ராம் சரணின் ‘பெத்தி’ பிரஸ்மீட் நியூஸ்!
‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ & ‘சுகுமார் ரைட்டிங்ஸ்’ தயாரிப்பில் ‘விருத்தி சினிமாஸ்’ வெங்கட சதீஷ் கிலாரு இணைத் தயாரிப்பில் புச்சிபாபு சனா டைரக்ஷனில் தடகள விளையாட்டு வீரனாக ‘மெகா பவர் ஸ்டார்’ ராம்சரண் நடிக்கும் படம் ‘பெத்தி’. இதில் ராம்சரணுக்கு ஜோடியாக ஜான்விகபூர் நடிக்கிறார். ஒரு குத்தாட்டப் பாடலுக்கு வருகிறார் ஸ்ருதி ஹாசன். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவராஜ்குமார், ஜெகபதிபாபு, திவ்யேந்து சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர்.
‘பெத்தி’யின் ஒளிப்பதிவு : ஆர். ரத்னவேலு, இசை : ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டிங் : நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா, பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
ஜூன்.04-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘பெத்தி’ ரிலீசாவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரமோஷன் பணிகளில் நடந்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக சென்னையில் படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா மே.30-ஆம் தேதி மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள்….

ஆர்.ரத்னவேலு, “சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்களைப் போல இந்த பெத்தியும் எனது சினிமாப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இருக்கும். அருமையான திரைக்கதையை எழுதியுள்ளார் டைரக்டர் புச்சிபாபு சனா. இதற்கு உயிர் கொடுத்திருப்பது இசை, காட்சியமைப்பு, ராம்சரணின் சிறந்த நடிப்பு. ஷிவராஜ்குமாரின் போர்ஷன் தான் படத்திற்கு பெரும் பலம். உடல் தோற்றத்தில் மாற்றத்திற்காக பல மணி நேரங்கள் கடுமையான பயிற்சி செய்து உழைத்துள்ளார் ராம்சரண்”.
திவ்ய்ந்து சர்மா, “ஒரு நடிகராக புது முயற்சி செய்ய அருமையான வாய்ப்பாக இந்தப் படம் அமைந்துள்ளது. என்னை செலக்ட் பண்ணிய புச்சிபாபு சனாவுக்கும் ஆதரவளித்த ராம்சரணுக்கும் நன்றி”.
புச்சிபாபு சனா, “சென்னை என்பது ஒரு நகரம் மட்டுமல்ல. இங்கு சினிமா வாழ்கிறது, சினிமாக்கலைஞர்களை மக்கள் நேசிக்கிறார்கள். எனக்குப் பிடித்த ஏஆர்.ரஹ்மான், ரத்னவேலு, தேவி ஸ்ரீபிரசாத் போன்ற கலைஞர்கள் சென்னையில் தான் இருக்கிறார்கள். விஜய்சேதுபதி என்கிற மாபெரும் நடிகரும் இங்கு தான் இருக்கிறார். நான் சென்னை வரும்போதெல்லாம் என்னை அன்புடன் வரவேற்பார். இந்த பெத்தியில் ராம்சரணின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் ராம்சரண் சார் தான். ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணந்து பணியாற்றுவேன் என கனவிலும் நினைத்ததில்லை. நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கிறார் கேமராமேன் ரத்னவேலு சார். அதே போல் ராம்சரணுக்கு குருவாக நடித்திருக்கும் ஷிவராஜ்குமார் சாருக்கு மிகவும் நன்றி”.

ஷிவராஜ்குமார், “இந்தப் படத்தில் கமிட்டான பிறகு தான் எனக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம். இதனால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய்விடுமோ என கவலையாக இருந்தது. ஆனால் டைரக்டர் புச்சிபாபு சனாவும் ராம்சரணும் எனக்காக காத்திருந்து, நான் சிகிச்சை முடிந்து வந்த பின் தான் ஷூட்டிங் நடத்தினார்கள். அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரத்னவேலுவுடன் தமிழில் தான் பேசிக்கொண்டிருப்பேன். அதுதான் எங்களுக்குள் சிறப்பு இணைப்பாக உருவானது”.
ஏ.ஆர்.ரஹ்மான், “டைரக்டர் சுகுமார் சார் தான் புச்சிபாபு சனாவை எனக்கு அறிமுகப்படுத்தினார். புச்சிபாபு கதையைச் சொன்னார். அந்த நேரத்தில் நான் சில பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும் வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனாலும் பெத்தியில் இருக்கும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் என்னை ரொம்பவே ஈர்த்ததால் ஒத்துக் கொண்டேன். ரோஜா காலத்திலிருந்து இப்போது வரை சினிமா இசையில் பல மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கு. நானும் பலரிடந்து கற்று ஊக்கமடைந்து வருகிறேன்”.
ராம்சரண், “எங்களின் அழைப்பை ஏற்று வந்த சென்னை மற்றும் தமிழ்நாடு மீடியா நண்பர்களுக்கு நன்றி. எனது தாயாரும் சென்னையில் தான் பிறந்தார்கள். நானும் இங்கு தான் பிறந்தேன். அதனால் எனது படங்களின் புரமோஷனுக்காக சென்னை வருவதென்றால் எனது தாய்வீட்டிற்கு வருவது போலத்தான். இந்தப் படத்தில் என்னைவிட, எங்களைவிட அதிகம் உழைத்தவர் புச்சிபாபு சனா தான். நாங்களெல்லாம் வீட்டைத் தாங்கும் ஆதாரத்தூண்கள் என்றால் ரஹ்மான் சாரும் ரத்னவேலு சாரும் தான் மையத்தூண்கள்.

ரத்னவேலு சாருடன் நான்கு படங்களில் வேலை செய்துள்ளேன். நான் இரண்டு படங்களைத் தயாரித்த போதும் என்னுடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின் ஜெயிலரில் ஷிவராஜ்குமார் சார், சுருட்டு புகைத்தபடி ஸ்லோமோஷனில் நடந்து வரும் சீனை பல நூறுமுறை பார்த்திருப்பேன். அந்த லெஜெண்டும் இதில் இணைந்தது எனது பாக்கியம். குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது”
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.