கலைக்கப்படுமா TRB ?
அரசு கல்லூரி ஆசிரியர் கனவை சிதைத்த TRB !
தமிழகத்தில் அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட தேர்வில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் மாபெரும் மோசடி அரங்கேறியிருப்பதாக TRB எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
தமிழகத்தில் 188 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 8,000-க்கும் அதிகமான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், 48 பாடப்பிரிவுகளில் 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 16.10.2025 அன்று வெளியாகி, இதனை தொடர்ந்து 27.12.2025 அன்று நடைபெற்ற தேர்வில், தமிழகம் முழுவதிலும் 42,064 மாணவர்கள் பங்கேற்று தேர்வை எழுதினர். இதற்கான முடிவுகள் முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் 5 பாடங்களுக்கு வெளியிடப்பட்டு அதனடிப்படையில் பணியிடங்களும் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், எஞ்சியுள்ள 43 பாடப்பிரிவுகளுக்கான முடிவுகள் ஜூன் 25 அன்றும் வெளியான நிலையில்தான் சர்ச்சையாகியிருக்கிறது.
சிக்கலும் சர்ச்சையும் கொண்ட தேர்வு முறை :
இரண்டு தாள்களுக்கான எழுத்துத் தேர்வு, முந்தைய பணி அனுபவம், நேர்முகத்தேர்வு ஆகிய மூன்று கட்டங்களை உள்ளடக்கி 230 மதிப்பெண்களுக்கான தேர்வு முறையை கொண்டது. தாள்-1 இல் எந்த பிரச்சினையும் இல்லை. தாள்-2 ஐ பொருத்தமட்டில், ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் வழங்குவதில்தான் பெரும் மோசடியே அரங்கேறியிருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
உதாரணமாக, தாள்-1 இல் 150 மதிப்பெண்களுக்கு 100-க்கும் அதிகமான மதிப்பெண்களை எடுத்த மாணவர்கள், அதே நாளின் பிற்பகலில் நடைபெற்ற தாள்-2 க்கான தேர்வில் வெறும் ஒற்றை இலக்க எண்களில் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோல, தாள்-1 இல்100 மதிப்பெண்களுக்கும் கீழாக எடுத்த மாணவர்கள், தாள்-2 இல் இரட்டை இலக்கங்களில் மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக, தாள்-1 இல் 111 மதிப்பெண்களை பெற்ற மாணவி ஒருவர், தாள்-2 இல் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருக்கிறார். 61 வகை பாடப்பிரிவுகளுக்கும் இதுதான் கதி.
ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண் சர்ச்சை :
TRB-யின் 25 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத புதிய நடைமுறையாக, விரிவான விடையளிக்கும் பகுதி சேர்க்கப்பட்டதே சர்ச்சைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. அதுவும், TNPSC தேர்வு வாரியம் கடைபிடிக்கும் வழிமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக நிர்ணயித்திருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது. அவ்வாறு, 50 மதிப்பெண்களை கொண்ட கேள்வியை எவ்வாறு மதிப்பிடுவது என்பது குறித்த எந்தவிதமான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, உதவிபேராசிரியருக்கான புதிய பணிநியமனங்களே இல்லாத நிலையில், இத்தனை ஆண்டுகாலம் தவ வாழ்வு போல வாழ்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு படித்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் அரசு ஆசிரியர் பணி எனும் கனவை சிதைத்திருக்கிறது, இந்த விவகாரம்.
’கம்பெனி’ பொறுப்பில்லை !
கல்லூரி ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெயந்தியிடம், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டதற்கு, நடந்த குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று உரிய பதில் அளிப்பதற்கா மாறாக, பொறுப்பை தட்டிக்கழிக்கும் விதமாக அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களும் அதனையடுத்து அரசு கல்லூரி பேராசிரியர்களும்தான் அடுத்தடுத்து திருத்தியிருக்கிறார்கள். விடைத்தாள்களை திருத்திய பேராசிரியர்களிடம்தான் பிரச்சினை; எங்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை என்பதாக பதில் அளித்திருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது.
TRB கலைக்க வேண்டும் !
ஆசிரியர் தேர்வு வாரியம் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2017 இல் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான பணி நியமனத்துக்காக நடத்தப்பட்ட தேர்வில் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் மாபெரும் மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் 156 பேர் கைதாகினர். இதில் தொடர்புடைய இடைத்தரகர்களின் வீடுகளில் சமீபத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டை நடத்தியிருந்தார்கள்.
இன்னும் சொல்லப்போனால், இந்த அறிவிப்புக்கு முன்னர் கடந்த 14.03.2024 இல் ஒரு அறிவிப்பு வெளியாகி, அது ரத்து செய்யப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்ற தேர்விலும்கூட, சில தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக, நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் சர்ச்சையானது. முதற்கட்டமாக வெளியான 5 பாடப்பிரிவுகளுக்கான முடிவின்படி பணிநியமனம் பெற்ற 5 பேரில் 2 பேரின் அனுபவ மதிப்பெண்களிலும் திருத்தத்தை செய்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.
ஆக, தொடர்ந்து இதுபோல சர்ச்சையில் சிக்கி வருவதன் மூலம் முற்றிலும் நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தின் மீதும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையுடன்கூடவே, ஆசிரியர் தேர்வு வாரியத்தையே கலைத்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி.யிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்; அல்லது டி.என்.பி.எஸ்.சி. போல, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தலைமையாக கொண்ட அமைப்பாக மாற்றம் பெற வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
இரகசிய காப்பு மரபை மீறிய TRB !
பொதுவில் இதுபோன்று பொதுத்தேர்வு தொடர்பான, வினாத்தாள் தயாரிப்பு பணி, விடைத்தாள்கள் திருத்தும் பணி, முடிவுகளை தொகுக்கும் பணிகளில் ஈடுபடும் பேராசிரியர்களின் தனிப்பட்ட விவரங்களை இரகசியகாப்பு முறையில் பராமரிக்கப்படுவதுதான் மரபு.
ஆனால், இதுநாள் வரையிலான அந்த நடைமுறைகளை தூக்கி கடாசிவிட்டு, தேர்வு முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு போன்ற பணிகளுக்கு தொடர்புடைய பாடங்களை சேர்ந்த 30 மூத்த இணைப் பேராசிரியர்களை, டி.ஆர்.பி.க்கு இடமாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்குநர் சுந்தரவல்லி வெளிப்படையாக உத்தரவை பிறப்பித்திருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது.
அரசு கல்லூரி ஆசிரியர் கனவை சிதைத்த TRB !
– அங்குசம் புலனாய்வுக்குழு







Comments are closed, but trackbacks and pingbacks are open.