1000 கோடி+முதல்வர் பதவி ! சீமானிடம் ரேட் பேசியது எந்தக் கட்சி ?

யார் 1000கோடி+முதல்வர் பதவி என்று பேரம் பேசினார் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். இல்லையென்றால் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைமை மற்றும் தேசியத் தலைமைக்கு வேண்டுகோள் வைப்போம்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

1000 கோடி+முதல்வர் பதவி ! சீமானிடம் ரேட் பேசியது எந்தக் கட்சி ?

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாமக்கல்லில் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசியதாவது: மக்கள் மீதான அக்கறையில்தான், அன்பால்தான் கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்கிறோம். 15 ஆண்டுகளாகக் களத்தில் போராடும் எங்களுக்கு என்ன கொடுத்தீர்கள்? கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி., என எதையும் நீங்கள் (மக்கள்) கொடுக்கவில்லை. ஆனால் இதையெல்லாம் கொடுக்கிறேன் என என்னைக் கூட்டணிக்கு அழைத்தார்கள். 15 சீட், 2026ல் நீங்கள்தான் முதல்வர், 1,000 கோடி ரூபாய் எனச் சொல்லிக் கூப்பிட்டார்கள். குடும்பத்துக்குத் தனியாகப் பணம், கட்சிக்குத் தனியாக நிதி தருகிறோம் என்றார்கள். தெருக்கோடியில்கூட நிற்பேன். ஆனால் உங்களோடு வரமாட்டேன் என மறுத்தேன். இவ்வாறு அவர் பேசினார். ஆனால், எந்தக் கட்சி இவரிடம் பேரம் பேசியது என்ற தகவலை அவர் கூறவில்லை என்று தினமலர் இணையத்தில் ஏப்.12ஆம் செய்தி வெளியிட்டது. இதன் உண்மை நிலவரத்தை விளக்க அங்குசம் செய்தி முற்படுகின்றது.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

2026ஆம் ஆண்டு மே மாதம் தற்போதைய திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலப் பதவி முடிவுக்கு வருகின்றது. இது தொடர்பாக 2026ஆம் ஆண்டு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறும். அப்போது திமுக கூட்டணியில் இப்போது இருக்கும் கட்சிகள் அப்படியே கூட்டணியில் தொடர வாய்ப்புகள் உண்டு. திமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான். மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. அதிமுக சார்பில் ஒரு கூட்டணி அமைக்கப்படும். இப்போது உள்ள தேமுதிக கூட்டணியில் இருக்கும். மேலும் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், பார்வார்டு பிளாக் கட்சியும் இடம் பெறும். மேலும் சிறு தனிநபர் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புண்டு. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் இதிலும் மாற்றம் இருக்காது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அடுத்துப் பாஜக தலைமையில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு கூட்டணி அமையும். அதில் இப்போது உள்ள தனிநபர் கட்சிகளும், டிடிவி தினகரனின் அமமுக கட்சியும் தொடர வாய்ப்புகள் உண்டு. பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைதான் என்பதையும் பாஜக அறிவித்துவிட்டது. இதனால்தான் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது என்பதே உண்மையாகும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தற்போது நாடாளுமன்றத்திற்குக் கூட்டணி வைத்துள்ள பாமக சட்டமன்றத் தேர்தலில் “மாற்றம், முன்னேற்றம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்தித் தனித்தே போட்டியிடும் என்பதைப் பாமக தலைவர் அன்புமணி தெளிவுபடுத்தியுள்ளார். பாமக சார்பிலும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு கூட்டணி அமைய வாய்ப்புண்டு. எந்தக் கட்சிகள் இணையும் என்பதை யூகம்கூடச் செய்யமுடியவில்லை. சில தனிநபர் கட்சிகள் பாமக கூட்டணியில் இணையலாம். பாமக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணிதான் என்பது அறிவிக்கப்பட்டுவிட்டது.

2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர்கள் திமுக – மு.க.ஸ்டாலின், அதிமுக – எடப்பாடி பழனிசாமி, பாஜக – அண்ணாமலை, பாமக – அன்புமணி என்று அறிவிக்கப்பட்டு அரசியல் களம் தெளிவாக உள்ள நிலையில், நாமக்கல்லில் பேசிய சீமான், தன்னை ஒரு கட்சி சட்டமன்றத் தேர்தலில் 15 சீட் + தேர்தல் செலவுக்கு 1000 கோடி + முதல்வர் பதவி என்று பேரம் பேசியுள்ளது என்று போகிறபோக்கில் அடித்துவிட்டுள்ளார். 1000 கோடி கொடுத்துச் சீமானை அழைக்கும் செல்வவளம் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. அதிமுக, பாமக போன்ற கட்சிகள் நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொள்ளும். அதற்கு விலையாக 1000 கோடி+முதல்வர் பதவி என்று பேரம் பேசாது. திமுக நாம் தமிழர் கட்சியைப் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. மேலும் சீமான் திமுகவை மட்டும் கடுமையாக விமர்சனம் செய்து பேசிவருகிறார்.

இது குறித்துப் பாஜக பிரமுகர் அங்குசம் செய்தியிடம் பேசியபோது, “சீமான் பெயர் குறிப்பிடாமல் பேரம் பேசிய ஒரு கட்சி என்றது சமூக ஊடகங்களில் பாஜக என்றே குறிப்பிடப்படுகின்றது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் எந்தக் கட்சிகளை இணைப்பது என்பதும் அவர்கள் செலவுக்குத் தொகை வழங்குவது என்பது தேசியத் தலைமை எடுக்கவேண்டிய முடிவு. 1000 கோடி+முதல்வர் பதவி தருகிறோம் என்று பாஜக சார்பில் பேரம் பேசியது பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா இவருமாகத்தான் இருக்கமுடியும். வேறு யாரும் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கப் பேரம் பேசியிருக்கமுடியாது. முதல்வர் வேட்பாளரைச் சீமானுக்கு விட்டுக்கொடுப்பது என்ற முடிவு மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

கோப்பு படம்

அப்படித் தெரிவிக்கப்பட்டிருந்தால் அண்ணாமலை சீமானைக் கடுமையாகத் தேர்தல் பிரச்சாரத்தில்,“நாடாளுமன்றத் தேர்தல் என்னும் பெரும்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சீமான் போன்றவர் ஒரு ஓரமாக விளையாட வேண்டும். பாஜகவை எதிர்த்து விளையாடக்கூடாது” என்று  ஏன் விமர்சனம் செய்யவேண்டும். மேலும் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் 15% வாக்கு வங்கியைப் பெறும். 5% வாக்கு வங்கியை அமமுக பெறும். நாம் தமிழர் இந்தத் தேர்தலில் 8% வாக்கு வங்கியைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. நாம் தமிழரைப் பாஜக இணைத்துக்கொண்டால் கூட்டணியின் வாக்குவங்கி 28%ஐ தொடும். இதை வைத்துக்கொண்டு 52% வாக்கு வங்கியுள்ள திமுக கூட்டணியை எதிர்த்து 28% வாக்குவங்கியுள்ள பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் எப்படி 120 இடங்களைப் பிடித்து எப்படி ஆட்சி அமைக்கமுடியும்? எல்லாக் கணக்கும் பாஜகவுக்குத் தெரியும். சீமானிடம் பாஜக பேரம் பேசியது என்பது அவதூறு செய்தியாகும். பாஜக சார்பில் யார் 1000கோடி+முதல்வர் பதவி என்று பேரம் பேசினார் என்பதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். இல்லையென்றால் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைமை மற்றும் தேசியத் தலைமைக்கு வேண்டுகோள் வைப்போம்” என்று கொந்தளிப்புடன் முடித்துக்கொண்டார்.

ஆதவன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.