதிகாச காலம் தொட்டே நம்மிடையே இருக்கிறது. ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ ஒரு மிகச்சிறந்த மர்மக் கதை. மர்மத்தை வைத்து புனையப்படும் புனைவுகள் மீது நமக்கு என்றைக்குமே ஒரு அலாதியான ஈர்ப்பு உண்டு. உலகமெங்கும் மர்மத்தை வைத்து புனையப்படும் கதைகளுக்கு என்று தனி வரவேற்பு உண்டு. தமிழில் துப்பறியும் கதைகளை எழுதியவர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கார், கே ஆர் ரங்கராஜன், சிரஞ்சீவி, ஆரணி குப்புசாமி முதலியார், டி எஸ் துரைசாமி, தமிழ்வாணன் என்று தமிழில் பட்டியல் நீளமானது.
இந்த வரிசையில் கல்கியையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். அவருடைய பார்த்திபன் கனவு ஒரு மிகச்சிறந்த சஸ்பென்ஸ் கலந்த மர்ம நாவல். அந்த நாவலில் இடம் பெற்ற சிவனடியார் கதாபாத்திரம் நாவல் இறுதிவரை யார் என்ற கேள்வியாகவே இருக்கும். அந்த மர்மத்தின் இருள் இறுதியில் நீங்கும் வகையில் நாவல் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் அதே நாவல் சினிமாவாகும் போது இந்த சஸ்பென்ஸ் படத்தின் ஆரம்பத்திலேயே வெளிப்பட்டு விட்டதால் படத்தின் சுவாரஸ்யம் கெட்டு போனது. திகில் மர்மம் துப்பறிதல் என்ற ரீதியில் எழுதப்படுகிற கதைகளுக்கு சில தீர்வுகள் அல்லது விடைகளை பிற்பகுதியில் விவரிக்கப்பட வேண்டும். இது மர்ம நாவலின் மிக முக்கிய நுட்பமாகும்.
மர்மத்தை சுவாரஸ்யமாக கோர்வையாக எடுத்துச் சென்று உச்சஸ்தாயியில் வைத்து அதைத் தக்க தருணத்தில் மர்மத்தை நீக்குவது தான் மர்மக்கதைக்கான அளவீடாகும். துப்பறிதல் மற்றும் மர்மத்துக்கான எந்த தீர்வையும் சொல்லாமல் பிரதிகளை கடந்து செல்லும் சாமர்த்தியத்தை எந்த எழுத்தாளரும் மர்மக்கதையில் செய்து விட முடியாது.
ஆனால் அப்படி ஒரு சாமர்த்தியத்தை செய்தவர் எழுத்தாளர் கல்கி. கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்ய கரிகாலனின் கொலை சம்பந்தப்பட்ட உண்மையை பதிவிடாமல் அந்த நாவலை மிக சிறப்பாக எழுதி முடித்திருப்பார்.
5 பாகங்கள், 293 அத்தியாயங்கள், 30 ஆண் கதாபாத்திரங்கள், 11 பெண் கதாபாத்திரங்கள் 60க்கும் மேற்பட்ட கடந்து செல்லும் துணை பாத்திரங்களை கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் தமிழில் பரவலாக அறியப்பட்ட மிகச் சிறந்த புதினம் என்ற போதிலும் அந்நாவல் ஒரு துப்பறியும் மர்ம நாவல் என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப்பார்களா? என்பது என்னளவில் ஐயத்துக்கானது தான்.
காரணம் கல்கியின் மயக்கம் தரும் மொழி ஆளுமையே. வீர நாராயண ஏரி, நந்தினியின் பேரழகு சித்தரிப்பு , பழுவேட்டரையரின் மர்ம நடவடிக்கை, பூங்குழலியின் காதல், ஆதித்ய கரிகாலனின் அடாவடி போக்கு, , வந்தியதேவனின் விதூசகத்தனம், சம்புவராயரின் பதவி வெறி, என்ற பதங்களில் நாவல் இயங்குவதால் மர்மம் மற்றும் துப்பறிதல் என்ற இரண்டு அம்சங்களும் இன்று வரை மறைந்தே இருக்கிறது.
புகழ் பெற்ற சோழ சாம்ராஜ்யத் தின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கற்பனை கலந்து எழுதப்பட்ட இந்த நாவல் சுந்தர சோழருக்கு பிறகான அரியணையில் ஏறப்போகும் அரசர் யார் என்ற அரசியல் குழப்பத்தை மையமாகவும், ஆதித்ய கரிகாலனின் படுகொலையின் பின்னணியையும் வைத்துதான் இந்நாவல் எழுதப்பட்டது. சோழ சாம்ராஜ்யத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்குபவர்கள் பாண்டிய பேரரசின் உளவாளிகள் என்பதை கல்கி ஆங்காங்கே விவரித்தபடி செல்வார். ஆனால் நாவலின் மையமான ஆதித்த கரிகாலன் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை பிரதியில் எங்கும் குறிப்பிடாமல் நழுவிச் செல்வார்.
இந் நாவலை திரைக்கதையாக எழுதி படமாக்கும்போது இருக்கின்ற மிகப் பெரிய ஆபத்து இதுதான். திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தரும் வரலாற்றுச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் கரிகாலனின் கொலை பின்னணியையும் கொலை பின்னணி யில் இருந்தவர்களையும் இந்நாவலில் எங்குமே அவர் குறிப்பிடவில்லை. வாசகர்கள் இதை உன்னிப்பாக கவனிக்காததற்கு காரணம் கல்கியின் மொழி மயக்கமே.!
எதற்காக கல்கி கரிகாலனின் படுகொலையை பற்றிய உண்மையை எழுதவில்லை என்பதற்கு நம்மில் பல பேருக்கு அவர்கள் அளவில் நிறைய பதில் இருக்கிறது. ஆனால் அது இறுதியானது தானா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.மிகப் பெரிய விவாதம் கரிகாலனின் படுகொலையில் பின்னணி வகிக்கிறது என்பதை கல்கி அறிந்தார். அரண்மனை சதிக்கு விடை தேட முடியுமா.? ஒரு நுட்பம் மிக்க எழுத்தாளனால் அந்த மர்மத்தை கடந்து வாசகர்களை அழைத்துச் செல்ல முடியும்.. ஒரு இயக்குனரால் அழைத்துச் செல்ல முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.