நாமக்கல் தமிழ் சங்கம் செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியருக்கு எழுத்துச்செம்மல் விருது !
நாமக்கல் தமிழ் சங்கம் செயின்ட் ஜோசப் கல்லூரி ப் பேராசிரியருக்கு எழுத்துச்செம்மல் விருது வழங்கிப் பாராட்டு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத். இவர் எழுதியுள்ள ஆதன் மற்றும் சரித்திர தேர்ச்சி கொள் ஆகிய இரண்டு நூல்களை திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.
தமிழின் முன்னணி இதழ்களும் பல நகரங்களில் செயல்படும் தமிழ்ச்சங்கங்களும் இந்த நூல்களையும், நூலாசிரியரையும் தொடர்ந்து பாராட்டி வரும் சூழலில் எதிர்வரும் ஆகஸ்ட் 15 அன்று கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சரித்திர தேர்ச்சி கொள் நூலுக்கு மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசுயும், பொற்கிழியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில் நாமக்கல் தமிழ்ச்சங்கம் நாமக்கல் தங்கம் மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற நிலாமுற்றம் இலக்கிய விழாவில் முனைவர் ஜா.சலேத் ஆதன் நூலை வெளியிட்டு பேராசிரியருக்கு ‘எழுத்துச்செம்மல்’ என்னும் விருதை வழங்கிப் பாராட்டியுள்ளது.
நாமக்கல் தமிழ்ச்சங்கத்தலைவர் மருத்துவர் இரா.குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சங்கச் செயலர் முனைவர் கோபால.நாராயண மூர்த்தி வரவேற்புரையாற்றி, நூலை அறிமுகம் செய்து வைத்தார். மூத்த அறிவியலாளரும், ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானியுமான கே.இளங்கோ அனுபவ உரையாற்றினார்.
பேராசியரின் ஏற்புரைக்குப் பிறகு பட்டிமன்றப் பேச்சாளர் கல்பனா தர்மேந்திரா ‘ஒரு சொல் கேளீர்!’ என்னும் பொருண்மையில் சிறப்புரை ஆற்றினார். வ.சத்தியமூர்த்தி, தமிழ்ச் செம்மல் அரசு.பரமேஷ்வரன் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர். நிறைவில் பசுமை மா.தில்லை சிவக்குமார் நன்றி கூறினார்.