“ஆட்சிக்கு வந்தும் பொறுப்பில்லாமல் பேசுகிறார்கள்” – தவெக அரசை விமர்சித்த கனிமொழி கருணாநிதி!
தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகும், பொறுப்பு இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு சூழலை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்: கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், எழும்பூர் தெற்கு பகுதியில், மாவட்ட மகளிர் அணி சார்பாக முத்தமிழறிஞர் கலைஞரின் 103வது பிறந்தநாள் மற்றும் புத்தெழுச்சி நாள் விழாவை முன்னிட்டு, “புத்தெழுச்சி–12: வாழ்த்தட்டும் பெண்மை! வளரட்டும் நன்மை!” எனும் தலைப்பில் மாவட்ட மகளிர் அணி கொண்டாடும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா சென்னை – வேப்பேரி, ஒய்.எம்.சி.ஏ டவுட்டன் ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
வாழ்த்தட்டும் பெண்மை! வளரட்டும் நன்மை! என்று பேச்சை தொடங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி.; நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சிறப்பான மகளிர்கள் நடத்தும் இந்தக் கூட்டத்தில் மற்றெட்ட பெருமையும் மகிழ்ச்சியும் பெறுகிறேன்.
எந்தக் கூட்டமாக இருந்தாலும், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தொடர்ந்து ஒரு மனிதன் எப்படி இப்படி உழைக்க முடிகிறது என்று எல்லாரையும் வியக்க வைக்கும் அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், பல நேரங்களில் மகளிர்களை ஒதுக்குவதையே பணியாக சிலர் வைத்திருப்பார்கள். மகளிரை ஊக்கப்படுத்தி, அவர்களையும் அரவணைத்து தன்னுடைய மாவட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் நம் மாவட்ட கழக செயலாளர் சேகர் பாபு.
இந்த அரங்கத்துக்குள் நான் நுழைகின்ற பொழுது, இங்கே சில சகோதரிகள் என்னை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டார்கள். மேடையில் இருந்தவர்கள்கூட கனத்த முகத்துடனும், கண்களில் கண்ணீருடனும் உரையாடியதைப் பார்த்தோம்.
ஒன்றை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தலைவர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தன் வாழ்நாளில் தான் போட்டியிடும் இடங்களில் தோல்வியை காணாத ஒரு தலைவர் என்றால் அது தலைவர் கலைஞர் அவர்கள். ஆனால் பொது வாழ்க்கையில் இயக்கத்தின் எத்தனையோ தோல்விகளை தன் தோளில் சுமந்த தலைவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள்.
மக்கள் பணியில் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தை விட, ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் எதிர்க்கட்சியாகப் பணியாற்றிய காலங்கள்தான் அதிகம். ஆனால், அவர் தன்னுடைய வாழ்க்கையில் தாரக மந்திரம் என்பது நாம் ஒருவருக்கு நல்லது செய்கிறோம் என்றால் அவர்கள் அதற்காக நன்றியோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.
அப்படி இல்லை என்ற காரணத்திற்காக நாம் நன்மை செய்வதை நிறுத்தி விடக் கூடாது. தொடர்ந்து அவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியது நம்முடைய கடமை என்று தன் வாழ்நாள் தாரக மந்திரமாக ஏற்றுக் கொண்ட தலைவர் கலைஞர் அவர்கள்.
அவருடைய பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம். நான் பல முறை பார்த்திருக்கிறேன் . தேர்தல் முடிவுகள் இப்போதெல்லாம் ஒரு நான்கு மணி நேரத்துக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்து விடுகின்றன. முன்னாளில் வாக்கு எண்ணுபவர்கள் பெட்டியைத் திறந்து எண்ணி, தகராறு நடக்கும், சண்டை நடக்கும், எல்லாவற்றையும் தாண்டி அதன் முடிவுகள் மாலை வர வரத்தான் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.
அப்படி மதியம் எல்லாம் ஒரு இறுக்கமான சூழல் இருக்கும். அதைத் தாண்டி மாலை வர வர தோல்வியா வெற்றியா என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்படும் அந்த நேரத்தில்தான், “அடுத்த நாள் நன்றி அறிவிப்புக் கூட்டம்” என்று அறிவித்த தலைவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள்.
அடுத்த நாள் முரசொலியில் கழக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிய தலைவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள். அடுத்து பணி என்ன, அடுத்து போராட்டம் என்ன, அடுத்து ஆர்ப்பாட்டம் என்ன, மக்களுக்காக எதற்காகக் குரல் கொடுக்க வேண்டும், எதற்காகப் போராட வேண்டும் என்ற கருத்துகளை நாம் அங்கே சட்டமன்றத்தில் எடுத்து வைத்து, அங்கே வாதாட வேண்டும், பேச வேண்டும், யார் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்று அடுத்த நிமிடமே சிந்திக்கத் தொடங்கிய தலைவன் தான் தலைவர் கலைஞர் அவர்கள்.
அதனால், வெற்றிகளும் தோல்விகளும் நம்முடைய இயக்கத்திற்கு புதிதல்ல. இந்தத் தோல்வியைக் கண்டு மனம் தளரவோ, கண்ணீர் வடிக்கவோ அவசியமில்லை. ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், வீரியத்தோடும், தைரியத்தோடும், அடக்கத்தோடும், தெளிவோடும் பேசக்கூடிய எத்தனை பெண்களை கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை, நாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறோம். இதற்காக நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
பல திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் உருவாக்கித் தந்துள்ளார். அந்தத் திட்டங்கள் தொடருமா என்ற கவலை அனைவருக்கும் இருக்கிறது. அந்தக் கவலை நமக்கும் இருக்கிறது; வாக்களித்த மக்களுக்கும் இருக்கிறது. சிலர், ‘ஒரு ஓட்டுதானே’ என்று சொல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அது எப்படி என்று நினைத்து அவர்கள் வாக்களித்தார்கள் என்பது தெரியவில்லை.
முன்னாள் முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுமோ, இல்லையோ என்ற கவலையில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் விஜய் பதவியேற்ற நாளிலேயே என்ன சொன்னார்? ‘பணம் இல்லை’ என்றார். அதன்மூலம், அந்தத் திட்டங்கள் தொடருமா என்ற சந்தேகத்திற்கான அடித்தளத்தை முதலில் அவரே உருவாக்கிவிட்டார்.
தலைவர் கலைஞர் அடிக்கடி சொல்வார், ‘எது நடந்தாலும் என் மீதுதான் பழி போடுவார்கள்’ என்று. அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில் இந்த அரசு இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு நடைபெறும் குற்றங்களை பற்றி கேட்டால், அதற்க்கு திமுக ஆட்சிதான் காரணம் என்று சொல்கிறார்கள், எப்படி? மக்கள் நலத் திட்டங்கள் தொடருமா என்று கேட்டால், திமுக ஆட்சியில் நிதிநிலை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டு சென்று விட்டார்கள் என்று பதில் சொல்கிறார்கள். நான்கு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது என்று கேட்டால், ‘பியூஸை எடுத்து சென்று விடுகிறார்கள்’ என்று அமைச்சர் விளக்கம் அளிக்கிறார்.
இப்படி, எதற்கு எடுத்தாலும் முந்தைய திமுக அரசை குறை சொல்வது தான், அவர்களுக்கு தெரிந்த பதில். எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கோ, அதைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பதற்கோ அவர்கள் தயாராக இல்லை.
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பு, பத்து ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சி எவ்வாறு நடைபெற்றது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை காப்பாற்ற தவறிய ஒரு ஆட்சி நடைபெற்றது.
நமது தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பே, தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பது உறுதியானவுடன் அதிகாரிகளை அழைத்து, கொரோனா பேரிடரிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்று ஆலோசித்து செயல்படத் தொடங்கினார். மக்களின் நலனையே முதன்மையாகக் கருதி சிந்தித்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. ஆனால் இன்று, ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகும், பொறுப்பு இல்லாமல் பேசிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு சூழலை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
‘சிங்கப்பெண் படை’ என்று இருந்த திட்டத்தை, ‘காப்பி-பேஸ்ட்’ செய்து, ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள். என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. முதன்முதலாக பெண்களை காவல் துறைக்கு கொண்டுவந்து தலைவர் கலைஞர். பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு தனியான பிரிவை உருவாக்கியது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியாகும்
இன்றைக்கு புதிதாக ஒரு சீருடையை வழங்கினால், புதிய திட்டமாக மாறிவிடுமா? இந்த ஆட்சியில், தயவுசெய்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள். எதை செய்ய முடியுமோ, அதை மட்டும் தேர்தல் அறிக்கையாக கொடுங்கள் என்று முன்னாள் முதலமைச்சர் சொன்னார். எதை செய்கிறோம், அதை செய்கிறோம் என்று மக்களை ஏமாற்றாதீர்கள். நாம் நினைத்து இருந்தால், எதை வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம். ஆனால், செய்ய முடியுமோ அதை மட்டுமே தேர்தல் அறிக்கையில் இருந்தது.
இன்றைக்கு ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள், எதையெதையோ சொன்னார்கள். 6 சிலிண்டர் தருகிறோம் என்று. தற்போது ஒரு சிலிண்டர் கிடைப்பது கனவாக மாறிக்கொண்டு இருக்கும் சூழலில் 6 சிலிண்டர் வரும், ஆனா!
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, மாநிலத்தின் நிதிநிலை குறித்து திமுக அமைச்சர்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ஆனால், தேர்தல் நேரத்தில் நினைத்ததையெல்லாம் வாக்குறுதியாகக் கூறிவிட்டு, தேர்தல் முடிந்தவுடன், நிதி இல்லை என்று சொல்கிறார்கள். நாம் ஆட்சி பொறுப்போக்கு வந்தபோது, தமிழ்நாடு நிதிமிகை மாநிலமாக இல்லை.
ஒரு வளர்ந்து வரும் மாநிலம், மக்களுக்காகச் செலவிட நிச்சயமாகக் கடன் வாங்கும். இது அடிப்படை பொருளாதாரம். கடன் வாங்குவதற்கு ஒரு வரம்பு உள்ளது; அந்த வரம்பைத் தாண்டக்கூடாது. தமிழ்நாடு அந்த வரம்பை ஒருபோதும் தாண்டவில்லை. உங்களைவிட நூறு மடங்கு ஒன்றிய அரசை எதிர்த்தவர்கள் நாங்கள்; இப்போதும் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் கொடுக்கவில்லை.
ஆனாலும், தமிழ் மக்களைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்கு தேவையான திட்டங்களை வழங்குவதிலும் தமிழ்நாடு முன்மாதிரியாக இருந்தது. நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து, இங்குள்ள திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதை கற்றுக்கொண்டு சென்ற நிலை இருந்தது.
இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடுகள் எங்கே செல்கின்றன என்று தெரியவில்லை. அவை பிற மாநிலங்களுக்குச் செல்கின்றன. ஆனால், தமிழ்நாட்டிற்கு பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைக் கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, வருத்தத்தோடு இதைச் சொல்கிறேன். என்னுடைய தூத்துக்குடி தொகுதியில் ஒரு கப்பல் கட்டும் தொழிற்சாலை வர வேண்டியிருந்தது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியிருந்தது. ஆனால், தற்போது அந்தத் திட்டம் இல்லை.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடிய ஒரு தொழிற்சாலை அது. உப்பளங்களில் கடினமாக உழைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஒரு மாற்றுப் பாதையையும், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்கித் தரக்கூடிய வாய்ப்பாக அது இருந்தது. ஆனால், அந்தத் தொழிற்சாலை இன்று இல்லை. இதுதான் மாற்றமா?
இந்த மாற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை. திராவிட முன்னேற்றக் கழகம் தனது கடமையைச் செய்வதில் என்றுமே தவறியதில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோமா இல்லையா என்பது குறித்து திமுகவினருக்கு கவலையே கிடையாது.
தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளுக்கு, மக்களைப் பாதுகாப்பதுதான் நம்முடைய கடமை. அதனால், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், தொடர்ந்து மக்களுக்காகப் பாடுபடுவோம்; மக்களுக்காகப் போராடுவோம். மக்கள் எந்த முடிவை எடுத்தாலும் அது குறித்து எங்களுக்கு வருத்தமில்லை. ஆனால், நம்முடைய முடிவு ஒன்றுதான். தமிழ்நாட்டு மக்களுக்காக எப்போதும் பணியாற்றுவோம் என்பதுதான் என்று பேசினார்.
இந்த நிகழ்வில், சென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., திமுக மாணவர் அணி செயலாளர் ஈரோடு.வீரமணி, சென்னை மாநகராட்சி மேயரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பிரியா ராஜன், திமுக செய்தி தொடர்புக்குழு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா, சென்னை கிழக்கு மாவட்டக் மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ராஜேஸ்வரி ஸ்ரீதர், திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.