மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற வாய்ப்பே இல்லாத அரசியல் கட்சி எதற்கு?
இந்திய அரசியலும் இசுலாமியர்களும் ! செய்ததும் செய்யத்தவறியதும் ! -பாகம் – 07
தமிழ்நாட்டில் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் நகர்வுகள் குறித்து கடந்த தொடரில் பார்த்தோம். இசுலாமியர்களாக அரசியல் தளத்தில் உடனடியாக செய்யவேண்டியது என்ன என்பது குறித்து இந்த தொடரில் பார்ப்போம்.
இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது தேசியக்கட்சி அங்கீகாரத்திற்கு என சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அவையாவன,
- குறைந்தது 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சியாகத் தகுதி பெறவேண்டும்.
- ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் 2% எம்பிக்ககளை அதாவது 11 எம்பிக்களை குறைந்தது மூன்று மாநிலங்களில் இருந்து பெறவேண்டும்.
- ஒப்பீட்டு அளவில் குறைந்தது நான்கு மாநிலங்களில் பதிவான வாக்குகளில் (சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற தேர்தலில்) 6% வாக்குகளும் குறைந்தது இரண்டு வேறுவேறு மாநிலங்களில் இருந்து 4 எம்பிக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கவேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆனது எளிதாக எட்டிவிடலாம். இறைவன் நாடினால்.
இதில் ஒரு சுவராசியம் என்னவெனில் மேற்கண்ட தேசியக்கட்சி அங்கீகாரத்திற்கு தேவையான எந்த ஒரு நிபந்தனையையும் பூர்த்தி செய்யாத நிலையிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை ஏன் தேசியக்கட்சி வகைப்பாட்டில் வைத்துள்ளது என இந்தியத் தேர்தல் ஆணையம்தான் விளக்கவேண்டும்.
எனவே, நாம் மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற வாய்ப்பே இல்லாத அரசியல் கட்சியை வைத்துக்கொண்டு அரசியல் என்று நமது வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும், உழைப்பையும் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதவளத்தையும் (HR Value) இதுவரை இழந்தது போதும். மேலும் ஒவ்வொருவரும் சிறுசிறு அரசியல் கட்சிகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் அவர்களின் அரசியல் அங்கீகாரம் மற்றும் பிரதிநிதித்துவத்தையும் பலவீனப்படுத்துகிறோம் என்பதே கசக்கும் உண்மை. சற்று தொலைநோக்குடன் சிந்திப்போம். சில தியாகங்களைச் செய்வோம். நமது உழைப்பும் தியாகமும் நமக்கு பயன்படவில்லை என்றாலும் அடுத்த தலைமுறையின் அரசியல் வாழ்க்கையை எளிதாக்குவோம்.
ஒருவர்மீது ஒருவர் கோபித்துக்கொண்டு தனி அணியாகவோ, தனிக்கட்சியாகவோ செயல்படுவதைத் தவிர்ப்போம். அனைவரும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்குடன் இணைந்து பயணிப்போம். இது நமக்கும் நமது எதிர்கால இஸ்லாமிய சந்ததிக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய உபகாரமாகும். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஏன் தேசியஅளவில் செல்லவேண்டும்? அது இந்திய முஸ்லிம்களுக்கு, குறிப்பாக உத்திரப்பிரதேசம், பீகார், வெஸ்ட் பெங்கால், மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் முஸ்லிம்களுக்கு எந்த வகையில் முக்கியம் என்பதை இப்பதிவில் உள்ளபடியே நியாயமான கோணத்துடனும் யாரும் கற்பனை செய்திராத ஆதாரப்பூர்வமான புள்ளிவிபரங்கள் அடிப்படையுடனும் அடுத்து பதிவிடுகிறேன்.
தயவுசெய்து இப்பதிவை உணர்வுப்பூர்வமாக அணுகவேண்டாம். நம்முடைய எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை மற்றும் “ஈகோ”தான் நம்முடைய எதிரிகளின் பலம் ஆகிறது. ஆகவே உணர்வை விடுத்து, எதார்த்தத்துடன், நடைமுறை சாத்தியத்துடன், வரலாற்றுடன், புள்ளியியலுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும். மாற்றுக்கருத்துக்களோ கோணமோ இருந்தால் தாராளமாக பதிவிடவும். இறைவன் அருளால் இணைந்து பயணப்பட முயல்வோம்.
உடனடியாக நாம் செய்யவேண்டியது?
தற்போதைய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் நியாயமான உணர்வோடு பயணிக்கும் திமுக மற்றும் தோழமைக்கட்சிகளுக்கு நமது வாக்குகளைச் செலுத்துவோம். அதுமட்டுமன்றி தேர்தல் முடிந்த பின்னர் மிகக்கடின உழைப்பை தொடரவேண்டியுள்ளது. எப்படி வாய்ப்பு கிடைக்கும் அல்லது எப்படி வாய்ப்பை உருவாக்குவது? எப்படி 24 மணி நேரமும் முஸ்லிம்களை பதட்டத்துடனேயே வைத்திருக்கலாம்? என நமது எதிரிகள் சிந்திந்துக்கொண்டுள்ள வேளையில் இஸ்லாமிய சிந்தனையோ, இஸ்லாத்தின் நிரந்தர வாழ்க்கையான மறுமையின் சிந்தனையோ, ஏன் நாம் சார்ந்துள்ள தமிழ்நாடு மற்றும் இதன் எதிர்காலம் பற்றியோ, நமது அடுத்த தலைமுறை பற்றிய கவலையோ அக்கறையோ சிறிதும் இன்றி நமது சமுதாய மக்கள், குறிப்பாக பெண்கள் ஜோம்பி போல சிந்தனைத்திறன் மழுங்கி கூத்தாடி பின்னால் சென்று கூத்தடிக்கின்றனர். நவூதுபில்லாஹ். இவர்களுக்கு எல்லாம் “தஸ்கீல்” செய்வது நம் அனைவரின் மீது பொறுப்பாகும்.
எல்லாம் வல்ல இறைவனே அனைத்திற்கு பொறுப்பானவன் மற்றும் போதுமானவன்!
அல்ஹம்து லில்லாஹ்.
– H.உபைதுல்லாஹ்.
தகவல் உதவி: எழுத்தாளர் தாழை மதியவன்.
(முற்றும்)







Comments are closed, but trackbacks and pingbacks are open.