”கட்சியில் 54 வருடங்களாக இருந்திருக்கிறேன். கட்சிக்காக 11 முறை ஜெயிலுக்கு சென்றிருக்கிறேன். பல மாவட்ட செயலாளர்களையும், எம்.எல்.ஏ.க்களையும், அமைச்சர்களையும் உருவாக்கியிருக்கிறேன். அன்று வந்த வாய்ப்புகளையெல்லாம் விட்டுக்கொடுத்துவிட்டு, இப்போது நடுத்தெருவில் நிற்கிறேன். அவமானங்களை சகித்துக்கொண்டு கட்சியில் இனியும் தொடர முடியாது. ஆனாலும், கட்சி மாறமாட்டேன். கடைசிவரை கரை வேட்டி கட்டுவதை மாற்றவும் மாட்டேன்” என்கிறார், மலைக்கோட்டை ஐயப்பன் நாதழுதழுக்க.
யார் இந்த ஐயப்பன். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவராக இருந்தவர்தான் இந்த ஐயப்பன். அவரது அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்வில், திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவர். சமீபத்தில் மாநகர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ஆவின் கார்த்திக்கேயனுடன் ஏற்பட்ட தனிப்பட்ட மனக்கசப்பினால் இத்தகைய முடிவை அவர் எடுத்திருப்பதாக சொல்கிறார், அவர்.
*அதெல்லாம் அந்த கால அதிமுக :*
இன்றளவும் திருச்சி மாவட்ட திமுகவின் அசைக்கமுடியாத தூண்களில் ஒருவராக கருதப்படும், அமைச்சர் கே.என்.நேருவின் அரசியலை எதிர்த்து, ஒரு போட்டி அரசியல் கட்சியாக திமுகவுக்கு நெருக்கடியை கொடுத்த வந்த மாவட்டங்களுள் ஒன்றாக திருச்சி மாவட்ட அதிமுக இருந்து வந்தது.
கு.ப.கிருஷ்ணன், மனோகரன், ரத்னவேலு, ப.குமார், சிவபதி, பரஞ்சோதி, வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் என எம்.பி.க்களாக, எம்.எல்.ஏ.க்களாக, அமைச்சர்களாக மாவட்டத்தை ஆட்டிப்படைத்தது ஒருகாலம். அதிமுகவின் தலைமையில் ஏற்பட்ட பிளவு, திருச்சி மாவட்டத்தையும் அசைத்து பார்த்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தல் வரையில் தட்டுத்தடுமாறி தாக்குப்பிடித்து வந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு உருவான சி.வி.சண்முகம் – வேலுமணி – விஜயபாஸ்கர் மூவர் அணியோடு முக்கிய தலைவர்கள் ஐக்கியமாக கட்சி கலகலத்து போனது. முதல் ஆளாக துண்டைப்போட்ட கு.ப.கிருஷ்ணன் தொடங்கி, அமைச்சர் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், சீனிவாசன், ஏர்போர்ட் விஜி, சிந்தாமணி முத்துக்குமார், பூபதி என அடுத்தடுத்து அதிமுகவின் திருச்சி மாவட்ட அதிமுக முகங்கள் த.வெ.க.வில் ஐக்கியமாகினர். முன்னாள் எம்.பி. ப.குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி உள்ளிட்டோர் த.வெ.க பக்கம் போகவில்லை என்றாலும் அதிமுகவில் பழைய செயல்பாடுகள் இல்லை. இவ்வளவுக்குப்பிறகும், அதிமுக என்ற கட்சியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு களப்பணியாற்றும் மனோகரன், ரத்னவேலு உள்ளிட்ட சீனியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவராகத்தான் மலைக்கோட்டை ஐயப்பனும் இருந்து வந்தார்.
தற்போது, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக கார்த்திக்கேயன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக யோகநாதன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக மனோகரன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக சிவக்குமார் ஆகியோர் மாவட்ட பொறுப்பில் இருந்துகொண்டு அதிமுகவை வழிநடத்தி வருகிறார்கள்.
*தலைகால் புரியாமல் ஆடுகிறார் மா.செ.*
இதில், முன்னாள் மா.செ. சீனிவாசன் த.வெ.க. பக்கம் சென்றதையடுத்து மா.செ. பதவிக்கு வந்தவர்தான் ஆவின் கார்த்திக்கேயன். இவருக்கு எதிராகத்தான் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், மலைக்கோட்டை ஐயப்பன்.
“ நான் அவைத்தலைவராக இருந்த சமயத்தில், அப்போது மா.செ. பதவிக்கு சீனிவாசனும், ஆவின் கார்த்திக்கேயனும் போட்டியில் இருந்தார்கள். நான் கட்சித் தலைமையின் ஆலோசனையின்படி, சீனிவாசனுக்கு மா.செ. பதவிக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தேன். அந்த சம்பவத்தை இப்போது பேசுகிறார் கார்த்திகேயன். கட்சி நிர்வாகிகள் அத்தனை பேருக்கு மத்தியிலும் இதை சொல்லி அவமானப்படுத்தினார்.

அன்று ஏழ்மையான நிலையில் இருந்து இன்று சிட்பண்ட்ஸ் நடத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறீர்கள். நாலு பேருக்கு உதவி செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கிறீர்கள் என்றுதான் நல்லவிதமாக சொன்னேன். அதற்காக, கட்சியை வைத்து சம்பாதித்தேன் என சொல்வியா என்று மிகவும் தரக்குறைவாக பேசுகிறார் கார்த்திக்கேயன். எனது 50 ஆண்டு கால அரசியல் அனுபவத்துக்கும் வயதுக்கும் இங்கே மதிப்பில்லை. இவர்களிடம் ஒருமையிலும், தகாத வார்த்தைகளிலும் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கொண்டு கழகப்பணியாற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதால்தான், கட்சிப் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன் என கடிதம் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டேன். நான் இதை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
எனது இத்தனை ஆண்டுகால உழைப்புக்கு மரியாதை இல்லை அவ்வளவுதான். விட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போவதில்லை என்பார்கள்; ஆனால், எனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, இருந்த சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன். அவ்வளவுதான். இதற்குமேல் எதுவும் கேட்காதீர்கள்.” என்பதாக பேசும்போதே உடைகிறது, ஐயப்பனின் குரல்.
“மா.செ. பதவிக்கு வந்ததில் இருந்து அவரது நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் வந்திருப்பது உண்மைதான். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மதிப்பில்லை. எடப்பாடியுடன் இருக்கும் நெருக்கத்தை காட்டியும், தன்னிடம் இருக்கும் பண பலத்தை வைத்தும் அரசியல் செய்துவிடலாம் என நினைக்கிறார். தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பதவிகளை சிபாரிசு செய்கிறார். ஒரு காலத்தில், தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத தலித் எழில்மலையை இங்கே வந்து நிறுத்தி எம்.பி.யாக்கி அழகு பார்த்தவர் அம்மா. கட்சியினரே மதிக்கவில்லை என்பதாக ஒரு தகவல் அவர் காதுகளுக்கு போனதால்தான், தனபால் சபாநாயகர் ஆக்கப்பட்டார். எந்த கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சபையில் நுழையும்போதே கையெடுத்து வணக்கம் போட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார்.
*பட்டியலின பிரிவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை :*
ஆனால், திருச்சி மாநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் பட்டியலின பிரிவினருக்கான முக்கியத்துவம் இல்லை. வரகனேரி ராஜேந்திரன், சுரேஷ்குப்தா, எம்.ஏ.அன்பழகன் என எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டார் மா.செ. கார்த்திக்கேயன். பட்டியலின பிரிவினருக்கான இடம் எங்கே என்று கேட்டால், மாவட்ட இணை செயலாளராக ஜாக்குலினும்; துணை செயலாளராக பிரியாவும் இருப்பதாக கணக்கு காட்டுகிறார். அவர்கள் கிறிஸ்துவர்கள். அவர்கள் சிறுபான்மை பிரிவில்தான் வருவார்கள். இதுபோல பட்டியலினத்திலிருந்து மதம் மாறியவர்களை பட்டியலினமாக கருதமுடியாது என தீர்ப்பே வந்துவிட்ட நிலையிலும் அவர்களை அந்த கணக்கில்தான் வைத்திருக்கிறார். இவர்கள் இருவரை காட்டி பெண்களுக்கான பிரதிநிதித்துவம்; பட்டியலின பிரதிநிதித்துவம்; சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் என்பதாக ஒரே கல்லில் மூன்று மாங்காயை அடித்துவிட்டார், கார்த்திக்கேயன்.” என்கிறார்கள் ஒரு தரப்பில்.
“அப்படியெல்லாம் இல்லை. ஒரு கவுன்சிலருக்கான வார்டையே மூன்று வட்டமாக பிரித்திருக்கிறார். முன்பு ஒரு வட்டத்துக்கு 9 பொறுப்பாளர்கள் இருந்த இடத்தில், இப்போது 27 பேர் இருக்கிறார்கள். இவர் மா.செ.வாக வந்ததற்கு பிறகுதான் திருச்சி மாவட்ட அதிமுகவில் இவரெல்லாம் மாவட்ட பொறுப்புக்கு வந்துவிட முடியுமா? என்று யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத பலரை பொறுப்பில் அமர வைத்திருக்கிறார். எல்லோரையும் அரவணைத்து செல்கிறார்..” என்கிறார்கள், மற்றொரு தரப்பில்.
*திருச்சி கிழக்கில் கார்த்திக்கேயன் :*
காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் ஆவின் கார்த்திக்கேயன்தான் களமிறங்கப்போவதாகவும்; கட்சித் தலைமையிடம் இப்போதே அதற்கான ஒப்புதலை பெற்றுவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதை நோக்கியேதான் தற்போது காய் நகர்த்தி வருகிறார் என்கிறார்கள்.
குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி என்றாலே வெள்ளாளர் சமூகமும் சிறுபான்மையினர் சமூகமும் நிறைந்த தொகுதி என்பதால், அந்த சமூகத்து மக்களின் நன்மதிப்பை பெறுவதற்காக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட பொறுப்பை வழங்கி வருகிறார் என்கிறார்கள்.

“திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரையில், எல்லோரும் வெள்ளாளர் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கான தொகுதி என்கிறார்கள். ஆனால், உண்மையில், பட்டியலின பிரிவினர் நிறைந்து வாழும் தொகுதி அது. அதற்கடுத்துதான் வெள்ளாளர் சமூகமும், முஸ்லீம்களும் வருவார்கள். கழுத்தை அறுத்துப்போட்டாலும் கட்சி மாறமாட்டேன் என்ற கொள்கை பிடிப்போடு தள்ளாத வயதிலும் ஒரு கூட்டம் தவறாமல் பங்கேற்கும் ரத்தினவேலு போன்றவர்கள் இன்னும் இந்தப்பக்கம்தான் இருக்கிறார்கள். இதுபோன்ற சீனியர்களையும், பட்டியலின பிரிவை சேர்ந்தவர்களையும் மாவட்ட பொறுப்புக்கு வர வேண்டும். அதுதான் கட்சியின் வளர்ச்சிக்கும் கார்த்திக்கேயனின் வளர்ச்சிக்கும் துணையாக இருக்கும்.” என்பதாக, சொல்கிறார்கள் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்.
*அப்படி எல்லாம் ஒன்றுமில்லை :*
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, விளக்கம் கேட்க ஆவின் கார்த்திகேயனிடம் தொலைபேசியில் அழைத்தபோது நேரில் வர சொன்னவரிடம், “கட்சியில் சீனியர்களை மதிப்பதில்லை என்கிறார்களே?” என்ற கேள்வியை முடிப்பதற்கு முன்பாகவே, “இது ஒரு கேள்வினு நைட் 9.30 மணிக்கு போன் போட்டு கேட்பியா? அவ்வளவு முக்கியமான பிரச்சினையா இது? ஐயப்பனை கட்சியைவிட்டு நாங்களாக நீக்கவில்லை. அடுத்து வேறு என்ன கேள்வி” என்றார். மற்ற குற்றச்சாட்டுகளையும்கூட முழுமையாக கேட்கும் நிதானம் அவரிடம் இல்லை. மாறாக, “இதை உனக்கு யார் சொன்னது?” என்பது போன்ற எதிர்கேள்விகளைத்தான் பதிலுக்கு அவர் அடுக்கினார். ஒரு கட்டத்தில், “ சோர்ஸ்னு சொல்ல நீ என்ன போலீசா?” என்றதோடு, “இதெல்லாம் நீ என்னிடம் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. எங்க கட்சிக்காரர்களிடம் கேட்டாலே சொல்லி விடுவார்கள். பட்டியலின பிரிவை சேர்ந்த பலருக்கு பொறுப்பு கொடுத்திருக்கிறேன். நானே இருப்பதால், செட்டியார் பிரிவினருக்குத்தான் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதெல்லாம் ஒரு கேள்வினு என்கிட்ட வந்து கேட்கிறீயே?” என்பதாக, சலித்து கொண்டார், ஆவின் கார்த்திகேயன். கடைசியாக, ”இன்னைக்கு இந்த பத்திரிகையில இருப்ப. இன்னும் பத்தாயிரம் ரூபாய் கூட கொடுத்தால் இன்னொரு பத்திரிகைக்கு போயிடுவ. உன்னோட வளர்ச்சிக்குத்தான் சொல்றேன். இதுபோல செய்தியெல்லாம் பன்னாத” என்ற அட்வைசோடு அனுப்பியும் வைத்தார்.
எது எப்படியோ, உடலளவில் தளர்ந்திருந்தாலும் கொள்கை பிடிப்போடு கட்சியை கெட்டியாக பிடித்து நிற்கும் சீனியர்களை அரவணைத்து செல்லவேண்டும்; பட்டியலின பிரிவினர் உள்ளிட்டு அனைத்து சமூகத்தினருக்கான பங்கேற்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதைத்தான் எதிர்பார்ப்பாகவும், ஏக்கமாகவும் வெளிப்படுத்துகிறார்கள், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள்!
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.