“விஜய்யை பிரதமராக்கியிருப்பேன்” -’யாதும் அறியான்’ விழாவில் உளறிக் கொட்டிய பேரரசு! ஷாக்கான ’தினமலர்’
‘பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் எம்.கோபி டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் ‘யாதும் அறியான்’. இதில் ஹீரோவாக நெல்லை தினமலர் நிர்வாகத்தைச் சேர்ந்த தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக பிராணா, மற்ற கேரக்டர்களில் அப்புக்குட்டி, ஆனந்த் பாண்டி மற்றும் சிலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : எல்.டி., இசை : தர்ம பிரகாஷ், பி.ஆர்.ஓ.: தர்மா & சுரேஷ் சுகு. வரும் 18—ஆம் தேதி படம் ரிலீசாவதையொட்டி, பாடல்கள் & டிரெய்லர் ரிலீஸ் விழா சென்னையில் 14—ஆம் தேதி நடந்தது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர் பி.ஜே.பி. பேரரசு, இந்து முன்னணி கனல் கண்ணன், எல்லாப் பக்கமும் துண்டு போடும் டைரக்டர் இ.வி.கணேஷ் பாபு, மற்றும் தயாரிப்பாளர் கஸாலி, நடிகர் ‘த.வெ.க’ செளந்தர்ராஜன் மற்றும் சம்பத்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வந்தவர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் ‘பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ்’ சார்பாக வரவேற்றுப் பேசினார் நெல்லை தினமலரின் நிருபரான விஜய் ஆனந்த்.
சிறப்பு விந்தினர்களில் கனல் கண்ணனும் டைரக்டர் பேரரசும் பேசியது தான் த.வெ.க. விஜய் யார்? அவர் பின்னணியில் இருப்பது யார்? என்பதைக் காட்டிக் கொடுத்தது.
“விஜய்யை மனதில் வைத்துத் தான் 2026ல் ஒரு சம்பவம் நடப்பதாக சீன் வைத்துள்ளார். அவரின் நம்பிக்கை அது” என எது எதுவோ கக்கினார் கனல் கண்ணன்.
“நான் விஜய்யை வைத்து சிவகாசி, திருப்பாச்சி எடுத்த போது பான் இந்தியா ட்ரெண்ட் இருந்திருந்தா விஜய்யை படத்தில் பிரதமராக காட்டியிருப்பேன். அதனால் ஹீரோ தினேஷ் இந்தப் படம் ரிலீசானதும் விஜய் கட்சியில போய்ச் சேர்ந்திரு. நடிகர் செளந்தர் ராஜாவுக்கு எம்.எல்.ஏ.சீட் கிடைக்கும். உனக்கும் கிடைக்கும்” என வாய்க்கு வந்ததை வர மறுத்ததையெல்லாம் உளறிக் கொட்டினார் பேரரசு.
பேரரசுவின் பேச்சைக் கேட்ட தினமலரே ஷாக்காகியிருக்கும்.
— மதுரை மாறன்