“இந்தி எதிர்ப்பைத் தமிழர்கள் கடமையாகக் கொள்ளவேண்டும்” -பேரா.த.ஜெயராமன்

0

“இந்தி எதிர்ப்பைத் தமிழர்கள் கடமையாகக் கொள்ளவேண்டும்” -பேரா.த.ஜெயராமன்

திருச்சி தமிழர் அறிவியக்கப் பேரவையின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 130வது பிறந்தநாள் திருச்சி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. புலவர் க.முருகேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அறிவியக்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் வரவேற்புரையாற்றினார்.

காவேரி மகளிர் கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் மு.ஜெயலெட்சுமி தொடக்க உரை நிகழ்த்தினார். ஜமால் முகமது கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அ.சையது ஜாகீர் ஹசன் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் மற்றும் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் த.செயராமன், ‘பாவேந்தரின் தமிழியக்கம்’ என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்,
“பாவேந்தர் தமிழியக்கம் என்ற தலைப்பில் 48 பக்கங்களில் 24 தலைப்புகளில் தமிழ் மொழியின் சிறப்பு குறித்தும், அதன் மேன்மை குறித்தும் கவிதைகளை இயற்றியுள்ளார். தமிழியக்கத்தில் பாவேந்தர் தமிழர்களைப் பார்த்து, ஆங்கிலம் கற்றுக் கொள். அயல்மொழிகளையும் கற்றுக்கொள். இனிமைதரும் கனி போன்ற செந்தமிழை உயிராகக் கொள்ள வேண்டும். மறந்துவிடக்கூடாது. இந்தி படித்தால் வேலைகிடைக்கும் என்று பசப்பு வார்த்தைகள் சொல்லி நம்மை இந்தி படிக்கவேண்டும் என்று சொல்வார்கள்.

வடமொழியையும் இந்தியையும் தமிழர்கள் எதிர்க்கவேண்டும். காரணம் அவை இரண்டும் பார்ப்பனர்கள் ஆயுதம் என்றார். அந்த ஆயுதங்களுக்குத் தமிழர்களாகிய நாம் ஏன் வலிமை சேர்க்க வேண்டும் என்று பாவேந்தர் 1945இல் கூறினார். இப்போது 2022 ஆண்டு. 75 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அமித்ஷா நம்மை இந்தியைப் படி, கற்றுக்கொள் என்கிறார். இந்தியனாக இருக்க வேண்டுமென்றால் இந்தி படிக்கவேண்டும் என்று நம்மை நெருக்கடிக்கு ஆளாக்குகிறார்கள். திராவிடர்கள் நாம் இந்தியை, வடமொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை அமித்ஷாக்களுக்கு உணர்த்துவோம்”என்று குறிப்பிட்டார்.

“தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற இலக்கை நோக்கி நகர்வதற்கு முன்பு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகள் அனைத்தும் தமிழ் வழியில் அமைய, தமிழ்நாடு அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகாலம், பெரியார் உயராய்வு மையம், பேரறிஞர் அண்ணா ஆய்வு இருக்கை, கலைஞர் கருணாநிதி ஆய்வு இருக்கைகளுக்கு முழுநேர பேராசிரியர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும்.
திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் பல்கலைக் கழகம் சார்பில் ரூ.2.50 இலட்சம் ஒதுக்கப்பட்டு பெரியார் பிறந்தநாள் விழா நடத்தப்பெறும். தற்போது பெரியார் பிறந்தநாள் நடத்திட ரூ.50 ஆயிரத்தை மட்டும் ஒதுக்கியுள்ளது கவலையையும் மனவேதனையும் அளித்துள்ளது. எனவே வழக்கம்போல் பெரியார் பிறந்தநாள் விழாவுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் ரூ.2.50 இலட்சம் ஒதுக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

-ஆதவன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.