பணிந்தது காமராஜ் கல்லூரி ! மாணவர்கள் மீதான டிஸ்மிஸ் வாபஸ் !
பணிந்தது தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ! மூன்று மாணவர்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கையை திரும்பப் பெற்றது ! கடந்த ஜூலை-21 அன்று அங்குசம் இணையத்தில், “இஷ்டத்துக்கு உயர்த்தப்படும் கட்டணம் – கட்டும் பணத்துக்கு துண்டு சீட்டுக்கூட கிடையாது – எதிர்த்துக் கேட்டால் டிஸ்மிஸ் – காமராஜ் கல்லூரியின் அடாவடி !” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
இணையத்தில் பரவலாக பகிரப்பட்ட அந்த செய்தியில், அடாவடியாக கல்விக்கட்டணத்தை உயர்த்திய தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து போராடியதற்காக மூன்று மாணவர்களை டிஸ்மிஸ் செய்திருந்ததை பதிவு செய்திருந்தோம். குறிப்பாக, கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் இயங்கும் கல்லூரி நிர்வாகம், எம்.எல்.எம். கம்பெனிகாரனைப் போல, கல்லூரியில் பல்வேறு வசதிகளை உருவாக்கியிருக்கிறோம் என்று ஸ்லைடு போட்டு கல்வி கட்டண உயர்வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருந்ததையும்; வசூலிக்கும் பணத்திற்கும் முறையாக ரசீதுகள்கூட வழங்காததையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.
உப்பளத் தொழிலாளர்கள் வீட்டுப் பிள்ளைகளும், அன்றாடங்காய்ச்சியான அடிப்படை கூலித்தொழிலாளர்கள் வீட்டுப் பிள்ளைகளும் பெருமளவில் கல்வி பயின்றுவரும் ஒரு கல்வி நிறுவனம், அவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் கட்டண உயர்வை திணித்திருப்பதையும்; அதனை எதிர்த்து போராடியதற்காக மாணவர்கள் மூவரை பழிவாங்கத் துடிப்பதையும் அம்பலப்படுத்தியிருந்தோம்.
இந்த விவகாரத்தில், தொடர் முயற்சிகளையடுத்து மூன்று மாணவர்களை டிஸ்மிஸ் செய்த நடவடிக்கையை திரும்பப் பெற்றிருக்கிறது, காமராஜ் கல்லூரி நிர்வாகம். கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி தெற்கு போலீசு ஆய்வாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் கல்லூரிக்கு திரும்பியிருக்கின்றனர்.
மிக முக்கியமாக, இம்மூன்று மாணவர்களை டிஸ்மிஸ் செய்வதன் வழியே, தனது கல்லூரியில் பயிலும் எந்த ஒரு மாணவனும் கட்டண உயர்வு உள்ளிட்டு கல்லூரி நிர்வாகத்தின் மாணவர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பையும் எழுப்பிவிடக்கூடாது என்ற அச்சத்தை மாணவர்களிடையே விதைக்க முனைந்தது.
மாணவர்களின் உறுதியான போராட்டத்தையடுத்து, கல்லூரி நிர்வாகத்தின் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 வழங்கும் சங்கம் அமைக்கும் உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.
இவை எதுவும், மேற்கண்ட நூறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருப்பதைபோல எளிதாக ஒன்றும் நிறைவேறிவிடவில்லை. கட்டண உயர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்; அந்தப் போராட்டத்திற்காக 13 மாணவர்கள் மீதான கல்லூரி நிர்வாகத்தின் இடைநீக்க நடவடிக்கை; மாணவர்கள், கல்லூரி நிர்வாகம், கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை;
அப்பேச்சுவார்த்தையின் அடிப்படையிலிருந்து மூன்று மாணவர்களை தவிர மற்ற மாணவர்களின் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் திரும்பப்பெற்றது;
மூன்று மாணவர்களின் டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு எதிராக கோட்டாட்சியர், மண்டல கல்லூரி இணை இயக்குநர், போலீசு ஆய்வாளர் ராஜாராம் ஆகியோரின் கண்டிப்புடன் கூடிய பரிந்துரைகள்; தலைமைச் செயலக முதல்வரின் தனிப்பிரிவு, கல்லூரி இயக்ககத்தின் உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், போலீசுதுறை ஆகியவற்றின் தலையீடு மற்றும் பரிந்துரைகளை ஏற்க மறுத்து மூன்று மாணவர்களின் டிஸ்மிஸ் நடவடிக்கையில் உறுதியாக நின்ற கல்லூரி நிர்வாகம்;
கல்லூரி நிர்வாகத்தின் அடாவடியை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூன்று பேரும் நடத்திய காத்திருப்புப் போராட்டம் என கடும் முயற்சிகளையடுத்தே இந்த குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கின்றனர் மாணவர்கள்.
“மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்படியும், மண்டல கல்லூரி இணை இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், போலீசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் மாணவர்களை கல்லூரிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்.
கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு முயற்சித்தனர். அவர்களிடமும் பேசி சமாதானப்படுத்தி, கல்லூரி நிர்வாகத்திற்கு கடுமையாக எடுத்து சொல்லி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்.” என்கிறார், கோட்டாட்சியர் பிரபு.
”இந்திய மாணவர் சங்கத்தின் உறுதியான போராட்டத்தோடு, அங்குசம் இதழில் வெளியான செய்திக்கட்டுரையும், அதன்வழியே கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு முன்வைத்திருந்த காத்திரமான விமர்சனமும்; மிக முக்கியமாக கோட்டாட்சியர் பிரபுவின் தொடர்ச்சியான முன்னெடுப்பும்தான், மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையிலிருந்து கல்லூரி நிர்வாகம் பின்வாங்குவதற்கான முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.” என்கிறார், எஸ்.எஃப்.ஐ.யின் தூத்துக்குடி மாவட்ட செயலர் கிஷோர் குமார்.
மாணவர்கள் மூவரும் வழக்கம்போல, கல்லூரிக்கு திரும்பியிருக்கின்றனர் என்பது இப்போராட்டத்தின் முதல் வெற்றி. ஆனாலும், அநியாயமாக உயர்த்தப்பட்ட கல்விக்கட்டணம் இன்னும் குறைக்கப்படவில்லை. வசூலிக்கும் பணத்திற்கு ரசீது வழங்கும் நடைமுறையும் அமலுக்கு வரவில்லை. இவற்றையெல்லாம்விட, நாம் முந்தைய செய்தியில் சுட்டிக்காட்டியிருந்தபடி, மாணவர்களை ஒருமையில் விளிக்கும் நடவடிக்கையை கைவிடாமல், மீண்டும் தொடர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இவையெல்லாம், கோட்டாட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையிலிருந்து தற்காலிகமாக தப்பிக்கும் வகையில், வேறுவழியின்றி இந்த முடிவை ஏற்கும் நிர்ப்பந்தத்திற்கு கல்லூரி நிர்வாகம் ஆளாகியிருக்கிறது என்பதாகவே கருத இடமளிக்கிறது.
மாணவர்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கையை ரத்து செய்துவிட்டு மாணவர்களை கல்லூரிக்கு அனுப்பிவைத்ததோடு கடமை முடிந்துவிட்டதாக கருதாமல், இப்பிரச்சினையின் ஆணி வேராக அமைந்துள்ள அநியாய கல்வி கட்டண உயர்வு, வசூலிக்கும் பணத்துக்கு ரசீது வழங்காதது உள்ளிட்ட கல்லூரி நிர்வாகத்தின் மாணவர் விரோத போக்குகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!
– ஆதிரன்.