எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி… TRB பரிதாபங்கள்
தமிழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய தேர்வும் அதன் முடிவுகளும் சர்ச்சையையும் பெரும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது.
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக தேர்வை நடத்தி விவகாரத்தில் சிக்கித்தவிக்கிறது, TRB. இப்படி ஒரு தேர்வு முறையை வடிவமைத்த அந்த அதிபுத்திசாலி யாராக இருக்கும் என்பதுதான், கனவுகளை தொலைத்து நிற்கும் தேர்வெழுதிய மாணவர்களின் புதிராக இருக்கிறது.
தமிழகத்திலுள்ள அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த டிச-27, 2025 இல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் கடந்த ஜூன்-25 அன்று வெளியானது. இந்த முடிவுகள்தான் தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. குறிப்பாக, தாள்-2 இல் விரிவான விடையளி என்ற பகுதியில் இடம்பெற்ற 5 கேள்விகளுள் ஒரு கேள்வியை தேர்வு செய்து எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கிறது.
இந்த பின்னணியில்தான், விடைத்தாள்களின் நகல்களை கேட்டு; மறுமதிப்பீடு வேண்டுமென்ற கோரிக்கையுடன்; தேர்வையை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் நீதிமன்றத்தில் வழக்குகள் அடுத்தடுத்து தொடுக்கப்பட்டிருக்கின்றன. எப்படியும் இந்தமுறை, பணிக்கு சென்றுவிடலாம் என்ற பாதுகாப்பான இடத்தில் இருக்கும் மாணவர்கள் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்ற கருத்தில் இருக்கிறார்கள். தேர்வை எழுதிய மாணவர்கள் இவ்வாறு பல்வேறு விதமான குழப்பங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், இதுவரையில் தேர்வை நடத்திய TRB தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மாறாக, கிசுகிசு பாணியிலான செய்திகள் மட்டுமே பரப்பப்பட்டு வருகின்றன.
TRB அளித்த விளக்கம் என்பதாக, ஜூலை-04 அன்று தினசரிகளில் செய்தி வெளியாகியிருக்கிறது. அதற்கு ஆதாரமாக பி.டி.எஃப். கோப்பு ஒன்று உலா வருகிறது. உண்மையில் அது ஒரு டிஜிட்டல் மொட்டை கடுதாசி. அதில் தேதியும் இல்லை, TRB தலைவரின் கையொப்பமும் இல்லை.
பிறந்த தேதியில் உள்ள எழுத்துப்பிழை மற்றும் பெயருக்கு பதிலாக எண் பதிவான இரண்டு விவகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அது எழுத்துப்பிழை அதுவும் விண்ணப்பதாராரே செய்த எழுத்துப்பிழை என்பதாக பழியை தேர்வர்கள் மீதே போட்டு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள். தேர்வை எழுதிய நாற்பதாயிரம் சொச்சம் மாணவர்கள் எழுப்பும் மையமான கேள்வி அதுவல்ல!
முதல் கேள்வியே, முன்னூறு வார்த்தைகளுக்கு, ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்பதாக நிர்ணயித்த அந்த அதிபுத்திசாலி யார்? என்பதுதான்.
அடுத்து, அப்படி 50 மதிப்பெண்களை எப்படி வழங்க வேண்டுமென்ற வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கிறதா? எதன் அடிப்படையில், 0 மதிப்பெண்ணையும் அதிகபட்சமாக 49 என்ற மதிப்பெண்களையும் வழங்கினீர்கள் என்பதுதான் துணைக்கேள்வி.
இன்னும் கொடுமையான விசயம், இந்த 5 கேள்விகளும் உதவி பேராசிரியர்களாக தேர்வாகி சென்று மாணவர்களுக்கு என்ன பாடத்தை நடத்தப் போகிறார்களோ அதிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகள் அல்ல அவை. மாறாக, இந்திய அரசியலமைப்பு, இந்தியப் பொருளாதாரம், நவீன இந்திய வரலாறு, தமிழ்நாட்டின் வரலாறு பொருளாதாரம், சுற்றுச்சூழல், மற்றும் சூழலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பாக கேட்கப்பட்டவை அந்த 5 கேள்விகள்.
TNPSC தேர்வுகளில் உள்ளதைப் போல, மாதிரி வினாத்தாள் முறை கிடையாது. என்ன மாதிரி கேள்வி வரும் என்பதும் மாணவர்களுக்கு தெரியாது. 50 மதிப்பெண்களை எப்படி மதிப்பிடுவார்கள் என்பதற்கான வரையறையும் கிடையாது. இதுதான் இங்கே பிரச்சினை.
சரி, அந்த 5 கேள்விகளும்கூட ஒரே மாதிரியாக இருந்தனவா என்றால் அதுவுமில்லை. முதல் இரண்டு கேள்விகள் ஒரே வாக்கியத்தில் முடிவடைகின்றன. மூன்றாவது கேள்வி தமிழக அரசின் 5 திட்டங்களை பட்டியலிட்டு அதன் தாக்கங்கள் குறித்து எழுத சொல்லியிருக்கிறார்கள். 5 திட்டங்களுக்கும் தனித்தனியே 10 மதிப்பெண்கள். நான்காவது கேள்வியும் ஐந்தாவது கேள்வியும் மூன்று துணைக்கேள்விகளாக பிரித்து அவற்றுக்கு முறையே 20, 15, 15 என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். கேள்வியிலேயே சமச்சீர் இல்லை. ஒரே கேள்விக்கு 50 மதிப்பெண்கள் என்று சொல்லிவிட்டு, 3, 5 துணைக்கேள்விகள் எதற்கு? அதற்கு தனிமதிப்பெண்கள் எதற்கு? இது எந்த நாட்டின் மாதிரி? என்பதுதான் இங்கே மாணவர்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது.
அடுத்து, இதில் அதிகபட்ச மதிப்பெண்களாக 49 என்று எப்படி மதிப்பிட்டார்கள்? ஒவ்வொரு தேர்வுத்தாளையும் இரண்டு மதிப்பீட்டாளர்கள் திருத்தி, அதில் வித்தியாச மதிப்பெண் 5-க்கு மேல் இருந்தால், மூன்றாம் மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கு செல்கிறது. இதன்படி பார்த்தால், முதல் மதிப்பீட்டாளர் 50 மதிப்பெண்ணும்; அடுத்த மதிப்பீட்டாளர் 48 மதிப்பெண்ணும் வழங்கியிருந்தால் மட்டுமே இவ்விரண்டின் சராசரி மதிப்பெண் 49 என்பதாக இருக்க முடியும். போட்டித்தேர்வுக்கான எழுத்துத்தேர்வில் செண்டம் மதிப்பெண் சாத்தியமா? அதுபோலவே, எப்படி சொல்லி வைத்தாற்போல இரண்டு மதிப்பீட்டாளர்களும் 0 மதிப்பெண் வழங்க முடியும்? என்பதெல்லாம் புரியாத புதிராகவும் விடை காண முடியாம மர்மமாகவே நீடிக்கிறது.
இந்த பின்னணியில் இருந்துதான், தேர்வை எழுதிய மாணவர்களுக்கு மதிப்பீட்டாளர்கள் வழங்கிய மதிப்பெண்களை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை முன் எழுந்திருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு கேள்வியையும் எத்தனை மாணவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்? கேள்வி வாரியாக வழங்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் எத்தனை? அதிகபட்ச மதிப்பெண்கள் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது? அதிலும் குறிப்பாக, 40-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் எத்தனை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது? அதுவும் கேள்வி வாரியாக எந்தெந்த கேள்விகளுக்கு? என்ற விவரங்களை கொண்ட முழுமையான பட்டியலை வெளியிட வேண்டும் என்பதுதான் தேர்வை எழுதிய மாணவர்களின் கோரிக்கையாக முன் எழுந்திருக்கிறது.
விடைத்தாள்களை எந்த பேராசிரியர் திருத்தினார் என்று பேராசிரியர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்கவில்லை. மாறாக, தேர்வு முடிவுகளைத்தான் சற்று விரிவாக அவர்கள் வெளியிட கோரிக்கை வைக்கிறார்கள்.
முதல்மரியாதை திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தைப்போல, “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி” என்பதாக, TRB யின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள், பரிதவிப்புக்குள்ளான மாணவர்கள்!
– அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.