முடிவுக்கு வந்த கால்நூற்றாண்டு கால சர்ச்சை : திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் !
22 ஆண்டுகளுக்குப்பிறகு, நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களை கடந்து திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டிருப்பது, பெண் வழக்கறிஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பாரம்பரிய பெருமை கொண்ட திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் இயங்கிவருகின்றன. பெண் வழக்கறிஞர்களுக்கென்று தனி சங்கம் இல்லாத நிலையை போக்கும் வகையில், கடந்த 2000-ஆவது ஆண்டில், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் (WOMEN ADVOCATES ASSOCIATION – WAA) (பதிவு எண்:50/2000) உருவானது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையாகத் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சங்கம் தொடங்கிய 26 ஆண்டுகளில் இரண்டுமுறை மட்டுமே தேர்தல் நடைபெற்றது. கடந்த 22 ஆண்டுகளாக தேர்தலை நடத்த முடியாத அளவுக்கு சட்ட சிக்கல்களும் நடைமுறை சிக்கல்களும் தடைகளாக இருந்தன.
குறிப்பாக, பதிவுத்துறையின் பதிவு புதுப்பிப்பு மற்றும் பார்கவுன்சிலின் அங்கீகாரம் ஆகிய இரண்டையும் WAA சங்கம் இழந்துவிட்ட நிலையில், அனைத்து மகளிர் வழக்கறிஞர் சங்கம் (All women advcocate association) (பதிவு எண்: 158/2025) என்பதாக புதிய சங்கத்தை உருவாக்கியிருந்தார்கள். அதுவும் சர்ச்சையானது.
இந்த பின்னணியில்தான், கால்நூற்றாண்டு காலம் தீராத தலைவலியாக தொடர்ந்து வந்த இந்த விவகாரம் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தின் ஃபோர்ட் போலியோ நீதிபதியான ஜெகதீஷ்சந்திராவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவரது சீரிய முயற்சியில் ஓய்வுபெற்ற நீதியரசர் கிருபாகரன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
தற்போது, 22 ஆண்டுகளாக தடைபட்ட தேர்தலை நடத்தும் பொறுப்பு ஒருநபர் ஆணையர் ஓய்வுபெற்ற நீதியரசர் கிருபாகரன் தலைமையில், வழக்கறிஞர்கள் ஏ.ராஜேந்திரன், எம்.லட்சுமணன், மற்றும் ஏ. மனோகரன் ஆகியோரை கொண்ட தற்காலிக தலைமை கமிட்டி (ADHOC COMMITTEE) ஏற்படுத்தப்பட்டு தேர்தலுக்கான நடைமுறைகளை தொடங்கியிருக்கிறது.
முதற்கட்டமாக, சர்ச்சைகளுக்கு இடமளிக்காத வகையில் தகுதியான பெண் வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களை சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான பணிகளை முன்னெடுத்திருக்கிறது.
திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர விரும்புவர்களுக்கு விண்ணப்பபடிவங்களை வழங்கி வருகிறார்கள். விண்ணப்பங்களைத் திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தற்காலிகக் குழுவிடம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் நவம்பர் 20 ஆம் தேதி முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளப்படுகின்றன. உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 என்பதாக தீர்மானித்திருக்கிறார்கள்.
விண்ணப்பப் படிவத்தில் வழக்கறிஞர்களின் பெயர், தந்தையின் பெயர், திருமண நிலை, பிறந்த தேதி, வயது, நிரந்தர முகவரி, அலுவலக முகவரி, சமீபத்திய வழக்கறிஞர் கழுத்துப்பட்டை அணிந்த புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
மேலும், வழக்கறிஞர் பதிவுச் சான்றிதழ் எண் மற்றும் தேதி, TBA எண், அலைபேசி எண், கல்வித் தகுதி, பயிற்சி பெற்ற இடம், சுயமாக வழக்கறிஞர் தொழில் செய்கிறாரா அல்லது மூத்த வழக்கறிஞரின் அலுவலகத்தில் இணைந்து பணியாற்றுகிறாரா என்ற விவரங்களும் கோரப்பட்டுள்ளன. மூத்த வழக்கறிஞரின் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் அதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் சங்கத்தின் விதிமுறைகள் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால் சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படுவதாக உறுதியளிக்க வேண்டும்.
நவம்பர் 30ஆம் தேதி பிற்பகல் 3 மணி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தற்காலிகக் குழு தெரிவித்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் பயிற்சியை மேற்கொண்டுவரும் பெண் வழக்கறிஞர்கள் பலரும் சங்கத்தில் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்ள ஆர்வத்துடன் விண்ணப்பபடிவங்களை பெற்றுச் செல்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.