மக்களுக்காக மக்களோடு தலைமைச் செயலாளர்!

0

மக்களுக்காக மக்களோடு தலைமைச் செயலாளர்!

தலைமைச் செயலாளர் என்றால், அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்! சுலபத்தில் அணுக முடியாதவர் என்ற பொதுத் தன்மையை உடைத்து நாளும்,பொழுதும் மக்களோடு தொடர்பில் இருப்பவர் இறையன்பு. உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த அவர் நேரடியாக களம் கண்டது ஒரு சுவாரசியமான அனுபவம்!

https://businesstrichy.com/the-royal-mahal/

காமராஜர் காலம் தொட்டு முதல்வர் களுடன் நெருக்கமாக இருப்பது தலைமைச் செயலாளர்களே. அரசின் திட்டங்களை வடிவமைப்பதிலும், சக அதிகாரிகளை சாட்டையை சுழற்றி வேலை வாங்குவதிலும் தலைமைச் செயலாளர்களின் பங்கு அளப்பரியது.
திராவிட இயக்க ஆட்சியின் தொடக்க காலமான 1971ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை தலைமைச் செயலாளராக இருந்த சபாநாயகம் தி.மு.க.வின் பல்வேறு திட்டங்களை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதில் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் கைகோர்த்து செயல்பட்டவர். அதன் பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சியில் இப்பதவிக்கு வந்த டி.வி.அந்தோணி ஓரளவுக்கு பேசப்பட்டார். ஆ.பத்மநாபன் மிகச் சிறந்த நிர்வாகி என பெயரெடுத்தவர்!

1989ஆம் ஆண்டின் தி.மு.க. ஆட்சியின் போது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.எம்.இராஜேந்திரன் பெரிதும் பேசப்பட்டார்.1991ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெயலலிதா ஆட்சியில் நியமிக்கப்பட்ட வெங்கட்ரமணன் நேர்மையான அதிகாரியாக இருந்ததால் சசிகலாவுக்கு பிடிக்காமல் போனது. இதனால் அவர் நீக்கப்பட்டு ஹரிபாஸ்கர் நியமிக்கப்பட்டார். சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்த ஹரிபாஸ்கர் தனது தவறான நடவடிக்கைகளின் காரணமாக ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு அதனால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

1996ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட கே.ஏ.நம்பியார், 2001ஆம் ஆண்டு ஜெ ஆட்சியின்போது தலைமைச் செயலாளர் ஆக இருந்த சுகவனேஸ்வர் ஆகியோரும் அப்பதவிக்கு மரியாதை சேர்த்தனர். 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் ஷீலா பாலகிருஷ்ணன், இராம் மோகன் ராவ், கிரிஜா வைத்தியநாதன், சண்முகம் ஆகியோர் தலைமைச் செயலாளர் என்ற பொறுப்பையே மறந்து ஆளும் அரசியல் கட்சியின் அங்கமாக நடந்துக் கொண்டனர். இராம்மோகன்ராவ் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ராணுவத்தின் துணையுடன் சோதனை நடத்தியதெல்லாம் கேவலத்தின் உச்சம். ”ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா” என்று ராம்மோகன்ராவ் பேட்டி அளித்தது அவலத்தின் அடையாளம்!

‘தலைமைச் செயலாளர் என்றாலே முதல்வருக்கும், ஆளும் கட்சிக்கும் ஜால்ரா அடிப்பவர்’ என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர்.
இந்நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. அவர்களின் முதல் நியமனம் தலைமைச் செயலாளராக வெ.இறையன்புவை நியமித்தது தான். அதிகாரிகள் மட்டுமின்றி, மக்களும் இந்த நியமனத்தைப் பற்றி சிலாகித்துப் பேசினர். ஆனால், கட்சியினர் மத்தியில் ஒரு அச்சம் இருந்தது. இறையன்பு நெளிவு சுளிவுடன் இருக்க மாட்டார். கட்சியினர் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என்றெல்லாம் வருத்தப் பட்டனர். இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடையப் போகிறது. அவரது செயல்பாடுகள் குறித்த இந்த ஓராண்டு சம்பவங்களை மனதில்அசை போட்டோம்! அதில் பாசிட்டிவ் காட்சிகளே அதிகம் தெரிந்தன.

முதல்வர் ஒரு திட்டத்தை அறிவித்தால், மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் அதை கவனித்துக் கொள்வார்கள் என்று நினைக்காமல், அந்த திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டத்திற்கோ களத்திற்கோ நேரில் சென்று அதில் உள்ள குறைகள், நிறைகள் என கள ஆய்வு செய்வதில் இறையன்பு முதலிடம் வகிக்கிறார். அண்மையில் கடந்த இரு மாதங்களில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் கோவளம், செம்பாக்கம், கீரப்பாக்கம் போன்ற கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். கோவளத்தில் ‘புளு பீச்’ எனப்படும் மக்களின் சொகுசு பயண திட்டத்தின் கீழ் கட்டப்படும் உணவக வளாகத்தை பார்வையிட்டார். ஆனால் அவர் மனம் அதில் லயிக்கவில்லை. பெரிதாக ஆர்வம் காட்டாமல் கிராமங்களை நோக்கி உடனடியாக புறப்பட்டார்.

செம்பாக்கம் கிராமத்தில் இருளர் பழங்குடி மக்களை பார்த்ததும் அவரது ஆர்வம் துளிர்த்தது. வீட்டில் என்ன காலை உணவு என்று கேட்டு அவர்களின் சமையலறையைத் தட்டினார். இவ்வளவு பெரிய அதிகாரியிடம் என்ன சொல்வது என்று நெளிந்த இருளர் பழங்குடி மக்கள் ”தினமும் காலையில் பழைய சோறு தான் எங்களது உணவு” என்று கூறினர். அதற்கும் அவர்களிடையே அதிகாரிகளுக்கு ஒரு வகுப்பெடுத்தார்.
”எளிய மக்கள் ஒரு உணவை எப்போதும் வீணாக்குவதில்லை. நாம் நமது வீட்டில் அப்படித்தான் நடந்து கொள்கிறோமா?” என்று அதிகாரிகளை நோக்கி கேள்வியை வீசினார். யாரிடமும் பதிலில்லை. வேறு இடம் போகலாம் என்று அவரே மடை மாற்றினர்.

ஆனால், இறையன்பு மீண்டும் மக்களிடமே சென்று, ”ஏன் வீட்டின் முன்பு, ஒரு முருங்கைக் கிளையை நடலாமே, தக்காளிச் செடி வளர்க்கலாமே” என்றார். ”மகளிர் சுய உதவிக்குழு துவக்குங்கள், அரசு உதவி செய்யும்” என்று தெம்பூட்டினார். ”நிழல் தரும் மரங்களை விட பயன் தரும் மரக்கன்றுகளை வளருங்கள், உங்களின் தினசரி பயன்பாட்டிற்கும் உதவும் ” என்றார். குழந்தைகளை மறக்காது படிக்க வையுங்கள், தேவைப்பட்டால் உங்கள் குடியிருப்பிலேயே ஒரு அங்கன்வாடி அமைத்து தர உதவி செய்கிறோம்” என உறுதி அளித்தார். ”இதற்கு முன்பு கூரை வீட்டில் வசித்தீர்கள், தற்போது கான்கிரீட் வீடு அரசால் வழங்கப்பட்டுள்ளது,, இரண்டுக்கும் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?” என்று மக்களிடம் கேட்டார். அப்படியே கீரப்பாக்கம் கிராமத்திற்கு சென்ற அவர் நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு, நெல் மூட்டைகள் வீணாகாமல் கிடங்குக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தார்.

”சார் இன்னும் நீங்கள் சாப்பிடவில்லை, காலை உணவு தயாராக உள்ளது” என்றனர். ”அது கிடைக்கணும் தான் இவ்வளவு ஓடறோம்” என்று பஞ்ச் அடித்தார். ‘எப்படியோ தலைமைச் செயலாளர் தனது வேலை முடிந்து போனால் போதும்’ என்று அதிகாரிகள் நினைக்கும் அளவிற்கு மாவட்டம் முழுவதும் சுற்றிச் சுழன்றார்.

இந்நிலையில் மீண்டும் கடந்த 24ஆம் தேதி ஊராட்சிகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட கிராம சபாக்களில் பங்கேற்றார் இறையன்பு. புதுப்பாக்கம் ஊராட்சிக்கு சென்ற அவருக்கு உட்கார மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஏற மறுத்து, ”நான் மக்களோடு அமர்கிறேன், ஊராட்சி நிர்வாகம் கிராம சபாவை நடத்துங்கள்” என்றார். அதிகாரிகள் வெலவெலத்துப் போயினர். ஊராட்சி செயலாளர் தீர்மானங்களை வாசிப்பதில் அவரிடம் ஒருவித பயம் வெளிப்பட்டது. ஆனால், தட்டுத் தடுமாறி பேசியவர்களை தைரியப்படுத்தி உற்சாகமூட்டினார் இறையன்பு.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சமூகத் தணிக்கை உறுப்பினர்கள் தேர்வு என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த குழுவில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை மேடைக்கு வருமாறு அழைத்தார் இறையன்பு! பிறகு அவர்களிடம் அவர், ”சமூகத் தணிக்கை என்றால் என்ன?” என கேள்வி எழுப்பினார். ஒருத்தருக்கும் தெரியவில்லை.

”அரசின் நிதி எந்த வகையில் செலவிடப்படுகிறது, இடையில் யாரேனும் தரகர்கள் அடித்துச் செல்கிறார்களா, செலவிடப்பட்ட நிதிக்கு ஏற்ப பணிகள் முடிந்துள்ளதாக என மக்களின் சார்பில் தணிக்கை செய்வதுதான் சமூகத் தணிக்கை” என்று மக்களுக்கு பாடம் எடுத்தார். ”ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இதுபோன்று ஒரு திட்டம் இருப்பதையயே தங்களுக்கு சொல்லவில்லை என்றும், கையெழுத்து கேட்டால் போடுவோம்” என்றும் மக்கள் வெள்ளந்தியாக கூறினர்.

”நீங்கள்தான் எஜமானர்கள், நாங்கள் உங்களின் ஊழியர்கள், எங்களை கேள்வி கேளுங்கள், எங்களை கண்காணியுங்கள், எல்லாம் ஒரு நாள் சரியாகும்” என்று நம்பிக்கை ஊட்டினார் இறையன்பு. மக்களின் முன்பு அதிகாரிகளையும் அவர் கடிந்து கொள்ளவில்லை. அது ஒரு நல்ல தலைமை அதிகாரியின் பண்பாக பார்க்கலாம். திட்டி, மிரட்டி, ஏறி மிதித்து வேலை வாங்குவதை விட தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதை தனது இயல்பாக வைத்துள்ளார் இறையன்பு. எல்லா ஆட்சிகளிலும் நல்ல தலைமைச் செயலாளர்கள் வாய்ப்பதில்லை. சேற்றில் முளைத்த செந்தாமரை போல் நமக்கு இறையன்பு வாய்த்துள்ளார். அவரை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது இந்த ஆட்சியின் வெற்றி

 

நூலுக்கு பரிசு: தவிர்த்த தலைமைச்செயலாளர்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் இலக்கியவாதியுமான வெ.இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவிக்கு வந்ததில் இருந்து பல முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் தனது புத்தகத்திற்கு தான் தலைமைச் செயலாளராக இருக்கும் போது விருது பெறுவது சரியாக இருக்காது என்று கூறி அதை தவிர்த்திருக்கிறார் இறையன்பு.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மகேசன் காசிராஜனுக்கு தலைமைச் செயலாளர் ஏப்ரல் 28-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ” தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில், 2018 ஆம் ஆண்டு வெளியான நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று…. தெரிவு குழுவால் தெரிவு செய்யப்பட்ட தமிழில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர்கள் மற்றும் அதன் பதிப்பகத்தாருக்கு பரிசு வழங்கும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நான் எழுதிய, ‘மூளைக்குள் சுற்றுலா’ என்ற புத்தகம் தெரிவு செய்யப்பட்டு பரிசு பெறும் விழாவுக்கு என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2021 பிப்ரவரி திங்களில் தெரிவுசெய்யப்பட்ட எனது படைப்பிற்கு இவ்வாண்டு நடைபெறும் விழாவில் தலைமைச் செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையதல்ல. எனவே எனது படைப்பிற்கு வழங்கப்படும் இப்பரிசை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு.

 

நன்றி :

மதுராந்தகி நாச்சியார் 

அறம் இணையதளம்

 

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.