சோறு போட்டது குற்றமா ? உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த இளம்பெண் கைது!
நெல்லையில் திருடிய ஸ்கூட்டர் கோவில்பட்டியில் மீட்கப்பட்டது. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்
நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்தவர் குமார் (53). இவர், அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம் வேலை முடிந்து சாப்பிடுவதற்காக குமார் தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே இளம்பெண் ஒருவர், நின்று கொண்டிருந்தார். அவர், குமாரிடம் ‘ஏதாவது சாப்பிட கொடுங்கள், பசிக்கிறது’ என்றார். இதைத்தொடர்ந்து குமார், தனது வீட்டில் உள்ளவர்களிடம் அவருக்கு ஏதாவது சாப்பிட கொடுங்கள் எனக் கூறினார். இதையடுத்து அந்த இளம்பெண்ணிற்கு வீட்டில் இருந்தவர்கள் சாப்பாடு கொடுத்தனர். அதனை வாங்கி வீட்டின் வெளியே வைத்து அந்த இளம்பெண் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
![திருடப்பட்ட ஸ்கூட்டி](https://angusam.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-8.10.07-PM.jpeg)
அதன்பிறகு குமார் மற்றும் குடும்பத்தினர் வீட்டினுள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். இதற்கிடையில் வெளியில் சாப்பிட்டு கொண்டிருந்த இளம்பெண், அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு, குமார் ஸ்கூட்டியை சாவியுடன் நிறுத்தியிருப்பதை பார்த்து அதனை திருடிக் கொண்டு ஓட்டிச் சென்று விட்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின் புத்தூர் ஹோட்டல் அருகே சென்ற போது ஸ்கூட்டியில் பெட்ரோல் இல்லாததால் அது தானாக நின்று விட்டது. இதைத் தொடர்ந்து அந்த இளம்பெண், ஸ்கூட்டியை உருட்டிக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நாலாட்டின் புத்தூர் போலீசார் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர், முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார்.
![கஸ்தூரி (30)](https://angusam.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-8.10.08-PM.jpeg)
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண், விருதுநகர் ஸ்ரீநகரைச் சேர்ந்த சுந்தரம் மகள் கஸ்தூரி (30) என்பதும், அவர், சாலையில் உருட்டி கொண்டு வந்தது நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்த குமாரிடம் திருடிய ஸ்கூட்டர் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், ஸ்கூட்டரை மீட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட கஸ்தூரி மற்றும் பறிமுதல் செய்த ஸ்கூட்டரை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— மணிபாரதி.