காய்ச்சல் நல்லது மட்டுமல்ல; சுகமானதும்கூட. சிறுவயதிலிருந்து காய்ச்சல் புராணத்தை ஆரம்பித்தால் புரிந்துவிடும். காய்ச்சல் வந்துவிட்டால் பள்ளிக்கூடம் போகவேண்டாம். திடீரென்னு வீட்டில் உள்ளோர் நம் மீது பாசமழை பொழிவார்கள். அம்மா அடிக்கடி வந்து நெற்றியைத் தொட்டுப் பார்ப்பார். ‘கதகதன்னுதான் இருக்கு’ என்று சொல்லிவிட்டுப் போவார். அரைக்கண்ணால் அப்பா போய்விட்டாரா என்று பார்த்துவிட்டு போர்வையை உதறிவிட்டு சோம்பல் முறிக்கலாம். சுதந்திரத்தின் முதல் சுகம். வீட்டு முற்றத்தில் விளையாடும் கோழிக்குஞ்சுகளை வேடிக்கை பார்க்கலாம்.
பாட்டி கொல்லைப்புறத்திலிருந்து பச்சிலை பறித்து வந்து கஷாயம் போட்டுத் தருவார். இது என்ன இலை என்று கேட்பேன். ‘பேர் சொல்லாததுடா’ என்பார். காய்ச்சல் என்னைப் போலவே போவேனா என்று அடம் பிடிக்கும்.
மாட்டுத் தொழுவம் காலியாகக் கிடக்கும். மாடுகள் மேய்ச்சலுக்குப் போயிருக்கும். அணில்கள் விட்டுவிட்டுக் கத்திக்கொண்டிருக்கும். இவை எல்லாம் ஆனந்தமாக இருப்பதன் காரணம் புரியும்.
மாடுகள், கோழிக்குஞ்சுகள், அணில்கள், வெயிலில் தூங்கி வழியும் கருப்புப்பூனை – இவற்றுக்கெல்லாம் பள்ளிக்கூடம் கிடையாது.
காய்ச்சல் வந்தால் கழுத்து வரை போர்த்தப்படும். ஜன்னல் வழியே காகம் ஒன்று தலைசாய்த்துப் பார்க்கும் ‘க்ரா, க்ரா’ என்று அடித்தொண்டையில் கத்தும். ‘இன்னிக்கும் பள்ளிக்கூடம் போகலையா’ என்று கேட்பதுபோல் இருக்கும். சற்றைக்கெல்லாம் கையில் சீசாவுடன் ஆஸ்பத்திரி நோக்கி போகவேண்டும்.
டாக்டர் என்ன செய்கிறது என்று கேட்கவே மாட்டார். வாய்க்குள் டார்ச் அடித்துப் பார்ப்பார். கண் ரெப்பையை விலக்கிப் பார்ப்பார். சீட்டில் ஏதோ எழுதுவார். கையெழுத்து மோசம். எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தாரோ தெரியவில்லை.
பக்கத்து அறைதான் மருந்துக்கூடம். அலமாரிகளில் பெரியபெரிய கண்ணாடி ஜாடிகள். அவற்றில் பல வண்ணதிரவங்கள். கம்பவுண்டர் காக்கி டிரவுசர் போட்டிருப்பார். என் சீசாவில் சிவப்பு நிற சர்பத் மாதிரி ஏதோ ஒரு மருந்தை ஊற்றுவார். சூடவில்லை மாதிரி மாத்திரைகள். வீட்டுக்குப் போகிற வழியில் சிவப்பு சர்பத்தை ஒரு மிடறு ருசி பார்ப்பேன். மருந்து நெடி அடித்தாலும் இனிப்பாக இருக்கும். போகிற வழியெல்லாம் மருந்தைக் குடித்துக்கொண்டே போவேன். வீட்டுக்குப் போனதும் அம்மா, மருந்து பாட்டில் முக்கால்வாசி காலியாக இருப்பதைப் பார்த்து, ‘அடப்பாவி… அவ்வளவையும் குடிச்சுட்டியா?’ என்பார்.
அம்மாவின் காலை கருப்புப்பூனை சுற்றிவரும். அதை யாரும் வாய்ப்பாடு சொல்லும்படி கேட்கமாட்டார்கள்.
என்னைப்போலவே எழுத்தாளர் சுந்தரராமசாமி சிறுவயதில் உடம்பு சரியில்லாமல் படுக்கையில் இருந்த நினைவுகளை கட்டுரையிலோ கதையிலோ இரசனையோடு எழுதியிருப்பார்.
அப்பாவுக்குத்தான் அடிக்கடி காய்ச்சல் வரும். ஒருமுறை ரொம்பவும் சீரியசாகி தஞ்சாவூர் தாமஸ்ஹாலில் சேர்த்துவிட்டார்கள். நான்தான் கூடஇருப்பேன். சாப்பாட்டு வண்டி வார்டுகளில் வலம்வரும். தட்டில் சுடச்சுட ஆவிபறக்கும் சாதம், சுவையான குழம்பு கூட்டு வகையறாக்கள். அப்பாவால் சாப்பிட முடியாது. நாங்கள்தான் சாப்பிடுவோம். இரவு சூப், முட்டை, ரொட்டி, பழம் – ருசியோ ருசி. ‘நாளைக்கு அப்பாவுக்கு டிஸ்சார்ஜ்’ எனக்கு ஏமாற்றமாகிவிடும்.
அப்பா அடிக்கடி தெர்மாமீட்டரை வாயில் வைத்து பார்த்துக்கொள்வார். பாட்டி அதை தர்மாமீட்டர் என்பார். ’ஆமாண்டா நாம செஞ்ச தர்மத்தை அளந்து பார்த்து சொல்லிடும்! ’ என்று அதற்கு விளக்கமும் கொடுப்பார்.
அரசாங்க மருத்துவமனைகளை அந்தக் காலத்தில் தர்மாஸ்பத்திரி என்றுதான் சொல்வார்கள். தர்மத்துக்கும் ஆஸ்பத்திரிக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்ல பாட்டி இல்லை.

என் சொந்தக்காரப் பையன் சூடான இட்லி வேண்டும் என்பதற்கு ஜ்வர இட்லி கொண்டுவா என்பான்.
அம்மா காய்ச்சல் வந்து படுத்ததை நான் பார்த்ததே இல்லை.
ஒரே ஒருமுறை அம்மாவுக்கு காய்ச்சல் வந்தது. போகும்போது அம்மாவையும் கொண்டுபோய்விட்டது.
காய்ச்சல் ரெண்டு நாளுக்குமேல் நீடித்தால், பள்ளிக்கூட நண்பர்கள் என்னைப் பார்க்க வந்துவிடுவார்கள்.
ரெட்டைமண்டை கோவிந்தராசு, என் காதருகே வந்து ‘டேய் பொய்யாச்சுக்கும்தானே படுத்துக் கெடக்கே. கணக்கு டெஸ்ட் முடிஞ்சு போச்சுடா. தைரியமா வாடா’ என்பான்.
இவனை நம்பமுடியாது. மாட்டிவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உடலின் எதிர்ப்புதான் காய்ச்சலாக வருகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
காய்ச்சலின் காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். காய்ச்சலின்போது காணக்கிடைக்கும் உலகம், கட்டாய ஓய்வு, வீட்டாரின் கரிசனம் ‘அடுத்தமுறை எப்போது காய்ச்சல் வரும்?’ என்று ஏங்கவைத்துவிடும்.
இப்போது சொல்லுங்கள். காய்ச்சல் நல்லதுதானே?
— தஞ்சாவூர்க் கவிராயர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.