கருப்பையில் கோளாறு: கத்தியில்லாமல் கச்சிதமாக முடித்த திருச்சி ஜி.எச். மருத்துவர்கள்!
இரு பக்க கருப்பை தமனி சிரை பிறழ் உருவாக்கத்தால் (arteriovenous malformation) மீண்டும் மீண்டும் ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான கருப்பை இரத்தப்போக்கு தொந்தரவுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 34 வயதுப் பெண் ஒருவருக்கு திருச்சி மகாத்மா காந்தி காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை இல்லாமலேயே கருப்பை தமனி துகள் அடைப்பை குணப்படுத்தியிருக்கிறார்கள்.
இதற்கு முன்னர் பல்வேறு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் பலனற்று போன நிலையில் தான் இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.
திருச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு மற்றும் கதிரியக்கத் துறை சார்ந்த மருத்துவர்கள் குழுவினர் செல்டிங்கர் நுட்பத்தின் மூலம் இருபக்க துடை தமனி அணுகலைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட கூபக எதிர்பதய நாள பதிவு (பெல்விக் ஆஞ்சியோகிராபி) பரிசோதனையை மேற்கொண்டனர்.
இந்த பரிசோதனையில் இரு பக்க கருப்பை தமனிகளாலும் இரத்த வழங்கல் பெறும் arteriovenous malformation)-ஐ அடையாளம் கண்டது. மிகத் துல்லியமான வடிகுழாய் செருகல் மற்றும் அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட இருபக்க கருப்பை தமனி துகள்-அடைப்பு சிகிச்சை சிக்கல்கள் ஏதுமின்றி அந்த தமனி சிரை பிறழ் உருவாக்கத்தை முழுமையாக அடைத்தது. நோயாளி எந்தவித சிக்கலும் இன்றி குணமடைந்தார்.
இந்த சிகிச்சையில், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயமே, வழக்கமாக இதுபோன்ற நேர்வுகளில் கருப்பை முற்றிலும் அகற்றப்படும். ஆனால் அவ்வாறு கருப்பை நீக்கம் தவிர்க்கப்பட்டு, அவரது கருப்பையும் கருவுறுதல் திறனையும் பாதுகாத்து மெச்சத்தக்க மருத்துவ சாதனை புரிந்திருக்கிறார்கள், திருச்சி மகாத்மா காந்தி காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர்.
— அங்குசம் செய்தி பிரிவு







Comments are closed, but trackbacks and pingbacks are open.