“அனைத்து இந்து பண்டிகைகளின் மூலம் பௌத்தமே” சான்றுகளை அடுக்கிய பேராசிரியர் சீமான் இளையராஜா ! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 9
அங்குசம் சமூக நல அறக்கட்டளை மாதம் இருமுறை நடத்திவரும் யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை – 9 இன் நிகழ்வு 09.11.2024 ஆம் நாள் அங்குசம் அறக்கட்டளை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குத் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நவசக்திவேல் தலைமை தாங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா “பௌத்த அடிச்சுவட்டில் இந்து பண்டிகைகள்” என்னும் பொருண்மையில் உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றி விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியின் புரவலர் தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து விருந்தினர்களுக்குப் பயனடைகள் அணிவித்து சிறப்பு செய்தார்.
நிகழ்வில் தலைமை உரையாற்றிய பேராசிரியர் நவசக்திவேல்,“ புத்தரின் கோட்பாடுகளில் கொள்கைகளில் மூடநம்பிக்கை இல்லை. அறிவு சார்ந்தே இருந்து வந்தது. இடையில் வந்த சிலர் அதில் மூடநம்பிக்கைகளைத் திணித்து, திரித்து அவற்றை இந்து சமயம் சார்ந்தது என்றாக்கிவிட்டனர்.
நரகாசூரன் அழிக்கப்பட்ட நாள்தான் தீபாவளி என்று அறிவுக்குப் பொருந்தாத பல கட்டுக்கதைகளைக் கூறிவருகிறார்கள். சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரர் பரிநிர்வாணம் அடைந்தார் என்னும் இறைப்பை ஊருக்கும் உற்றாருக்கும் அறிவிக்க, தீபங்கள் ஏற்றப்பட்ட அகல் விளக்குகளை வரிசையாக வைத்துள்ளனர். தீப+ஆவளி என்பதில் ஆவளி என்றால் வரிசை என்ற பொருள். அதனால்தான் தீபாவளி நாளை ஜைணர்கள் என்னும் சமண சமயத்தினரும் கொண்டாடி வருகின்றனர். அப்படியானால் இஃது எப்படி இந்து சமய பண்டிகையாக இருக்கமுடியும்?” என்று உரையை நிறைவு செய்தார்.
சிறப்புரையாற்றிய தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர் சீமான் இளையராஜா பேசும்போது, “தலைமை உரையில் தீபாவளி பண்டிகை என்பது இந்து சமய பண்டிகை இல்லை என்பதை ஆதாரத்தோடு எடுத்துக்கூறினார். அதுபோலவே பொங்கல் விழா என்பது ஆதியில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதால், தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் விழாவும் பௌத்தத்தோடு நெருங்கியத் தொடர்பு உடையது.
பகவான் புத்தர் நோயுற்று மார்கழி கடைசி நாளில் உயிர் துறக்கின்றார். பின்னர் அவர் உடல் எரியூட்டப்படுகின்றது. அதன் நினைவாகத்தான் நம் தமிழர்கள் மார்கழி மாதத்தின் கடைசி நாளில் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருள்களை எரித்து வீட்டைச் சுத்தம் செய்வார்கள். அது போகிப் பொங்கல் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகின்றது. ஆதியில் இது ‘போதி பொங்கல்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். தை 1ஆம் நாள் புத்தர் பரிநிர்வாணம் பெற்று முக்தி அடைந்துவிட்டார் என்பதற்காகத்தான் இனிப்பான பொங்கலைப் படையலில் வைக்கின்றோம்.
வெள்ளிக்கிழமை புத்தர் பிறந்தார். செவ்வாய் முக்தி அடைந்தார் என்றும் புதன் ஞானம் பெற்றார் என்பதாலேயே இந்தக் கிழமைகள் இன்றளவும் சிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
விநாயகர் என்பது புத்தருக்கு உள்ள 1000 சிறப்புப் பெயர்களில் ஒன்று. அதற்குப் பொருள். வி என்பதற்கு ஒப்பிலாத என்றும் நாயகர் என்பதற்குத் தலைவர் என்றும் பொருள். புத்தருக்கு எடுக்கப்பட்ட விழாவை மடைமாற்றி, புராணக் கதைகளைக் கூறி, மூடநம்பிக்கைகளைத் திணித்து விநாயக சதுர்த்தி என்று இந்து சமயத்தவர் கொண்டாடி வருவதற்கு அடிப்படை பௌத்தமே.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கும், சிதம்பரம் நடராசர் கோயிலுக்கும் நாகப்பட்டினத்தில் இருந்து புத்த விகாரில் இருந்த தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலையைச் சிதைத்து, அதிலிருந்த தங்கத்தினால்தான் பொன்கூரைகள் வேயப்பட்டுள்ளன என்பதை நமக்கு வரலாறு ஆதாரத்தோடு சுட்டுகின்றது. ஸ்ரீரங்கம் பெருமாள் கிடந்த கோலத்தில் இருப்பது கிடந்த கோலத்தில் உள்ள புத்தரின் சிலையைப் போன்ற இருக்கும். வடக்கில் திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோயில்கூட ஒரு காலத்தில் புத்த கோயிலாக இருந்தது என்பதை தொல்லியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
கேரளாவில் உள்ள ஐயப்பனை வணங்கும்போது சாஸ்தா நாமம் சரணம் அய்யப்பா என்பது புத்தம் சரணம் என்பதோடு ஒத்துபோகின்றது. இப்படி பல இந்து சமய வழிபாடுகள் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்துக்களின் புனிதநூல் என்று சொல்லப்படுகின்ற இராமாயணத்தில் பௌத்தர்களை விரோதிகள் என்று வருணிக்கப்பட்டுள்ளது. இந்து சமயத்தின் விரோத நிலையில் பௌத்தம் இருந்துள்ளதை நாம் உணர முடிகின்றது.
அடுத்து தமிழ்நாட்டில் குட்டி தீபாவளி போன்று நடத்தப்படுகின்ற ஆயுதபூஜை என்பதும் பௌத்தத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டது. கலிங்கப் போரில் வெற்றிப்பெற்ற மன்னன் அசோகன் போர்களத்தில் மகனை இழந்த தாயின் கண்ணீர், கணவனை இழந்த மனைவியின் அழுகுரல், இரத்தம் ஆறாக ஓடியது கண்டு, மனம் திரும்பி, இனி போர் செய்வதில்லை என்று முடிவு செய்து, புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் என்ற வரலாற்று செய்தி நாம் அறிந்தது. போர் செய்வதைக் கைவிட்ட மன்னன் அசோகன் ஆயுதங்களுக்குப் பூசை செய்வதையும் நிறுத்திவிட்டார்.
ஆனால், அசோகன் போர் செய்தபோது செய்த ஆயுதபூசையை இன்று இந்தியா முழுமையும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இப்போது கொண்டாடப்பட்டு வரும் சரஸ்வதி பூசை என்பது பௌத்த சமயத்தில் கல்விக்காகக் கொண்டாடப்பட்ட ஒரு நாளையே இந்து சமயத்தினர் பல மாற்றங்களைச் செய்து கொண்டாடி வருகிறார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளை பண்டிதர் அயோத்திதாசர் கூறியுள்ளார்.
மனித பிறப்பில் ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பௌத்தம் மனிதம் போற்றிய பல விழாக்களுக்கு இந்து சமயம் புராண, புரட்டுக் கதைகளைக் கூறி, மூடநம்பிக்கையைப் புகுத்தி இன்றைக்கு விழாவாகக் கொண்டாடி வருகின்றது. பௌத்தம் மனிதத்தைப் போற்றியது. இந்து சமயம் மனிதம் போற்றுகின்றதா? என்ற கேள்வியை முன்வைக்கவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது” என்று உரையை நிறைவு செய்தார்.
விழாவின் நிறைவாக நிகழ்ச்சியின் புரவலர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து நன்றி கூறினார். சிறப்பு விருந்தினர்களுக்கு அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் தலைவர் ஜெ.டி.ஆர். சான்றிதழ்களையும் நூல்களையும் வழங்கி சிறப்பித்தார்.
— ஆதவன்.
இந்த நிகழ்வின் முழுமையான வீடியோ பார்க்க..
ஆதி தமிழர்கள் தங்கள் அறுவடை பண்டிகையாக பொங்கலை கொண்டாடினர் இது உலகம் முழுவதிலும் அறுவடை முடிந்தபின் கொண்டாடப்பட்டு வருகிறது .புத்தர் காலத்திலேயே சாக்கியர் கள் கொண்டாடி இருக்கின்றனர்.மற்றபடி ஆசீவக பண்டிகைகளை தமிழர் கொண்டாடியிருக்கலாம் .பெளத்தத்திற்கும் தமிழ்பண்டிகைகளுக்கும் என்ன தொடர்பு.ஆசீவகமும் பின் சமயமும் தமிழ்நாட்டில் வெகுசனங்களால் பின்பற்று வந்துள்ளது.பெளத்தம் குறைவு என்றுதான் படித்துள்ளேன்