இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த இளைஞர்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை
கன்னத்தில் அறைந்த இளைஞர்!
தஞ்சையில் வணிக நிறுவனம் ஒன்றில் பொருட்கள் வாங்க வந்திருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை கன்னத்தில் பளாரென அறைந்து, அவரை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார்.
வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில், தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவ் இளைஞரை கைது செய்தனர்.
தஞ்சை ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். வயது 42. இவர் தெற்குவீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கடந்த 2011-2012 ஆம் ஆண்டு தனது வீட்டை அடமானம் வைத்து தொழில் தொடங்குதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கடன் வாங்கியுள்ளார்.
ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டு அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, முதுநிலை மேலாளர் நந்தகுமாரின் உத்தரவின்பேரில் முருகேசனின் வீட்டை வங்கி அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் கையகப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடராஜ் சில்க்ஸ் கடைக்கு செல்லும் மாமா சாகிப் சாலை இறக்கத்தில் உள்ள மெட்ரோ பஜார் என்ற வணிக நிறுவனத்தில் பொருள்கள் வாங்க மேலாளர் நந்தகுமார் (வயது 40) ஞாயிற்றுக்கிழமை மாலை வந்துள்ளார்;. எதிர்பாராவிதமாக, அதே வணிக நிறுவனத்தில் பொருள்கள் வாங்க முருகேசனும் வந்துள்ளார்.
வங்கி மேலாளர் நந்தகுமாரைப் பார்த்த முருகேசன் ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், வங்கி மேலாளரின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்து, கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார். இத் திடீர் தாக்குதலை எதிர்பாராத வங்கி மேலாளர் அதிர்ச்சியில் நிலைகுலைந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், அவரது புகாரின் பேரில், தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 294பி (தகாத வார்த்தைகளால் திட்டுதல்) 352 (தாக்குதல்) 506(1) (கொலை மிரட்டல் விடுதல்) ஆகிய பிரிவுகளின்; கீழ் வழக்குப் பதிவு செய்து முருகேசனை திங்கள்கிழமை மாலை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.