“மொழிப்பற்றினை கொண்டுவர தமிழ் மரபினை கற்க வேண்டும்”
“மொழிப்பற்றினை கொண்டுவர தமிழ் மரபினை கற்க வேண்டும்”
தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த மரபிலக்கியத்தை வெறும் கவிதைகளாக எழுதுவது மட்டும் மரபுக்கவிதையல்ல. தமிழனின் வாழ்க்கை நெறிமுறைகளை கலாச்சார, பண்பாட்டினை, சமூக, அரசியலை அடுத்த தலைமுறைக்கு இலக்கண ஒழுங்குமுறைகளோடு கொண்டு செல்வது தான் சரியான மரபு கவிதை. அப்போதுதான் தமிழ் இலக்கணத்தினை மங்காது காக்க முடியும்.
யாப்பிலக்கணங்களை மட்டும் கொண்டு செய்யுள் வடிவில் பாடப்பட்ட காலகட்டத்தில் வால்ட்விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையைப் படித்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் “காட்சிகள்” என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார்.
அதற்கு அவர் இட்ட பெயர் ‘வசன கவிதை’. அவரைத் தொடர்ந்து எண்ணற்ற புதுக்கவிஞர்கள் இலகுவான தமிழில் கவிதைகளைத் தந்தனர். புதுக்கவிதைகள் இலக்கண மரபிற்கு அப்பாற்பட்ட, வடிவங்களற்ற, மக்கள் மனத்தில் உணர்ச்சியோடு, சொல்லும் கருத்துகளைப் பிசகாமல் கொண்டு சேர்ப்பதாக அமைந்தன. இதிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து நவீன கவிதை, தன்முனைக் கவிதை, ஹைக்கூ, சென்றியூ என்று காலத்திற்கேற்ப மாற்றமடைந்துவிட்டது.
இப்படியான இன்றைய காலகட்டத்தில் மரபுக்கவிதைகள் மற்றும் கவிஞர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்ற எண்ணம் வெகுவாக பரவியுள்ளது. அந்த எண்ணம் சரியானதல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் வலங்கைமானில் தஞ்சை தமிழ்மன்றம், தமிழகம் முழுவதிலிருந்தும் பல மரபுக்கவிஞர்களை அழைத்து கவியரங்கம் நடத்தியுள்ளது. அதிலும் பெண் மரபுக்கவிஞர்களை மட்டும் வைத்து, தனிக்கவியரங்க அமர்வையும் நடத்தியுள்ளனர். மரபுக்கவிதை குறித்து அமைப்பின் நிர்வாகிகளிடம் கலந்துரையாடிய போது,
வலங்கைமான் வேல்முருகன்
மரபு என்பது மக்களின் வாழ்வியல் பண்பாட்டுச் செய்திகளைக் கவிதை வடிவங்கள் வழியே கடத்திச் செல்வது. வெண்பா என்பது ஒரு வடிவம்.. விருத்தம் என்பது ஒரு வடிவம்.. இந்த வடிவங்கள் மூலமாக விருந்தோம்பல் போன்ற நமது பண்பாட்டுச் செய்திகளையும் கற்பு என்ற ஒழுக்கம் சார்ந்த செய்திகளையும் மக்களுக்குக் கடத்திச் செல்ல முடியும். குறிப்பாக கற்பு என்பது தனிமனிதனை ஒழுங்குப்படுத்துவது. அதை வெறும் அறிவுரையின் வாயிலாக சொல்லாமல் இலக்கியக் கதைகள் மூலமாகவோ பக்திநெறிகள் மூலமாகவோ அதற்கான செய்திகளை மக்களுக்கு கடத்தி செல்வதே மரபு.
சமீபகாலமாக அரசியல் செய்திகளைக்கூட மரபு வழியே கடத்தி வருகின்றனர். இப்படியாக மரபை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதன் மூலம் நம்முடைய தமிழின் பெருமையையும் தமிழனின் வரலாற்றையும் உணர்த்தி தமிழ் மீதான ஆர்வத்தையும் ஈர்ப்பினையும் அதிகமாக ஏற்படுத்த முடியும்”.
கவிஞர் கோவிந்தராஜன் பாலு..
“கல்வி வேண்டும். கல்லாமை வேண்டாம் என்பதை முன்னிருத்தியே என்னுடைய மரபுக் கவிதையினை அமைத்திருந்தேன். இன்றைய இளைஞர்களி டையே காலத்திற்கு ஏற்றார் போல் சமூக பற்றினையும் மொழி பற்றினையும் பற்றவைக்க வேண்டும். மொழிப்பற்றினை கொண்டுவர வேண்டும் என்றால் அவன் தமிழ் மரபினை முறையாக கற்றாலேயே போதும்”.
சண்முகம் வாஞ்சிலிங்கம்
“தலைவாரிப் பூச்சூட்டிச் உன்னை
பாடச் சாலைக்கு போ வென்று சொன்னாள் உன் அன்னை – என்ற பாவேந்தரின் வரிகளில் வரும் அறுசீர் விருத்தமான மா மா காய் இதனை வைத்து
“விழிகள் சொரியும் கண்ணீரை
விரைவாய் நிறுத்தி முன்னேறு
மொழியின் கைகள் பிடித்தே நீ
மேலும் மேலும் கற்றிடுவாய்
வழியாய் உனக்குத் துணையாக
வசந்தம் நல்கும் தமிழ்மொழியே!
அழியாப் புகழும் உனைச்சேர
அன்பால் உன்னை வளர்த்திடுவாய்! _
என்று எளிய நடையில் மக்கள் மனதில் மரபுக் கவிதைகள் நிற்கும்படியாக அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்லவேண்டும்”.
நிறைமதி நீலமேகம்
பெண்களுக்கென்று ஒரு அமர்வினை பெண் மரபுக் கவிஞர் களை வைத்து நடத்தியுள் ளோம்.
இன்றைய சூழலில் பெண் மரபு கவிஞர்களின் எண்ணிக்கை மிக குறைவு. வருங்காலங்களில்
பெண் மரபு கவிஞர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். ஏனென்றால் மரபு வழி வாழ்க்கை என்பது நம்முடைய பண்பாடு. நீதிநெறி இலக்கியங்களாகட்டும், பக்தி நெறி இலக்கியமாகட்டும், தனிமனித ஒழுக்கத்தையும் தனிமனித கற்பையும் போதிக்கும் படியாக உள்ளது. அதனால் நம் கலாசாரம் பண்பாட்டினை தமிழ் உணர்வோடு பாதுகாக்கும் மனஉத்வேகம் கூடும். இதனை அடுத்த தலைமுறை பெண்களுக்கும் எளிதாக கடத்திச் செல்ல முடியும்
-காவியசேகரன் செல்வி