பறிமுதல் செய்யப்பட்ட 50 இலட்சம் ! நம்புங்கள் த.வெ.க. ஊழலற்ற கட்சி !
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 17-வது சட்டப்பேரவைக்கான வேட்புமனுதாக்கல் மற்றும் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் தனது கெடுபிடிகளில் தீவிரம் காட்டி வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் பகுதியில் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல லட்சம் பணம் பதுக்கி வைத்திருப்பதாக லால்குடி தாசில்தாரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பறக்கும் படை குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டனர்.
சம்பந்தபட்ட வீட்டை சல்லடை போட்டு, தேடியதில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. ரூ. 10 இலட்சத்துக்கு மேல் இருப்பது தெரிந்ததால், தேர்தல் அதிகாரி தமிழ்ச்செல்வன் வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் வருமான வரித்துறையினரும் சேர்ந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட 50 இலட்சம் ரொக்கமாக சிக்கியது. கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை சம்பந்தபட்டவர்கள் சமர்ப்பிக்காத நிலையில், இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இலால்குடி தொகுதியில், த.வெ.க. சார்பில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனர் வீட்டில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டு 50 இலட்சம் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, புதிய முகமாக ஊழலற்ற ஆட்சியை அமைப்பேன் என்று மேடை தோறும் சபதம் பேசிவரும் நடிகர் விஜயின் த.வெ.க. கட்சியின் யோக்கியதை இதுதானா? என்றே கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.